பெருமதிப்பிற்குரிய எடப்பாடிப் பழனிசாமி அவர்களே,
நான்கு ஆண்டுகள் நீங்கள் முதலமைச்சராகத் தமிழ் மாநிலத்தை நிர்வகித்தபோது, இந்திய நாட்டை ஆளும் ‘பாஜக’வின் எடுபிடியாகவே இருந்திருக்கிறீர்கள் என்பதைத் தமிழ்நாடு அறியும். உங்களின் மனசாட்சிக்கும் அது தெரியும்.
முதல்வர் பதவி பறிபோன பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்தவொரு அடிமைத்தனத்திலிருந்து ஓரளவுக்கேனும் விடுபடுவதில், அல்லது விடுபட முயற்சிப்பதுபோல் காட்டிக்கொள்வதில் கணிசமான அளவுக்கு வெற்றி கண்டிருக்கிறீர்கள்.
‘ஓரளவுக்கு’ என்னும் நிலையிலிருந்து ‘முழுமையாக’ என்னும் நிலையைத் தாங்கள் அடைதல் வேண்டும் என்பது தமிழினப் பற்றாளர்களின் விருப்பமாக இருந்தது.
ஆனால், ஓரிரு நாட்களுக்கு முன்னர் நடுவணமைச்சர் ‘அமித்சு’ தங்களை அழைத்து 50 நிமிடங்கள் போல மூளைச் சலவை செய்த பிறகு, “அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்” என்று நீங்கள் செய்த அறிவிப்பு அந்த விருப்பை வெறுப்பாக மாற்றிவிட்டது என்பது மிகப் பெரிய சோகம்.
நீங்கள் முதல்வராக இருந்த அந்த 4 ஆண்டுகளிலும், ‘பாஜக’வின் அடிவருடியாக இல்லாமல், முழுக்க முழுக்கத் தமிழரின் மேன்மைக்காகவே உங்களை நீங்கள் அர்ப்பணித்திருந்திருந்தால்...
ஒரு ஸ்டாலின் என்ன, ஓராயிரம் ஸ்டாலின்கள் ஒருங்கிணைந்து மிகப் பெரும் போர் நிகழ்த்தியிருந்தாலும்[கடந்த சட்டமன்றத் தேர்தலில்] நீங்கள் முதல்வர் ஆவதைத் தடுத்திருக்க முடியாது.
நடந்ததை நினைத்து வருந்திப் பயனில்லை. இனி நடக்கவிருப்பதைப் பற்றி யோசிப்போம்.
‘தவளை - எலி’ நட்பும், அதனால் எலிக்கு நேர்ந்த கதியும் பற்றிய கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இதன் முலம் நீங்கள் பெறத்தக்க படிப்பினை, ‘பாஜக’வுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதைத் தவிர்த்தால் எலிக்கு நேர்ந்த அவலம் உங்களுக்கு[கட்சிக்கு] நேராமல் தடுக்கலாம் என்பதே.
மேலும், அடுத்துவரும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில், உங்களின் வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.
எனவே, வருமானவரித் துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் உங்களைத் தயார் செய்துகொண்டு, உங்களின் வாழ்நாளைத் தமிழினத்தின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணியுங்கள்.
அர்ப்பணித்தால்.....
நீங்கள் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது உறுதி. அது நிகழாமல் போயினும், இந்த மாநிலத்தின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கும் ஒப்பற்ற தலைவராக ஆவீர்கள் என்பது 100% நிச்சயம்!