செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

‘தில்’ கமல் வெல்வாரா?!?!

சட்டை கிழித்துக் கொள்ள மாட்டேன்! மு ...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கும் நிலையில், இது குறித்துத் தன் கட்சித் தொண்டர்களுடன் கலந்துரையாடுகையில்.....

“நீங்கள் எம்மதம் சார்ந்தவராகவும் இருக்கலாம்; எந்தவொரு கடவுளையும் தொழலாம். ஆனால், உங்களுடன் இணைந்து வழிபாடு நிகழ்த்த என்னை அழைக்காதீர்கள். ஏனென்றால் நான் எந்தவொரு கடவுளையும் வழிபடுபவன் அல்ல. நான் பகுத்தறிவாளன்” https://tamil.asianetnews.com/politics/kamal-haasan-warns-makkal-needhi-mayyam-executives-qf57hj என்று  ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

தான் நடுவணரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பவன் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கட்சியைத் தொடங்கியதோடு, வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் தயார் நிலையில் உள்ளார்.

ஓர் அரசியல்வாதிக்குரிய தலையாய தகுதிகளில் வாக்களிக்கவிருக்கும் மக்களின் விருப்பு வெறுப்பை மிகச் சரியாகக் கணிப்பதும் ஒன்றாகும். அவ்வாறு கணித்திருந்தால், நம் மக்களில் பெரும்பாலோர் கடவுள் பக்தி உள்ளவர்கள் என்பதையும் அவர் நிச்சயமாக அறிந்தே இருப்பார். இருப்பினும், அவருக்கு ‘நான் கடவுள் மறுப்பாளன்’ என்று நாடறியப் பிரகடனப்படுத்தும் துணிவு பிறந்தது எப்படி?

‘ஆளப்போகிறவரால் தங்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் விளையும் என்றுதான் மக்கள் யோசிக்கிறார்களே தவிர, அவர் ஆத்திகரா, நாத்திகரா என்பது பற்றிக் கவலைப்படுவதே இல்லை’ என்று நம்புவது காரணமாக இருத்தல்கூடும்.

அவர் நம்பிக்கை எதுவாகவோ இருக்கட்டும், முதலமைச்சர் ஆகும் வாய்ப்பை அவர் பெற்றால் அது வரவேற்கத்தக்கதா?

‘என் வாழ்க்கையில் எஞ்சியுள்ள நாட்களில் மக்கள் நலனுக்காகப் பணியாற்ற வந்துள்ளேன்’ என்று அவர் சொல்வதைக் கருத்தில் கொண்டால் வரவேற்கத்தக்கதே.

பிராமண ஜாதியில் பிறந்த ஒருவர் கடவுள் மறுப்பு வாதம் பேசுவது கற்பனை செய்யக்கூட இயலாத ஒன்று[மறைந்த பகுத்தறிவாளரும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வ. ரா. நினைவுகூரத்தக்கவர்].

கமல் ‘கடவுள் மறுப்பு’ குறித்துப் பேசுகிறார்; உறுதிபடப் பேசுகிறார்; வெளிப்படையாகப் பேசுகிறார்[இதெல்லாம் பதவியைக் கைப்பற்றுவதற்கான தந்திர உத்தி என்று எவரும் முணுமுணுக்கத் தேவையில்லை. பதவி ஆசை எனில், நம் மக்களின் கடவுள் நம்பிக்கையை மனதில் கொண்டு, ஆகச் சிறந்த ஒரு பக்திமானாக வேடம் புனைந்திருக்கலாம்].

இந்நாள்வரை, வெளிப்படையாகத் தம்மைக் கடவுள் மறுப்பாளன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அரசியல்வாதி எவரும் இங்கு இருந்ததில்லை; இப்போதும் இல்லை[பெரியார் சமூகச் சீர்திருத்தவாதி] என்பது அறியத்தக்கது[பெரும்பான்மையான கடவுள் நம்பிக்கையாளர்களின் வாக்கை{ஓட்டு} இழந்துவிடக் கூடாது என்னும் அச்சம் காரணம்].

இவ்வகையில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சித் தலைவர் கமல்ஹாசனின் துணிவு பாராட்டுதலுக்குரியது.

தேர்தல் களத்தில் வெல்வாரா, தோற்பாரா; முதல்வரானால் நல்லது செய்வாரா, அல்லவா என்னும் சந்தேகங்கள் ஒருபுறம் இருப்பினும், தலை நிமிர்ந்து நின்று, ‘நான் கடவுளை வழிபடுபவன் அல்ல; ஒரு பகுத்தறிவாளன்’ என்று அறிவித்திருக்கிறாரே, அந்த அறிவிப்பு தமிழக அரசியல் வரலாற்றில் நிலையான ஓர் இடத்தைப் பெற்றிடும் என்பது உறுதி.
=====================================================================