வடக்கு மற்றும் மத்திய சீனாவின் கிராமப்புறங்களில் பேய்களுக்குத் திருமணம் செய்துவைப்பது வழக்கத்தில் இருப்பதை அங்குள்ள பல்கலைக் கழகங்கள் ஆய்வுகளின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளன.
சீனாவில், உயிர் வாழும்போது திருமணம் செய்துகொள்ளாமலிருந்த ஒருவர்[ஆணோ பெண்ணோ] இறந்துபோனால், அவரின் சடலத்திலிருந்து வெளியேறிய பேய்க்கும், இறந்த மற்றொருவரின்[ஆண் அல்லது பெண்] சடலத்திலிருந்து வெளியேறிய பேய்க்கும் திருமணம் செய்துவைக்கும் முறை மிகவும் வித்தியாசமானது[இறந்தபின் அலைந்து திரியும் திருநங்கைப் பேய்களுக்குத் திருமணம் செய்வித்ததாகத் தகவல் இல்லை!].
மூங்கில், காகிதம், துணி ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆண்&பெண் பேய்களின் உருவப் படங்களை வைத்தும் சடங்குகள் நடத்தப்படும். ஒருவர் இறந்தவுடனே அவருக்குப் பொருத்தமான துணையை[பேய்]க் கண்டறிவது சிரமம் என்பதால் இந்த ஏற்பாடு. இறந்து சில/பல நாட்கள் கழித்தும் இவ்வகைச் சடங்குகள் நடத்தப்படுவதுண்டு[வரன் ஏற்பாடு செய்யும் ‘தரகர்கள்’ பற்றி ஏதும் அறிய இயலவில்லை!].
ஆணுக்கும் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து, ஆண் இறந்துபோனால் வெளியேறும் பேயின் திருமணச் சடங்கிலும், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு இறந்துபோகும் பெண் பேயின் திருமணச் சடங்கிலும், உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணும், உயிர் வாழும் ஆணும்[உறவினர் உட்பட] கலந்துகொள்வார்கள்.
“நீங்கள் இருண்ட உலகில் தனிமையில் வாடுகிறீர்கள்; உறவுகொண்டு இன்புற உறு துணையின்றித் தவிக்கிறீர்கள். எனவே, துணையைத் தேர்வு செய்து, மங்களகரமான நாளில் திருமணம் செய்துவைத்துள்ளோம். உண்டு மகிழ அனைத்துவகையான உணவுகளையும் படைத்துள்ளோம்” என்றிப்படிப் பேய்களை விளித்து, சடங்கு நிகழ்த்துவோர் வேண்டுகோள் வைப்பதும் உண்டு.
***பேய்த் திருமணங்களின் நடைமுறை முதலில் ஏகாதிபத்திய சீனாவில் தடை செய்யப்பட்டது. பின்னர் 1949இல் சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் மீண்டும் தடை செய்யப்பட்டது. இருப்பினும், சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் அவை இன்னும் சட்டவிரோதமாக நடைமுறையில் உள்ளன,
***நம் கவனத்தை ஈர்க்கும் கூடுதல் செய்திகள்:
*சீனாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் இருப்பதால், பெண் சடலங்களே பெரிதும் மதிக்கப்படுகின்றன. பொருத்தமான பேய் மணமகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளதாம்.
*ஓர் இளம் பெண் இறக்கும்போது, சடலங்களை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவும்.
*2013ஆம் ஆண்டில், 10 பெண் சடலங்களைத் திருடியதற்காக நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
*திருடப்பட்ட சடலங்கள் பேய்த் திருமணக் கருப்புச் சந்தையில் மொத்தம் 30,800 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டன.
*2015ஆம் ஆண்டு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 பெண் சடலங்கள் திருடப்பட்டன.
*2014 அக்டோபரில், ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து பெண் சடலங்களைத் தோண்டியதற்காகக் கிழக்குச் சீனாவில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
*பல வருடப் பழைமையான சடலங்கள் மதிப்புக்குரியவை அல்ல; அதே சமயம் புதிய சடலங்கள் மதிப்பு மிக்கவை.
*2016ஆம் ஆண்டில், ’மா சோங்குவா’ என்ற நபர் இரண்டு பெண்களைக் கொன்று, அவர்களின் உடல்களைப் பேய்த் திருமணங்களுக்காகத் தலா 40,000 யுவான் (US$5,934)க்கு விற்றார்.
முக்கிய அறிவிப்பு!
சீனர்கள், புதுமணத் தம்பதிகளின் ‘முதலிரவு’க்கு ஏற்பாடு செய்தார்களா, கருவுற்ற பேய்களுக்கு ‘வளைகாப்பு’ விருந்து வைத்தார்களா போன்றவை பற்றியத் தகவல்களைத் தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுவையான தகவல்கள் கிடைப்பின் அவை பிறிதொரு பதிவில் பகிரப்படும்! ஹி... ஹி... ஹி!!!
==============================================================================
Sources: (BBC 1 and 2) (The Guardian) (South China Morning Post 1 and 2) (Asian Journal of Criminology)