சனி, 11 பிப்ரவரி, 2023

வாருங்கள்..... கொஞ்சம் கவலைப்படலாம்!!!

தினக்கூலித் தொழிலாளியான சுனிதா நோய்வாய்ப்பட்டு, முசாபர்பூரில், ‘பாரியார்பூர் சௌக்’ அருகே உள்ள ‘சுப்காந்த் கிளினிக்’கில் அனுமதிக்கப்பட்டபோது, கருப்பையில் தொற்று இருப்பதாகப் பொய் சொல்லி அறுவைச் சிகிச்சைக்கு உடன்படச் செய்தார் மருத்துவர் பவன். சுனிதாவின் இரு சிறுநீரகங்களையும் திருடினார்.

அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவளைப் பாட்னாவில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுத் தப்பியோடினார்[போலீசார் பவனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்].

சுனிதாவுக்கு மூன்று குழந்தைகள். இப்போது அவள் வேலைக்குச் செல்ல இயலாத நிலை.

"எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், நான் மரணத்தின் நாட்களை எண்ணுகிறேன், எனக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்று தெரியவில்லை, எனக்குப் பிறகு என் குழந்தைகளுக்கு யார் ஆதரவு? அவர்கள் எப்படி வாழ்வார்கள்?" என்று மனம் கலங்கிக் கண்ணீர் வடிக்கிறார்.

தற்போது சுனிதா, மாவட்டத்தில் உள்ள ‘எஸ்கே’ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சுனிதாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டும்.

சில நாட்களுக்கு முன்புவரை சுனிதாவின் கணவர் ‘அக்லு ராமு’ உடன் இருந்தார். அவர் சுனிதாவுக்குச் சிறுநீரகம் கொடுக்கத் தயாராக இருந்தார். அது பொருத்துவதற்கு ஏற்றதாக இல்லை.

சுனிதாவுடன் ஏதோ பிரச்சினைக்காகச் சண்டையிட்டு, மூன்று குழந்தைகளையும் அவளுடன் விட்டுவிட்டு அவர் ஓடிவிட்டார்.

தற்போது சுனிதாவின் தாய், மருத்துவமனையில் அவரைக் கவனித்து வருகிறார். மருத்துவமனை நிர்வாகமும் சுனிதாவுக்கு உதவ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், இதுவரை பெறப்பட்ட நன்கொடையாளர்களின் சிறுநீரகங்களில் எதையும் பொருத்த இயலவில்லை[இந்தியா டுடே].

சுனிதாவின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது; கவலைக்குரியதாக உள்ளது.

நாமும் கவலைப்படுகிறோம். இதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்!?

Don't care if you die: Bihar man leaves wife months after both her kidneys stolen during operation

[கையறு நிலையில் சுனிதா]

====================================================================