அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 9 மார்ச், 2023

‘வ.மா.தொழிலாளர் வருகைக்குக் கட்டுப்பாடு’... நடவடிக்கை எடுப்பாரா நம் முதல்வர்?


டமாநிலத் தொழிலாளர்களின் வருகையை முற்றிலுமாய் எதிர்ப்பவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ‘எல்லோரும் இந்தியரே. எவர் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைப்புக்கு வழி தேடலாம்’ என்று சொல்வாரும் இங்கு உள்ளனர்.

இவ்விரு தரப்பாரின் நிலைப்பாடுகளும் தவறாவை என்று சொல்லுவதற்கும் இடமுண்டு.

இந்தியாவில் பல்வேறு மொழி பேசுவோர் வாழ்கின்றனர். ஒவ்வொரு மொழியையும் பேசுவோரின் எண்ணிக்கையை[பெரும்பான்மை]க் கருத்தில் கொண்டுதான் ‘மொழிவாரி மாநிலங்கள்’ பிரிக்கப்பட்டன.

ஒவ்வொரு மாநிலத்தவரும், தம் மொழியைப் பேசுபவர், அதாவது, தம் இனத்தை[பெரும்பாலும் பேசும் மொழியைக் கொண்டுதான் இனம் அடையாளப்படுத்தப்படுகிறது]ச் சார்ந்தவரே தங்களை[மாநிலத்தை] ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனாலும், பிழைப்புக்காகப் பிற இனத்தவர் தம் மாநிலத்துக்கு வரும்போது, அவர்களின் எண்ணிக்கை ஒரு கட்டுக்குள் இருக்குமேயானால் பொருட்படுத்துவதில்லை; எதிர்ப்பதும் இல்லை. 

பிற இனத்தவர்[வேறு வேறு இனமாக இருப்பினும்] வருகை ஒரு எல்லையைக் கடக்கும்போதுதான் அவர்கள் கவலைகொள்கிறார்கள்; அவர்களை விரட்ட நினைக்கிறார்கள். கலவரங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

ஒரு காலக்கட்டத்தில், மகாராஷ்ட்ராவில், குறிப்பாக மும்பையில் சற்றே அதிக அளவிலான தமிழரின் குடியேற்றம் நிகழ்ந்தபோது, பால்தாக்கரே மிகக் கடுமையாக எதிர்த்தார். அதன் விளைவாக, தமிழர்கள் அங்கு குடியேறுவது படிப்படியாகக் குறைந்து ஒரு கட்டுக்குள் அடங்கியது[குடியேறிக் கோடீஸ்வரர் ஆனவர்களோ, மகாராஸ்டிர அரசியலில் ஆதிக்கம் செலுத்துவோரோ எவரும் இல்லை என்பது வேறு விசயம்].

கர்னாடகாவிலும் தமிழர்களின் வரவை எதிர்த்து வாட்டல் நாகராஜ், ராஜ்குமார் போன்றவர்கள் கலவரத்தைத் தூண்டினார்கள். காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்போது கடும் தாக்குதல் நடத்தினார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடிவந்த தமிழர்கள் ஏராளம்.

அண்மைக் காலத்திலும் தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தில் லாரித் தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்கள்; அவமானப்படுத்தப்பட்டார்கள். பிரபலப் போக்குவரத்து நிறுவனத்தின்[KPN] 50 அல்லது 60 பேருந்துகள்[துல்லியமான எண்ணிக்கை நினைவில் இல்லை] ஒரே நாளில் எரிக்கப்பட்டன.

இவற்றை இங்கே குறிப்பிடுவதன் நோக்கம் தமிழர்கள் அவ்விரு இனத்தாரையும் வெறுக்க வேண்டும் என்பதற்காக அல்ல; பழிவாங்கும் செயலை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அல்ல[அது முடியவும் முடியாது].

ஒரு மாநில மக்கள் இன்னொரு மாநிலத்தில் குடியேறும்போது, அம்மாநிலத்தவர் எதிர்ப்புத் தெரிவிப்பது இயல்பு என்பதைக் குறிப்பிடுவது மட்டுமே நம் நோக்கம்.

இப்போது தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் பிரச்சினைக்கும் இதுவேதான் காரணம். 

விளங்கச் சொன்னால்.....

பல ஆண்டுகளாக வடமாநிலத்தவர் இங்கு தொழில் செய்ய வருவது நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. அப்போதெல்லாம் இங்கு எந்தவொரு பிரச்சினையும் எழவில்லை. 

அண்மைக் காலத்தில், கூட்டம் கூட்டமாய் ஆயிரக்கணக்கானவர்கள் ரயில்களில் வந்து இறங்குவதைப் பார்த்துத்தான் இங்குள்ள தமிழர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்; தடுக்கும் வழியறியாமல் திகைத்தார்கள்; கவலைப்பட்டார்கள்.

கவலைப்படுவோரில் சிலர், சமூக ஊடகங்கள் வாயிலாகத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

அந்த எதிர்ப்பை அடியோடு நசுக்குவதற்காக,  வடமாநிலத்தவர் சிலர், இங்கே வ.மா. தொழிலாளர்கள் தாக்கிக் கொல்லப்படுவதாகவும், தூக்கிலிடப்படுவதாகவும்[சிறு சிறு குழு மோதல்கள் நடந்துள்ளன என்பது உண்மைதான்] பொய்ச் செய்தி பரப்பினார்கள். இதற்குப் பின்னர், இரு மாநில முதல்வர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் இன்று பிரச்சினை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்ததே.

இதற்கிடையே, இந்தவொரு பிரச்சினை மீண்டும் எழாமலிருக்க, இதற்கு நிரந்தரமான தீர்வு காணப்படுதல் வேண்டும் என்று இங்குள்ள தமிழர் அமைப்புகள், சில வழிமுறைகளைப் பரிந்துரைத்தன. 

அவற்றில், 

இங்குள்ள நிறுவன வேலை வாய்ப்புகளில் பிற மாநிலத்[வ.மா.தொழிலாளர்கள் உட்பட] தொழிலாளர்க்கென்று குறிப்பிட்ட சதவீதம்[5%, அல்லது 10% என்பன போல. சதவீதம் சற்றே கூடவும் செய்யலாம்] ஒதுக்கலாம். அதற்கான ஏற்பாட்டைத் தமிழ்நாடு அரசு செய்தல் வேண்டும்’ என்பது ஒன்று.

தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருபவர்கள் தமிழ்நாடு அரசிடம் ‘அனுமதி அட்டை’ பெற வேண்டுமென்பது[சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளதாகச் சொல்கிறார்கள். இப்போதைக்கு நம்மிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை; தேடினால் கிடைக்கும்] மற்றொன்று.

நம் முதல்வர் அவர்கள், வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், வதந்தி பரப்புவோர் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதும், நடவடிக்கை எடுப்பதும் முழு மனதோடு வரவேற்கத்தக்கதுதான். ஆனால்.....

மேலே குறிப்பிடப்பட்ட பரிந்துரைகள் பற்றிப்[குழு அமைத்து, பிற மாநிலத்தவருக்கான ஒதுக்கீடு குறித்து ஆராய்தல் வவேற்கத்தக்கது]  முதல்வர் அவர்கள் பரிசீலிக்கிறாரா என்பது பற்றி இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

பரிசீலிக்கவே மாட்டாரோ என்று தமிழ் மக்களில் பலரும் சந்தேகப்படுவதாகத் தெரிகிறது.

அந்தச் சந்தேகம் உண்மை ஆகிவிடக் கூடாது என்பதே எம்மைப் போன்ற எந்தவொரு குழுச்சார்பும் இல்லாத சாமானியர்களின் கவலை.

===========================================================================================