சனி, 19 பிப்ரவரி, 2022

பெண்ணினத்தை இழிவுபடுத்தும் 'யோனி பூஜை'!


ஒரு வலைத்தளத்தின்[quora.com] கேள்வி-பதில் பகுதியில், 'யோனியே பிரபஞ்சத்தின் ஆதாரச் சக்தி(சாக்த மரபில்)' என்பதான கருத்துப் பதிவைப் படிக்க நேர்ந்தது.

"உயிர்களின் இனவிருத்திக்கான ஆதாரச் சக்தி யோனியாக இருக்கலாம். பிரபஞ்சத்துக்கே இதுதான் ஆதாரமா?" என்று கேட்கத் தோன்றுகிறதா? வேண்டாம். மேலே படியுங்கள். 

'கேரள தேசத்துப் பகவதி கோவிலில் ஒரு மண்டலம் விரதமிருந்து கெட்டவார்த்தைகளால் தேவியை வாழ்த்தியபடி பல கிலோமீட்டர்கள் பயணித்துப் பிச்சை எடுத்துக் கோவிலுக்குச் செல்வது[யோனி பூஜை செய்ய] வழக்கமானது. இவையெல்லாம் தாந்திரீக முறை. ஒரு சாதாரண ஆச்சார இந்துவுக்கு இவையெல்லாம் ஆச்சரியமளிக்கும் விசயம். 

'கன்னி பூஜை', 'யோனி சேவை' ஆகியவை இந்து மதத் தரிசனத்தின் ஒரு பகுதியே' என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

கடவுள்களைக் கற்பித்ததோடு அல்லாமல், ஆணாகவும் பெண்ணாகவும் வகைப்படுத்தி, உயிர்களின் இனப்பெருக்கத்துக்கான ஆண்-பெண் உறுப்புகளை அவர்களுக்கும் பொருத்தி, அவற்றை வழிபடுவது இந்துமதத் தரிசனத்தின் ஒரு பகுதியே என்று மக்களை நம்பச் செய்தார்கள் இந்துமதவாதிகள்; இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த வழிபாடு இந்தப் புண்ணியப் பூமியில் இன்றளவும் தொடர்வது பகுத்தறிவுக்கு முற்றிலும் முரணானது ஆகும்.

பெண்ணினத்தைக் கேலி செய்யும் விதமாகச் செய்யப்படும் இந்த வழிபாட்டில் பெண்களும் பங்கு பெறுகிறார்கள் என்பதை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.

                                             *   *   *   *

தொடர்புடைய செய்தி:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காமாக்யா கோவிலில் சில குறிப்பிட்ட நாட்களுக்கு ஆண்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரின் நீல் பர்வதம் என்னும் மலை மீது அமைந்துள்ளது காமாக்யா ஆலயம். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதி வணங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் இருக்கும் அம்பிகைக்கு உருவம் கிடையாது. அதற்கு பதிலாக அங்குள்ள ஒரு பாறையில் பெண்ணுறுப்பான யோனியை உருவமாகச் செய்து அதனை வழிபட்டு வருகின்றனர்[இது தொடர்பான கதை வெகு சுவையானது].

===========================================================================================