அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 25 ஆகஸ்ட், 2021

மனிதன் கடவுளின் செல்லப்பிள்ளையா?!?!


இந்த மண்ணுலகம் தோன்றி, சுமார் 1 பில்லியன்[100 கோடி] ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் தோற்றம் பெற்றதாக அறிவியலறிஞர்கள் சொல்கிறார்கள். 

மனித இனம் எப்போது தோன்றியது?

மனித இனம் எப்போது தோன்றியது என்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வால் இல்லாத மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்று அறிவியல் துறை கணித்திருக்கிறது.

  • சுமார் 4 மில்லியன்[40 லட்சம்] ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனச் சான்றுகள் ஜாவா தீவிலுள்ள சோலோ நதிக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய மூளையையும், கூர்மையான கண்களையும், திறமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது[விக்கிப்பீடியா].

மனிதனும் ஆறறிவும்:

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்தின் அறிவிலும் திறனிலும் ஒரு திடீர் உயர்வு தோன்றியது. கருவிகள் மேன்மேலும் செம்மையும் செயல்திறனும் பெற்றவையாக உருவாக்கப்பட்டன. வாழ்க்கை முறையில் சிரமம் குறைந்தது. ஓய்வு நேரம் கூடியது. வாய்மொழியாக இசையைப் பாடுவதும் கருவிகளைக் கொண்டு வாசிப்பதும் உருவானது. மக்கள்தொகை பெருகியது['இந்து தமிழ்'].

கடவுள் நம்பிக்கை:

'3000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்க்கையில் இந்தக் கடவுள் நம்பிக்கைகள் புகுத்தப்பட்டன' என்பது கடவுள் வழிபாடு குறித்த ஆய்வாளர்களில் ஒருசாரார் கணிப்பு.

கடவுள் நம்பிக்கை உருவான காலக்கட்டம் எது என்பது மிகத் துல்லியமாகக் கணிக்கப்படவில்லை. 

மேற்குறிப்பிடப்பட்டவை குறித்த கணிப்புகள் எவ்வாறிருப்பினும்..... 

கடவுள் இருக்கிறார் என்பதைத் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டு தலைப்புக்குச் செல்வோம்.

                               *  *  *

னிதன் மட்டுமல்லாது அனைத்து உயிர்களையும் தோற்றுவித்தவர் கடவுளே என்று காலங்காலமாக ஆன்மிகவாதிகள் வலியுறுத்திவருவது நாம் அறிந்ததே.

படைப்பாளன் என்ற வகையில், தம்மால் படைக்கப்பட்ட உயிர்களைப் பாதுகாத்து, மகிழ்வுடன் வாழச் செய்வது கடவுளின் கடமை. ஆனால், உயிர்கள் விசயத்தில் நடந்தது என்ன?

உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டு 100 கோடி ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்.....

ஒவோர் உயிரும், பிற உயிர்களை வதை செய்து கொன்று, தனக்கு உணவாக்கிக்கொள்வதைத் தொடர்ந்து அனுமதித்திருக்கிறார் கடவுள்.

இயற்கைச் சீற்றங்களுக்கு உயிர்கள் பலியாகும் கொடூர நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தவில்லை அவர்.

பருவ மாறுதல்களின்போது உண்ண உணவின்றிப் பல்வேறு உயிர்களும் பட்டினி கிடந்து மடிந்துபோகும் பரிதாப நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

உயிர்களைத் தாக்கித் துன்புறுத்தி, அவை வதைபட்டுச் சாவதற்குக் காரணமான, விதம் விதமான நோய்கள் உருவாவதையும் கண்டுகொள்ளவில்லை.

ஏறத்தாழ 100 கோடி ஆண்டுகள், தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள் துன்புற்று வாழ்ந்து மடிவதைக் கருணைக் கடல் என்று சொல்லப்படுகிற கடவுள் வேடிக்கை பார்த்திருக்கிறார்; செயலற்று முடங்கிக் கிடந்திருக்கிறார்.

100 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தன்னால் தோற்றுவிக்கப்பட்ட கோடி கோடி கோடியோ கோடிக்கணக்கான உயிரினங்களைக் காப்பாற்றத் தவறிய கடவுள், கோயிகள் கட்டி, விழாக்கள் எடுத்துக் கும்மாளமடித்துத் துதிபாடினால், வெறும் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் படைக்கப்பட்ட மனித இனத்தைக் காப்பாற்றுவார் என்று பேதை மனிதர்கள் நம்புகிறார்களே?

இவர்களென்ன கடவுளின் செல்லப்பிள்ளைகளா?!?!

====================================================================================