கடவுள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால், நம்மில் பெரும்பாலோருக்கு உறக்கம் வராது; உண்ட உணவு செரிக்காது.
கடவுளின் பெயரால் கற்சிலைகளையோ, களிமண் பொம்மைகளையோ, பாம்பையோ, பன்றியையோ, குரங்கையோ கடவுளாக்கி வழிபடுவது பரம்பரைக் குணம் என்றாகிவிட்டது.
இந்தக் குணம்தான், தங்களைத் தாங்களே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் காமச் சாமியார்களையும் மதப் பூசாரிகளையும் சுகபோகமாய் வாழச் செய்கிறது.
கண்ணுக்குத் தெரியாததும், உணரவே சாத்தியம் இல்லாததுமான ஒரு சக்தியையோ, சமயச் சாயம் பூசித் திரியும் சாமியார்களையோ கடவுளாகப் போற்றிக் கொண்டாடுவதையும்விட, நாலு பேர் அறிய, கொஞ்சமேனும் நல்ல காரியம் செய்யும் நடிகைகளைக் கடவுளாக்கிக் கோயில் கட்டி வழிபடுவது கண்டிக்கத்தக்க செயலல்ல.
நடிகைகளுக்குக் கோயில் கட்டிக் கொண்டாடுவது புத்தம் புதியதொரு வழக்கமும் அல்ல.
குஷ்பு, நயன்தாரா, நமீதா, ஹன்சிகா மோத்வானி என்று ஏற்கனவே கடவுள் ஆக்கப்பட்ட நடிகைகள் கணிசமாக உள்ளனர்.
இந்த வரிசையில் கடவுளாகியிருப்பவர் நடிகை சமந்தா அவர்கள்[நவராத்திரிக் கும்மாளத்தில், ஜக்கி சமந்தாவின் இடுப்பைச் செல்லமாகக் கிள்ளியபோதே அவரும் ஜக்கியைப் போலவே கடவுள் ஆகிவிட்டார்].
கோயிலுக்குள் பெண் தெய்வம் சமந்தாவின் அழகிய சிலையையும் நிறுவியுள்ளார். சமந்தா அம்மையார், அறக்கட்டளை மூலம் ஆற்றிவரும் சமூகப் பணிகள் இப்படியானதொரு நல்ல காரியத்தில் தன்னை ஈடுபடச் செய்ததாகக் கூறியிருக்கிறார் தெனாலி சந்தீப்.
தெனாலி சந்தீப்பிடம் நாம் வைக்கும் ஒரு கோரிக்கை:
கோயிலுக்குச் ‘சமந்தா தேவி கோயில்’ என்று பெயர் வையுங்கள். சமந்தா ஒரு நடிகை என்பதை மறந்து அவர் ஒரு பெண் தெய்வம் என்னும் நினைப்புக்கு வழிவகுக்கும் செயல் அது.
இயலுமாயின், இந்தப் புண்ணியப் பூமியில் நிறுவப்பட்டுள்ள ‘சத்துக்குரு’வின் ஆதியோகி சிலையையும், சர்தார் வல்லபாய்ப் பட்டேல் அவர்களின் சிலையையும்விட உயரமானதொரு சிலையைச் சமந்தா தேவிக்கும் வைத்திட முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கு மேலும் மேலும் புண்ணியம் சேரும்.
‘தெனாலி சந்தீப்’ அவர்களுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
***நாளை[28.04.2023] கோயில் திறக்கப்படவுள்ளது என்பது இன்றைய[27.04.2023]ச் செய்தி.