மாருதியை, ஒரு பழைய துணிமணிகள் வாங்கி விற்கும் கடையருகே நிறுத்திவிட்டு அருகிலிருந்த அங்காடிக்குச் சென்றிருந்தார்கள் என் மகனும் மனைவியும். காரின் பின்னிருக்கையில் நான் மட்டும்.
காருக்குப் பின்னாலிருந்து இரண்டு இளைஞர்கள் உரையாடிக்கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது. நான் அங்கு இருப்பதை அவர்கள் அறிந்திருந்ததாகத் தெரியவில்லை.
“போனேன்’ -பதிலளித்தவன் சுந்தரமாக இருத்தல் வேண்டும், அவனின் பதில் ‘ஏனோதானோ’வாக இருந்தது.
“ஏண்டா சலிச்சிக்கிறே, அவள் வீட்டில் இல்லையா?”
“இருந்தா. ‘அது’க்கு அவள் சம்மதிக்கல.”
“ஏன்?”
“தனக்கான ரேட் நானூறு ரூபாய்னு சொன்னா.”
“போன மாசம் நான் அவகிட்ட போனபோது இருநூறுதான் கொடுத்தேன்.” -உடனிருந்தவன்.
“சொன்னேன். அப்போ இருநூறு. இப்போதைய விலைவாசிக்கு நானூறு. நானூறு ரூபாய் கொடுத்தா ஒரு மணி நேரம் ‘இருந்துட்டு’ப் போகலாம்னா.”
“நீ என்னடா சொன்னே?” என்றான் அந்த இன்னொருவன்.
“என்கிட்ட இருநூறு ரூபாதான் இருக்கு. ஒரு மணி நேரத்துக்கு நானூறுன்னா, இந்த இருநூறைக் கொடுத்துட்டு அரை மணி நேரத்தில் முடிச்சிக்குறேன்னு சொன்னேன்.... ஹி...ஹி...ஹி” -சுந்தரம் சிரிப்பது கேட்டது. அவன் முகத்தில் நிறையவே அசடு வழிந்திருக்கும் என்பது என் அனுமானம்.
தொடர்ந்தான். “அவள் இளக்காரமா என்னைப் பார்த்துட்டுச் சொன்னாள். ‘நீ சினிமாவுக்குப் போறே. அங்க குறைஞ்சபட்ச டிக்கெட் விலையே நூறு ரூபாதான். தியேட்டர்காரங்ககிட்ட, 'ஐம்பது ரூபாதான் இருக்கு, நான் பாதிப் படம் மட்டும் பார்த்துட்டுப் போயிடுறேன்'னு நீ சொன்னா, அவங்க படம் பார்க்க அனுமதிப்பாங்களா? என் ரேட் நானூறுதான். முழுசா ஒரு மணி நேரம் ‘இருந்து’ ஆற அமர அனுபவிக்கிறதும், அஞ்சு நிமிசத்தில் ஆட்டத்தை முடிச்சுட்டு இடத்தைக் காலி பண்ணுறதும் ‘அது’ விசயத்தில் நீ கலக்குறவனா, கையாலாகாதவனா என்பதைப் பொருத்தது. இருநூறு ரூபாதான் இருக்குன்னா இடத்தைக் காலி பண்ணு’ன்னு சொல்லிட்டா. நானும் கிளம்பி வந்துட்டேன்.”
“எனக்கு ஒரு போன் பண்ணியிருந்தா.....” என்று உடனிருந்தவன் ஏதோ சொல்ல முயல, குறுக்கிட்டுச் சொன்னான் சுந்தரம். “பட்ட அவமானத்தில் எனக்கிருந்த உடலுறவு ஆசை இருந்த இடம் தெரியாம போயிடிச்சி. அம்மன் கோயிலுக்குப் போய், இருநூறு ரூபாயைக் கோயில் உண்டியலில் போட்டுட்டு, ‘அம்மா தாயே, இனியும் இப்படித் தப்புப் பண்ணாம இருக்க எனக்கு நல்ல புத்தியைக் கொடு’ன்னு வேண்டிகிட்டு வந்தேன்” என்றான் சுந்தரம்.
“இது விசயத்தில் அம்மன் என்ன வேறு எந்தக் கொம்பன் கடவுளும் உதவ முன்வராது” -வாய்விட்டுச் சிரித்தான் அந்த இன்னொருவன்.
உரையாடல் நின்றுபோனது.
காரிலிருந்த நான் திரும்பிப் பார்த்தேன். நண்பர்கள் இருவரும், கடைக்குள் குவிந்து கிடந்த பழைய துணிமணிகளைத் தரம் பிரிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள்.
முக்கிய அறிவிப்பு!
இது என்னை நம்புகிறவர்களுக்கு ‘உண்மை’க் கதை. நம்பாதவர்களுக்கு 100% கற்பனைக் கதை! ஹி...ஹி...ஹி!!!
==============================================================================