ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

பாண்டியர் இனம் அழிந்த கதை பழனிசாமிக்கு[எடப்பாடியார்]த் தெரியுமா?!

அந்த அவலம் நிகழ்ந்தது 13ஆம் நூற்றாண்டில்[துல்லியமாக அறிவது இப்போது அவசியமில்லை].

வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய இரு தமிழ் மன்னர்களுக்குள் பங்காளிச் சண்டை. அவ்வப்போது நடந்த மோதல்களில் சுந்தர பாண்டியன் தோல்விகளைச் சந்திக்கிறான்; வீரபாண்டியனே வெல்கிறான். பங்காளியைப் பழிவாங்கக் காத்திருக்கிறான் சு.பாண்டியன்.

இதற்கிடையே வடநாட்டிலிருந்து படையெடுத்துவருகிறான் ‘மாலிக்காபூர்’. நடந்த போர்களில், தென்னாட்டின் மன்னர்கள் பலரையும் வீழ்த்துகிறான்.

பாண்டிய நாட்டை ஆண்ட வீரபாண்டியன் சிறந்த வீரன், அஞ்சாநெஞ்சன் என்பதை அறிந்து காலம் கனியட்டும் என்று காத்திருக்கிறான்.

இதுவே நல்வாய்ப்பு என்று கருதி, மாலிக்காபூரின் உதவியை நாடுகிறான் சுந்தர பாண்டியன். வீரபாண்டியனுடன் போர் தொடுக்கச் சம்மதிக்கிறான் மாலிக்காபூர்.

சுந்தர பாண்டியனின்[பங்காளி வீரபாண்டியனின் பலவீனங்களை அறிந்தவன்] துணையுடன் வீரபாண்டியன் மீது போர் தொடுக்கிறான் மாலிக்காபூர்.

நடந்த போரில் வீரபாண்டியன் கொல்லப்படுகிறான்.

சிறு இடைவெளிக்குப் பின்னர், சுந்தரபாண்டியனையும் கொன்று, பாண்டிய நாட்டைத் தன் எடுபிடியிடம்[பிரதிநிதி] ஒப்படைத்து, கொள்ளையடித்த செல்வம் சுமந்து வடநாடு திரும்புகிறான் மாலிக்காபூர்.

இது கதையல்ல; நடந்த வரலாறு[நீண்ட நாட்களுக்கு முன்பு படித்தது என்பதால் சிறு பிழைகள் இருக்கலாம்].

தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழலை, மேற்கண்ட பாண்டியநாட்டு நிகழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மாலிக்காபூர் யார், வீரபாண்டியன் யார், சுந்தர பாண்டியன்கள் யார்யாரெல்லாம் என்பது புரியும்.

இந்தப் புரிதல் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இருக்கும் என்னும் நம்பிக்கையில், அவரிடம் நாம் வைத்திடும் கோரிக்கை.....

முன்னாள் முதலமைச்சர் அவர்களே,

இன்றைய நிலையில் ‘அதிமுக’  முழுக்க முழுக்க உங்கள் வசம்[பன்னீருடன் பத்துப் பேர்கள்கூட இல்லை]தான் உள்ளது. வெற்றியோ தோல்வியோ, ஈரோடு இடைத் தேர்தலில் ‘பாஜக’வைப் புறக்கணித்துச் செயல்படுங்கள்[கடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘பாஜக’வைக் கூட்டணியில் சேர்க்காமல் இருந்திருந்தாலும் இப்போதுள்ள 66 இடங்கள் கிடைத்திருக்கவே செய்யும்[நீங்கள் ஆதரிக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு ஓர் இடம்கூடக் கிடைத்திருக்காது].

ஓர் உண்மைத் தமிழனாகத் தமிழர்களுக்கு உழைத்தால், இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தமிழர்கள் உங்களை முதல்வர் பதவியில் அமர்த்துவார்கள் என்பதை நம்புங்கள்.

தமிழ்நாட்டில் பங்காளிச் சண்டையால் பாண்டியர் அரசு வீழ்ச்சிகண்ட வரலாற்றை மறவாதீர்கள்; அடிக்கடி நினைவுகூருங்கள்!

வாழ்க அதிமுக! வாழ்க திமுக! வெல்க தமிழினம்!

==============================================================================