‘ராமநவமியை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் பேசினார்’ என்பது சற்று முன்னரான செய்தி*.
“அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்குப் பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கான நிலை உருவானபோது, அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும், பள்ளிக்கூடம் அமைக்கலாம் என்றும் யோசனைகள் சொன்னவர்கள் பலர். சிலரோ அங்கே தொழிற்சாலை அமைக்கலாம் என்றார்கள். இவர்கள் அனைவரும் கடவுள் ராமரைப் புரிந்துகொள்ளாதவர்கள்” என்று பேசிய ‘ராம்[ராஜ்]நாத் சிங்’ அவர்கள்.....
“கடவுள் ராமர் கல் அல்லது மரத்தில் உருவான வெறும் சிலை அல்ல” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்னது 100% உண்மை.
மண்ணுலகில், ஒரு மன்னனுக்கு மகனாகப் பிறந்து, மன்னனாக வாழ்ந்து மறைந்ததாகச் சொல்லப்படும் ராமன் ஐம்புலன்களுடனும் சிந்திக்கும் அறிவுடனும் வாழ்ந்த ஒரு மனிதன் மட்டுமே.
அவன், மரணத்தைத் தழுவாமல் இன்றளவும் ஒரு மனிதனாக வாழ்ந்துகொண்டிருந்தால், மனிதருள் சிறந்தவன் என்று போற்றி வழிபடுவதில் தவறில்லை.
பொழுது போகாதவர்கள், விழாக்கள் எடுத்து, கொண்டாட்டங்கள் நடத்திக் குதூகலிக்கலாம். தவறே இல்லை. ஆனால்…..
கோயில் கட்டி, உயிருள்ள ஒரு மனிதனை அங்குக் குடியேற்றி, இரவுபகலாய் இருந்த இடத்திலேயே குந்தியிருக்கச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லாதது.
அதனால்தான், அவனை[மரணத்திற்குப் பிறகு]ப் போல மரத்தாலும் கல்லாலும் சிலைகள் செய்து நிற்கவோ உட்காரவோ வைத்தார்கள்; படுக்கவும் வைத்தார்கள்.
அது தவறு என்பது, “ராமன் கல்லால் அல்லது மரத்தால் ஆன சிலை அல்ல” என்று அமைச்சர் கூறியிருப்பதிலிருந்து புரிகிறது.
அப்புறம் எதற்கு கல் அல்லாத, மரம் அல்லாத ராமனுக்கு அயோத்தியில் பிரமாண்டமான கோயில் கட்டவேண்டும் என்கிறார் அவர்?
கற்களையும் மரங்களையும் தவிர்த்துவிட்டு, ஒரு கடவுளாக மட்டும்[உருவிலி] அவனைக் காட்டவோ, உணர்த்தவோ முடியாது[அனுமானிக்கலாம். அனைத்து அனுமானங்களும் உண்மை ஆகிவிடா] என்பதால்தான்.
அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மட்டுமல்ல, அவரனைய பிற ராம பக்தர்களுக்கு நாம் பணிவுடன் சொல்லிக்கொள்ள விரும்புவது…..
கல்லைக் கல்லாக மட்டுமே பாருங்கள். மரத்தை மரமாகப் பாருங்கள். அவற்றை நுண்ணறிவு கொண்டு ஆராயுங்கள்[இதைச் செய்வதால்தான் அறிவியல் வளர்கிறது]. அவற்றுள் கடவுளைத் திணிக்காதீர்கள்.
ஆராய்ச்சி தொடரத் தொடர அறிவு வளரும். அறிவு வளர்ச்சியால் மனித இனத்துக்கு ஏராள நன்மைகள்[மனதைப் பண்படுத்துவது உட்பட] விளையும்.
மாறாக, கல்லிலும் மண்ணிலும் மரத்திலும், அவற்றால் செய்யப்பட்ட சிலைகளிலும் ராமன் போன்ற கடவுளைத் திணித்துக் கும்பிடுவதை வழக்கமாக்கினால் மனிதனுக்கு மட்டுமே வாய்த்த சிந்திக்கும் அறிவு சீரழியும்; முடங்கும்.
உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருந்தால், உண்டு உறங்கி, கழிவுகளை வெளியேற்றி வாழ்ந்த மனிதர்களை கடவுளாக்கி[தம்மைத்தாமே கடவுளாக்கிக்கொள்வோரும் உளர்... ஜக்கி வாசுதேவ் போல]ப் பிழைப்பு நடத்துவதை அவர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்!
=========================================================================