கொலை செய்யப்பட்டோ, தற்கொலை புரிந்தோ, நோயில் சிக்கி நொந்து மனம் புழுங்கியோ, பட்டினி கிடந்தோ, இயற்கைச் சீற்றத்தில் சிக்கி உருக்குலைந்தோ, இன்னபிற வழிகளிலோ நாம் அழிவது நிச்சயம். ஆனால், இவற்றில் வாய்க்கவிருப்பது, அதாவது, நம் அழிவுக்கான வழிமுறை எது என்பதும் நமக்குத் தெரியாது.
உணவு தேடித் திரிந்தது; உறங்கியது; காதல், காமம் என்று இணை தேடி அலைந்தது; மது போதையில் மயங்கியது; புகழ்ப் போதையில் மிதந்தது என்றிவை போன்றவற்றிற்கு வீணடித்த நேரங்களைக் கழித்தால் நாம் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்த காலம் வெகு வெகு அற்பம் என்பது மட்டும் நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
நம் ஆயுட்காலம் என்ன, அழிவு நம்மை ஆட்கொள்ளும் வழிமுறை என்ன, மன மகிழ்ச்சியுடன் நாம் வாழும் கால அளவு என்ன என்றிவை பற்றிய எந்தவொரு வினாவுக்கும் நாம் விடை அறியோம்.
இத்தனை அறியாமையுடன் படைக்கப்பட்ட நாம், மரணித்த பின்னர் நிரந்தரமாக இல்லாமல்போகிறோம் என்பதையும் திட்டவட்டமாக அறிந்துகொள்ளும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறோம்.
படைத்தவன் கடவுள் என்கிறார்கள். கடவுளை நம்புகிறவர்களிடம் நாம் கேட்கும் கேள்வி.....
நம்மை இத்தனை இழிபிறவியாகவும், அற்ப உயிரினமாகவும் படைத்தவனையா சிரம் தாழ்த்திக் கரம் குவித்து வழிபடுகிறீர்கள்?
கொண்டாடுகிறீர்கள்? விழாக்கள் எடுத்துக் கூத்தடிக்கிறீர்கள்?
சிந்திக்கவே தெரியாதா உங்களுக்கு?
* * * * *
குறிப்பு:
கடவுளை நம்பாதவர்கள் மேற்கண்ட கேள்விகளைப் புறக்கணிக்கலாம்!
====================================================================================