அன்று, சந்திர மௌலீஸ்வர ஆராதனையில் அவர் ஈடுபட்டிருந்தபோது ஒரு பக்தர் வேர்க்க விறுவிறுக்கக் கடும் பதற்றத்துடன் வந்தார்; பெரியவாவைப் பார்க்கணும்னு துடிச்சார்.
“என் சொந்தக்காரருக்கு உடம்பு முடியல. டாக்டருங்க நேரம் குறிச்சிட்டாங்க. அவர் பிழைக்கணும்னா மகா... பெரியவாவைப் போய்ப் பாருன்னு சொன்னாங்க. நான் ஓடியாந்தேன்” என்றார் அவர்.
அங்குக் கூடியிருந்த பக்தக்கோடிகள், இந்த ஆராதனையின்போது பெரியவா யாருடனும் பேசமாட்டார்[சந்திர மௌலீஸ்வரர் கோவிச்சுக்குவார்?] என்று சொல்லி அந்தப் பக்தரைத் தடுத்துவிட்டார்கள்.
பக்தர் தவியாய்த் தவித்துக்கொண்டிருக்க, திடீர்னு பெரியவா ஒரு சொடக்குப் போட்டுக் கூப்பிட்டார். எதுவுமே பேசாம, பூஜை செய்துகொண்டே, “த்ரியம்பகம் யஜா மஹே” என்று மூன்று முறை சொல்லி அவரைப் போகும்படி சைகை செய்தார்.
அந்தப் பக்திமானும் அங்கிருந்து ஊர் திரும்பினார்; சாகக் கிடந்த உறவினரைப் பார்த்தார்.
ஓர் அதிசயம் அங்கே நிகழ்ந்திருந்தது. அதாவது, சாகக்கிடந்தவர் முழு ஆரோக்கியத்துடன் எழுந்து உட்கார்ந்திட்டிருந்தார்.
செத்துடுவார்னு சொன்ன டாக்டர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டாங்களாம்[குமுதம் 21.12.2022 இதழ்].
இந்தக் கதையின் மூலம் குமுதம் வார இதழ் அதிபர் சொல்லவந்த நீதி என்னவென்றால்.....
கடவுளின் அவதாரமான[தொடர் கட்டுரைகளின் தலைப்பு: ‘கடவுளின் குரல்’]மகா பெரியவாவின் அனுக்கிரஹம் இருந்தா சாகக்கிடக்கும் எந்தவொரு மனிதனும் அந்த ஆபத்திலிருந்து விடுபட்டுப் பூரண சௌக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வான் என்பதே.
இந்தக் குமுதம் அதிபர் சொல்கிறபடி பார்த்தால், பெரியவா என்னும் பகவான் மனித உருவில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, சாவைத் தழுவவிருந்த லட்சக்கணக்கானோர், அல்ல, கோடி கோடிக்கணக்கானோர் பூரண சுகம் பெற்றுத் தீர்க்க ஆயுசா வாழ்ந்தார்கள் என்பதே.
அதிபர் வரதராசனாரிடம் மிகவும் பணிவுடன் நாம் வேண்டுவதாவது, “அதிபரே, அருள்கூர்ந்து, பெரியவாவின் அனுக்கிரஹத்தால் உயிர்பிழைத்துத் தீர்க்க ஆயுசுடன் வாழ்ந்தவர்களுக்கான ஒரு மிக நீ.....ண்.....ட பட்டியலைத் தாங்கள் வெளியிடுதல் வேண்டும் என்பதே.
===========================================================================