இருப்பினும், கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் தடுப்பூசிகள் அனைத்துமே இன்னும் மருத்துவப் பரிசோதனைகளில்தான் உள்ளன. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டுபிடித்த ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கு 3 ஆம் கட்டப் பரிசோதனை தொடங்க உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.
மூன்றாவது கட்டப் பரிசோதனை 28,500 பேரிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 10 மாநிலங்களில் டெல்லி, மும்பை, பாட்னா, லக்னோ உள்ளிட்ட 19 நகரங்களில் பரிசோதனை நடைபெற உள்ளது. இதுதவிர ஜைடெஸ் கெடில்லா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்போது இரண்டாம் கட்டப் பரிசோதனையிலும், சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனக்கா மருந்து 2 மற்றும் 3ஆம் கட்டப் பரிசோதனையிலும் உள்ளன .
விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கோவேக்சின் வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ளது என பாரத்பயோடெக் நிறுவனம் அண்மையில் கூறியிருந்தது நினைவிருக்கலாம்[https://www.dailythanthi.com/News/India/2020/10/23074331/Covaxin-Bharat-Biotechs-Coronavirus-Vaccine-Cleared.vpf].
இது அண்மைச் செய்தி[பதிவு: அக்டோபர் 23, 2020 07:43 AM]
இச்செய்தியில், கவனத்தில் கொள்ளத் தக்கவையாகச் சில அம்சங்க்கள் உள்ளன.
1. மூன்றாவது கட்டப் பரிசோதனை 28500 பேரிடம் நடத்தப்படவுள்ளது. 28500 என்பது ஒரு நிலை. இந்தச் சோதனை எதிர்பார்க்கிற பலனைத் தந்தால் மேலும் பல ஆயிரம் பேரிடம் இந்தப் பரிசோதனையைத் தொடர வேண்டியிருக்கலாம்.
எதிர்பார்க்கிற பலன் கிடைக்காவிட்டால், தடுப்பூசி குறித்த ஆய்வைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். அது எப்போது முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாது.
2. இந்தத் தடுப்பூசியை விலங்குகளுக்குச் செலுத்திப் பரிசோதித்ததில் வலுவான எதிர்ப்புச் சக்தி உருவானதாகச் சொல்லப்படுகிறது. மனிதர்களுக்குச் செலுத்தும் போதும் அதே அளவுக்கு எதிர்ப்புச் சக்தி உருவாக வேண்டும். இல்லையெனில் ஆய்வு தொடரும்.
3. பரிசோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. நம்பிக்கை பொய்த்துப்போகவும் வாய்ப்புள்ளது[மெய்ப்பட வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய ஆசையும்].
உண்மை நிலை இதுவாக இருக்க, பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், கொரோனா தடுப்பு மருந்து வந்த பிறகு அனைவருக்குமே இலவசமாக அதைப் போடுவோம் என்று ஒரு வாக்குறுதியைக் சேர்த்துள்ளது பா.ஜ.க.கட்சி.
பாஜக இதைச் செய்த சில நிமிடங்களிலேயே நம்ம முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலவசமாகவே தடுப்பு மருந்தைக் கொடுப்போம் என்று அறிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றின் அசுரத்தனமான தாக்குதலால் ஒட்டுமொத்த உலகமும் கதிகலங்கிப்போய், தீராத துயரத்தில் மூழ்கிக்கிடக்கிறது. தடுப்பூசி கண்டறியப்பட்டால், சாதி, மதம், இனம். மாநிலம், நாடு என்று வித்தியாசம் பாராட்டாமலும், பலனை எதிர்பாராமலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதே மனித மாண்பு.
கண்டுபிடிக்கப்படுகிற எந்தவொரு தடுப்பு மருந்தும் ஒட்டுமொத்த மனித குலத்துக்கானது என்பதை மறந்துவிட்டு, ஓட்டுக்காக இலவசமாக அதைத் தருவோம் என்று இந்த இரு கட்சிகளும் அறிவித்திருப்பது, இந்த மாநிலங்களைச் சாராத மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலாகும்.
பீகாரில் பாஜக வெல்லாமல் போனால் தடுப்பு மருந்தே கொடுக்காமல் நடுவணரசு மக்களை அலைய விட்டுவிடுமோ என்ற அதிர்ச்சியான சந்தேகமும் எழவே செய்கிறது..
கொரோனாவுக்கு எதிரான போரில், தேர்தலில் ஜெயித்தால் இலவசம், இல்லாவிட்டால் இல்லை என்பது போல் பேசுவது தவறானது; நாட்டின் நலனுக்குப் பெரும் கேடு விளைவிப்பதும் ஆகும்!
===============================================================