திங்கள், 21 பிப்ரவரி, 2022

'சானிட்டரி நாப்கின்'... விரும்பத்தகாத விளைவுகள்!

[உறிபஞ்சு]
சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும், அதற்கான மாற்று வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய மருத்துவர்களின் கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

*சானிட்டரி நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுவதாகவும், மேலும் அதிலுள்ள ஒருவிதத் திரவம் நீண்டநேரத்துக்குப் பெண்களைச் சௌகரியமாக வைத்திருப்பதாகவும், இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றன. 

*ஒரு பஞ்சை எடுத்து நீரில் முக்கினால் அதனால் குறிப்பிட்ட அளவு நீரைத்தான் தக்கவைத்துக்கொள்ள முடியும். உண்மையிலேயே சானிட்டரி நாப்கின்களில் பருத்தி பயன்படுத்தப்பட்டால் அதனால் எட்டு மணிநேரத்துக்குத் தாக்குப்பிடிப்பது சாத்தியமில்லை. 

*நாடெங்கிலும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற சுகாதாரக் கழிவுகள் சரிவரக் கையாளப்படவில்லை என்ற நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்திவிட்டு நேரடியாகக் கழிவறைகளில் வீசுகின்றனர். இந்நிலையில், அவற்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோர் கடுமையான சுகாதாரச் சீர்கேட்டுக்கு உள்ளாகிறார்கள். 

*பிளாஸ்டிக் உள்ளிட்ட வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படும் இவற்றை எரிப்பதால் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.

*சானிட்டரி நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கறுப்படைதல் என்று பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி, மாதவிடாய்க் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

*மாதவிடாய்க் காலத்தின்போது பெண்கள் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு சானிட்டரி நேப்கின் வீதம் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல் இரவுவரை ஒரே நாப்கின்னைப் பயன்படுத்துவது மிக அதிகபட்சமாகப் புற்றுநோயைக்கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனினும், நடுத்தர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களால் ஒரு நாளைக்கு இத்தனை நாப்கின்களைப் பயன்படுத்துவெதெல்லாம் பொருளாதார ரீதியாகச் சாத்தியமே இல்லை.

எனவே,

*சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இந்தியா முழுவதும், தற்போது கிராமப்புறப் பகுதிகளிலும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வரும் துணி அடிப்படையிலான பாரம்பரிய முறையே சிறந்தது என்று சொல்லலாம். அதாவது, வீட்டிலேயே பருத்தியிலான இலகுவான துணிகளைக்கொண்டு தைக்கப்படும் உடையே சிறந்தது. அதை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்படும் துணியின் தரம், தைக்கப்படும் விதம், பயன்படுத்தும் முறை, வெந்நீரால் அலசுவது, வெயிலில் உலர வைப்பது போன்ற படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

*பொதுவாக, சிலிக்கானை அல்லது ரப்பரை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் கப்களை மாதவிடாய்க் காலத்தின்போது பொருத்திக்கொண்டால் அதில் ரத்தம் சேமிக்கப்படும். பிறகு பாதுகாப்பான வழியில் அதை வெளியேற்றிவிட்டு, தயாரிப்பாளரின் அறிவுரையின்படி சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.

*உறிபஞ்சுகளையும் பயன்படுத்தலாம். செல்லுலோஸ் அல்லது பருத்தியைக் கொண்டோ அல்லது இரண்டையும் சேர்த்தோ தயாரிக்கப்படும் இந்த மாதவிடாய் உறிபஞ்சுகள் ஒருவரது இரத்தம் வெளியேறும் அளவைப் பொருத்துப் பல வகையாகச் சந்தைகளில் கிடைக்கின்றன.

மாதவிடாய்க் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் உறிபஞ்சுகள் உட்கிரகித்துகொள்வதால், பெண்களால் எப்போதும் போல இயல்பாகச் செயல்படுவது, நீச்சலடிப்பது, குளிப்பது போன்றவற்றை இதை அணிந்துகொண்டே செய்ய முடியுமென்பது இவற்றின் சிறப்பம்சமாகக் கூறப்படுகிறது.

*இவை தவிர, அதிகம் பிரபலமில்லாத மாதவிடாய்க் கால உள்ளாடை(Period Pants), நீண்டகாலம் பயன்படுத்தக்கூடிய பருத்தியிலான பேடுகள் போன்றவையும் சந்தைகளில் கிடைக்கின்றன என்பது அறியத்தக்கனவாகும்.

==========================================================================

இது குறித்து இன்னும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புவோர் கீழ்க்காணும் தளங்களுக்குச் சென்றிடுக.

https://www.bbc.com/tamil/science-46819780

https://www.dinamani.com/health/health-news/2019/jan/17/dangers-of-sanitary-napkins-3078155.html