அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

துருக்கி[+சிரியா]யின் துயரமும் மலரும் மனிதநேயமும்!!!

நிலநடுக்கம் துருக்கியரின்[+சிரியா] இயல்பு வாழ்க்கையை சிதைத்துச் சீர்குலைத்துக்கொண்டிருக்கிறது.

இயற்கை எப்போது தன் கோரதாண்டவத்தை நிறுத்திக்கொள்ளும் என்பது எவருக்கும் தெரியாது.

இந்நிலையில், இந்தியா நிவாரணப் பொருட்களையும், மீட்புக் குழுக்களையும், மருத்துவர்களையும் அனுப்பியுள்ளது.

துருக்கியின் நிவாரணப் பணிகளுக்க்காக, சீனா முதல் தவணையாக 40 மில்லியன் யுவான்($5.9 மில்லியன்) வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தலா 200,000 டாலர்களை அவசர உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஒரு விமானத்தில் நிவாரணப் பொருட்களையும், மற்றொரு விமானத்தில் 50 பேர் கொண்ட மீட்புக் குழுவையும் பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.

ரஷ்ய மீட்புக் குழுக்கள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. 300 பேரைக் கொண்ட ரஷ்ய இராணுவக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடவும் மீட்கவும் அனுப்பப்பட்டுள்னர். மனிதாபிமான உதவிகளைச் செய்ய ரஷ்ய இராணுவம் சிரியாவில் முகாம்களை அமைத்துள்ளது. 

கிட்டத்தட்ட 100 லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்பு வீரர்களும் கட்டமைப்புப் பொறியாளர்களும், ஆறு சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்களுடன் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இவை தவிர, தென்கொரியா, பிரிட்டன், இஸ்ரேல், ஈராக், தைவான், ஜப்பான், பிரான்ஸ், மெக்ஸிகோ, எகிப்து, சிங்கப்பூர், மலேசியா,  போன்ற நாடுகளும் துருக்கிக்கும் சிரியாவுக்கும் உதவிகளைச் செய்துவருகின்றன. https://tamil.newsbytesapp.com/news/world/world-countries-help-to-turkey-and-syria/story

உக்ரைனில் போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலில் அந்நாட்டு வீரர்களும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிக்காகத் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

அர்மேனியா-துருக்கி இடையே ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லும் வழி மிகப் பல ஆண்டுகளாக[30?] மூடிக்கிடந்தது. அர்மேனியா இப்போது துருக்கிக்கு உதவ முன்வந்திருப்பதால் அடைக்கப்பட்டிருந்த அந்த வழி திறக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எதிரிகள் இப்போது நண்பர்கள்.

துருக்கி இஸ்லாம் மதச் சார்புள்ள நாடு. இஸ்லாம் சார்ந்த நாடுகள் மட்டுமல்லாமல், வேறு வேறு மதங்களைச் சார்ந்துள்ள நாடுகளும், மதத்துக்கு முக்கியத்துவம் தராத நாடுகளும்  துருக்கியின் துயர் துடைக்க முன்வந்துள்ளன.

ஏன், அதனுடன் பகைமை பாராட்டிய நாடுகளும்கூட உதவிட முன்வந்திருப்பது கவனிக்கத்தக்கது.

இதிலிருந்து அறிந்துகொள்ளத்தக்கது, மனிதர்களுள் ஒரு சாரார் தீராத துயரத்திற்கு உள்ளாகும்போது, பிற மனிதர்கள் அவர்களைத் தம் இனம்[மனித இனம்] சார்ந்த மனிதர்கள் என்றே பார்க்கிறார்கள்; அவரவர் மதம், மாறுபட்ட நாகரிகம், பண்பாடு, நம்பிக்கைகள் பற்றியெல்லாம் ஆராயாமல் மனித நேயத்துடன் அந்த ஒரு சாராருக்கு உதவ முன்வருகிறார்கள் என்பதே.

மேற்கண்ட மதம், நாகரிகம் போன்ற வேறுபாடுகளைப் புறந்தள்ளி, இனியும் மனித நேயத்தை மட்டுமே போற்றும் உன்னத நெறியைப் பின்பற்றி உலக மக்கள் வாழ்வார்களேயானால்.....

எத்தனை எத்தனை நிலநடுக்கங்களும், சுனாமிகளும், தொற்றுநோய்களும், வேறு வேறு பிணிகளும், வாட்டி வதைக்கும் பசிபட்டினிகளும் தாக்கினாலும் மனித நேயத்துடன் ஒருங்கிணைந்து போராடி, அவற்றால் நேரும் அழிவைப் பெருமளவில் குறைத்திட முடியும். 

இந்த மண்ணில் ஜாதிமதக் கலவரங்கள், இன மோதல்கள் என்று அனைத்து வேறுபாடுகளும் படிப்படியாய்க் குறையும்; பின் மறையும். 

==============================================================================