அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 18 பிப்ரவரி, 2023

ஆசை நிறைவேறியது! அந்தக் கொஞ்சம் அறிவுஜீவிகளுக்கு நன்றி!!

இங்கே பக்திப்பித்தர்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை.

எத்தனைதான் அறிவியல் ரீதியாக அறிவுறுத்தினாலும், இடித்துரைத்துப் புத்திமதி சொன்னாலும் போலிச்சாமியார்கள் மீதான இவர்களின் ‘பித்தம்’ இன்றளவும் தெளியவே இல்லை.

‘ஆடு, மேய்ப்பவனை நம்பாது; வெட்டிக் கூறுபோட்டு விற்பவனைத்தான் நம்பும்’ என்பது போல், அறிவுஜீவிகளைப் புறக்கணித்து, பொய் பேசிப் புனிதர் வேடம் போடும் போலிச் சாமியார்களை நம்புகிறவர்கள் நம் மக்களில் பெரும்பாலோர். 

சாரி சாரியாய், அணி அணியாய், கூட்டம் கூட்டமாய்ச் சென்று சல்லாபச் சாமியார்களின் தரிசனத்துக்குக் காத்துக்கிடப்பார்கள்; கணக்குவழக்குப் பார்க்காமல் காணிக்கை செலுத்துவார்கள். கால்வயிற்றுக் கஞ்சிக்குச் சிங்கியடித்த சாமியாரெல்லாம் லட்சங்களிலும் கோடிகளிலும் புரள்கிறார்கள்.

கோவையிலும் ஒரு சாமியார். கோடிகளில் புரள்வது மட்டுமல்ல, சொகுசு வாகனங்கள், வான ஊர்திகள் என்று வானவெளியில் உலா வருபவர்.

எக்குத்தப்பான காரியங்களில் ஈடுபடுவதாகச் சொல்லப்படும் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள்.

ஆனாலும், பெரிய மனிதர்கள் பலரும் அவரைத் தேடிவந்து அவரிடம் ஆசி பெறுகிறார்கள். இன்றுகூட, அந்தச் சாமியாரின் ஆச்சிரமத்தில் நடைபெறவுள்ள விழாவில் கலந்துகொள்ள இந்த நாட்டின் முதன்மைக் குடிமகளே வந்திருக்கிறார்.

அவர் அவ்வாறு கலந்துகொள்வது ஏற்புடையதல்ல என்று எதிர்ப்புத் தெரிவிப்பார் எவருமில்லை என்பதை எண்ணியபோது மனதில் பெரும் கவலை மண்டியது[சாமியாரைக் கடுமையாக விமர்சனம் செய்தவர்கள்கூட, ஏனோ மௌனம் சாதிப்பதாகத் தெரிகிறது].

ஒரு சிலரேனும் ஒன்றுகூடித் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டுவார்களா என்னும் ஏக்கம் உள்ளுக்குள் பரவியது. அந்த ஏக்கம், கீழ்க்காணும் ஊடகச் செய்தியைக் கண்ணுற்றபோது சற்றே தணிந்தது.

செய்தி[https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-tpdk-cadres-protest-against-president-droupadi-murmu-s-visit-to-isha-yoga-centre-499068.html?story=2]:

#வெள்ளியங்கிரியானின்[ஈஷா ஆசிரமம்] விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘கோவை ராமகிருஷ்ணன்’ தலைமையிலான, ‘தந்தை பெரியார்’ திராவிடக் கழகத்தினர் போராட்டம் நடத்தினார்கள்#

இது தொடர்பாக, தந்தை பெரியார் தி.க. நிர்வாகிகள் கூறுகையில், “மேற்கு தொடர்ச்சி மலையையும், யானை வழித்தடங்களையும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களையும், விவசாய நிலங்களையும் சூறையாடியதோடு, ‘யோகா’ என்னும் பெயரில் பல மர்ம மரணங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு நாட்டின் உயரிய பதவியில் உள்ள, அதுவும் பழங்குடி மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்டப்பட்ட ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த வேதனைக்குரியது; கண்டனத்துக்குரியது. இது அந்தச் சாமியார் செய்யும் சட்ட விரோதமான செயல்களுக்கு அரசே அங்கீகாரம் வழங்குவது போன்று உள்ளது என்று தங்களின் போராட்டத்துக்கான காரணங்களை மக்கள் அறியும் வகையில் ஊடகக்காரர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள் என்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

===========================================================================