கவிதை என்பது உணர்ச்சிக்கு முதலிடம் தருவது. அதன் கருப்பொருள் எதுவானாலும், எதுகை, மோனை, அடுக்குச் சொல், வர்ணனை என்றிவற்றுடன் வாசிப்பவரின் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் படைப்பது.
இந்த இரண்டையும் இரண்டறக் கலந்து எழுதுவதைத்தான் 'கவிதை நடை' என்கிறார்கள்.
இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா என்பார்கள். கலைஞர் மு. கருணாநிதியும், திராவிட இயக்கத்தை சார்ந்த வேறு சில எழுத்தாளர்களும் கவிதை நடையில் நாடகங்களும் கட்டுரைகளும் கதைகளும் எழுதித் தமிழ் வளர்த்தார்கள். 'தமிழ்த் தென்றல்' என்று போற்றப்பட்ட திரு.வி.கலியாணசுந்தரம் அவர்களும் கவிதை நடையைக் கையாண்டு, 'முருகன் அல்லது அழகு', 'பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை விளக்கம்' என்று பல நூல்கள் எழுதிப் புகழ் பெற்றார்.
இனி, கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு சுவையான, சுருக்கமான வரலாற்று நிகழ்வு:
#உலகமே வியந்தது அவனது வீரத்தையும் தீரத்தையும்.
ரோமாபுரியின் மூலைமுடுக்கெல்லாம் அந்த ரணகள மாவீரன் பெற்ற வெற்றிகள் குறித்தே பேசப்பட்டது.
ஒட்டுமொத்த உலகமும் புகழ் மகுடம் சூட்டி அவனைப் பாராட்டியது; புகழ்ந்து போற்றியது.
இந்தச் சாதனையாளன் ஒரு சாகசக்காரியுடன் நடந்த போரில் தோற்றான் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், அவன் தோற்றுத்தான் போனான்.
அவள் சேல் விழியாள்.
மாமன்னர்களையெல்லாம் தன் காலடியில் விழவைத்த மாயவித்தைக்காரி அவள்.
களத்தில் பகைவர்களைச் சிதறடித்த அவன் அவளின் சிருங்காரச் சிரிப்பில் சிதறிப்போனான்.
களத்தில் எதிரிகளைக் கலங்கடித்த அவனை அந்தக் காரிகை கட்டிலறையில் வீழ்த்தினாள்.
அவளை வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் வந்த அவன் அவளின் பாதம் பணிந்தான்.
அவளின் அழகை வியந்து சிந்து பாடினான்.
முடி தரித்த வேந்தர் பலரைப் பிடி சாம்பலாக்கிய அந்த வீரனை, வெற்றியன்றி என்றுமே தோல்வி கண்டிராத தீரனை, காந்தக் கண்களால் கவர்ந்திழுத்து மோகப் படுகுழியில் வீழ்த்தினாள் அந்த மோகனாங்கி.
வலிய முதலையிடம் சிக்குண்ட பெரிய மதயானை ஆனான் அவன்.
இது, ஒரு சாகசக்காரி, தன் சரச சல்லாபத்தால் ஒரு சரித்திர நாயகனை அடிமையாக்கிய கதை.
அவள், எகிப்து நாட்டு எழிலரசி கிளியோபாட்ரா! அவன் ரோம் நாட்டு மாவீரன் ஆண்டனி!
==========================================================================
மூலம்: 'அண்ணா சொன்ன குட்டிக்கதைகள் 100'; பாலாஜி பப்ளிகேசன்ஸ், சென்னை.
***நூலின் பக்கங்கள் பலவும் வெகுவாகச் சிதைந்துவிட்டன. கதையில் கணிசமான வரிகளை அனுமானத்தின் மூலம் சரிசெய்ய நேரிட்டது.
தங்களின் வருகைக்கு நன்றி.