அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

மகா ‘சிவஜக்கிராத்திரி’!!!

“இந்த ஆண்டு[2023] சிவராத்திரியைச் சத்குருவுடன் கொண்டாடுங்கள்” என்று அறிவுறுத்தும் விளம்பரங்களைத் தினம் தினம் ஊடகங்களில் காணமுடிகிறது.

சமூக ஆர்வலர்கள் பலரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஜக்கி வாசுதேவன் மீது சுமத்தினார்கள்[கடந்த பல நாட்களாக ஓய்ந்துபோய் மௌனம் காக்கிறார்கள்].

“ஜக்கி தன் பக்தர்களுக்குப் போதை மாத்திரை கொடுக்கிறார். குடிக்கக் கொடுக்கும் தீர்த்தத்தில் கஞ்சா ரசம் கலக்கிறார். ஆசிரமத்தில் என்னவெல்லாமோ நடக்கிறது. ஜக்கியைக் கைது செய்ய வேண்டும். ஆசிரமத்தைப் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும்” என்று கூக்குரல் எழுப்பினார்கள்; அரசுக்குக் கோரிக்கை வைத்தார்கள்; அயராமல் சமுக ஊடகங்கள் மூலமாகப் பரப்புரை செய்தார்கள்.

மக்கள் கிளர்ந்தெழுந்து ஜக்கிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவும் செய்தார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை.

மாறாக.....

ஜக்கியின் போதனைகளைக் கேட்கவும், அவரின் ஆசீர்வாதத்தைப் பெறவும் சாரிசாரியாக ஈஷா ஆசிரமம் நோக்கி மக்கள் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அமைச்சர்களும் பிரபல அரசியல்வாதிகளும் அவ்வப்போது ஆசிரமத்திற்கு வருகைபுரிவதும், இரவுபகலாய் அங்கேயே தங்கியிருந்து தியானத்தில் ஈடுபடுவதும் நடந்துகொண்டிருக்கிறது.

ஜக்கியால் நிறுவப்பட்ட ‘ஆதியோகி’ சிலையை இந்த நாட்டின் பிரதமரே திறந்துவைத்த நிலையில், 2023 பிப்ரவரி 18இல் ஈஷா ஆசிரமத்தில் நிகழவுள்ள ‘மகா சிவராத்திரி’க் கொண்டாட்டத்தில் இந்த நாட்டின் குடியரசுத் தலைவரே கலந்துகொள்ளவிருக்கிறார் என்னும் செய்தி கடந்த சில நாட்களாக ஊடகங்களில் உலாவந்துகொண்டிருக்கிறது.

இரவைப் பகலாக்கும் ஒளி வெள்ளத்தில், அண்டவெளியை அதிர்வுறச் செய்யும் இன்னிசை முழக்கத்துக்கிடையே, நெடுந்தொலைவுக்கு நீண்டு நெடிதுயர்ந்து காணப்படும் மேடையில், வளைந்தும் நெளிந்தும் குனிந்தும் ஜக்கி ஆடும் ஒய்யார நடனத்தைக் கண்டு இன்புற ஆயிரம் கண்கள் வேண்டும் என்று பக்தர்கள் நினைக்கிறார்கள்.

தொட்டுவிடும் தூரத்திலிருந்து ஜக்கியைப் பார்த்து மெய் சிலிர்க்கவும், சற்று எட்ட இருந்து ரசித்துக் குதூகளிக்கவும் ரூபாய் 50 ஆயிரம், 40 ஆயிரம் என்பன போல நிர்ணயிக்கப்பட்ட ‘அனுமதிச் சீட்டுகள்[டிக்கெட்டுகள்]’ அவ்வளவும் சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது அண்மைச் செய்தி.

ஆக, நடந்தவை நடக்கவிருப்பவை என்று அனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால்.....

சத்குரு[சத்>பரம்பொருள், அல்லது என்றும் இருந்துகொண்டிருப்பது; குரு >போதிப்பவர்; கடவுளுக்குப் போதிப்பவர் > ஜக்கி] என்று ஜக்கி தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பட்டத்தை, நாட்டை ஆளுவோரும், அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரிகிறது; தெளிவாகப் புரிகிறது.

இந்தப் புரிதல் நம்மைப் போன்றவர்களையும், ஜக்கி வாசுதேவ் என்பவர் கடவுளுக்குக் குருதான்[சத்குரு] என்பதையும், அவரே நம் ‘கண் கண்ட கடவுள்’ என்பதையும் ஏற்றுக்கொள்ள வைக்கிறது.

இந்நிலையில், ஈஷா மையத்தில் வழக்கமாகக் கொண்டாடப்படும் ‘மகா சிவராத்திரி’, இனி மகா ‘சிவஜக்கிராத்திரி’ என்னும் பெயரில் கொண்டாடப்படுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்; ஒட்டுமொத்த ‘சத்குரு’ பக்தர்களிடம் நாம் வைக்கும் கோரிக்கையும்கூட!

==============================================================================