//“முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு 5 முறை நமாஸ் செய்கிறார்கள். ஆனால், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள்; இந்துப் பெண்களைக் கடத்துகிறார்கள்” -சர்ச்சையை கிளப்பிய ராம்தேவ்//[‘டைம்ஸ் நவ்’ ].
“இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கும். அதே வேளையில், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த சிலர் உலகம் முழுவதையும் தங்கள் மதமாக மாற்றுவதில் வெறித்தனமாக இருக்கிறார்கள்.....
ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்கிற முஸ்லிம்கள் இந்துப் பெண்களைக் கடத்தி எல்லாவிதமான பாவங்களையும் செய்கிறார்கள்” என்றிவ்வாறு ராஜஸ்தானின் பார்மரில் வியாழக்கிழமை நடைபெற்ற பார்ப்பனர்கள் கூட்டத்தில் ‘ராம்தேவ்’ கூறினார்[Zee News].
* * * * *
ராம்தேவ், முஸ்லிம்கள் மீது மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
ஒன்று: மதமாற்றம் செய்வதில் வெறித்தனமாகச் செயல்படுகிறார்கள்.
நாம்: செயல்படட்டும். ராம்தேவ் அவர்களே, இந்துமதவாதிகளான நீங்கள் அவர்களைவிடவும் வெறித்தனமாகச் செயல்படுங்களேன். மக்களுக்கு நன்மைகள் செய்வதில் வெறித்தனமாகச் செயல்பட்டால் உங்கள் மதம் வெகு வேகமாக வளரும். செய்யுங்களேன்.
இரண்டு: முஸ்லீம்கள் ஐந்து முறை தொழுதுவிட்டுப் பெண்களைக் கடத்துகிறார்கள்.
நாம்: ஐந்து முறை தொழுதால் என்ன, ஐம்பது முறை தொழுதால் என்ன தொழுகைக்கும் பெண்களைக் கடத்துவதற்கும் சம்பந்தமில்லை. பெண்களைக் கடத்துபவர்கள் எல்லாருமே மதம் சார்ந்தவர்களும் அல்ல.
அவர்கள் தொழுதுவிட்டுப் பெண்களைக் கடத்துகிறார்கள் என்றால்[தொழுகைக்கும் கடத்தலுக்கும் தொடர்பு இருப்பினும்], ஆன்மிகம் போதித்தல் என்னும் பெயரில், பெண்களைக் கூட்டிவைத்து, மந்திரம் சொல்லி, பல தந்திரங்களைக் கையாண்டு அவர்களை மயக்கும் சாமியார்கள் இங்கு ஏராளம்[தாடி மீசையுடன் ஆணழகனாக் காட்சிதரும் ராம்தேவைப் பார்த்தால், தியானம் செய்து, விரதம் இருந்து, தம்மைத்தாமே வருத்தி, எலும்பும் தோலுமாகக் காட்சிதரும் அந்தக் காலச் சாமியார்கள் போல் தெரியவில்லையே!] இது ராம்தேவுக்குத் தெரியாதா?
மூன்று: அவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
நாம்: ஜெய்ராம் சொல்ல மறுக்கும் முஸ்லிமைத் தாக்குவதும், மாட்டுக்கறி விற்பவனை அடித்தே கொல்லுவது தீவிரவாதங்கள் அல்லவா? அப்புறம் எதுக்கு முஸ்லிம்களை மட்டும் சாடுவது?[தீவிரவாதிகளைக் கைது செய்து விசாரித்து, குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கையும்].
ராம்தேவ் வகையறாக்களுக்கு நம் பரிந்துரை:
உண்மையில் இந்துமதம் வளர வேண்டுமானால், மக்கள் அறியும் வகையில் உத்தமராக வாழ்ந்துகாட்டுங்கள். மனிதாபிமானம் வளர்ப்பது போன்ற நல்ல பல பணிகளை நாளும் வெறித்தனமாகச் செய்யுங்கள். உங்கள் இந்துமதம் தானாக வளரும்; வளர்ச்சியில் மற்ற மதங்களை மிஞ்சும்.
இவற்றோடுகூட, ராம்தேவ் போன்றவர்கள் வாயை மூடிக்கொண்டு ‘சும்மா’ இருப்பதும் இந்துமத வளர்ச்சிக்கு உதவுவதாக அமையும்!
===================================================================