ஞாயிறு, 7 மே, 2023

சதை வணிகம்... அடுத்த நூற்றாண்டில்!!!

க்கள் தொகைப் பெருக்கம். பல பட்டங்கள் பெற்ற பிறகும் பண மூட்டையுடன் வேலை தேடி அலையும் அவலம். தற்காலிகப் பணியில் ஆரம்பித்து அது நிரந்தரம் செய்யப்படுவதில் காலதாமதம். அப்புறம்தான் கல்யாணம் குறித்த சிந்தனை.

வாழாவெட்டி அக்கா, முதிர்கன்னியாகத் தங்கை அல்லது தங்கைகள் அடங்கிய குடும்பம் என்றால் கல்யாணம் என்பது கானல்நீராக ஆகும் பரிதாபம்.

மணமான பிறகும் கணவன் மனைவிக்குள் மனப்பொருத்தமும் உடற்பொருத்தமும் அமையாமல் மணவிலக்கில் முடியும் கணவன் மனைவி உறவு.

எல்லாம் இருந்தும் இருவரில் ஒருவர் நோய்வாய்ப்பட்டோ, விபத்துக்குள்ளாகியோ மரணத்தைத் தழுவ ஒருவர் தனிமரமாய் அல்லாடும் சோகம்.

குடும்ப வாழ்க்கையில் புதிது புதிதாய் முளைக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ள அஞ்சி ‘தனிமை’யைத் தேர்வு செய்யும் ஆண் பெண் எண்ணிக்கை அதிகரிப்பு.

இப்படியாக, வெகு வேகமாகப் பெருகிவரும் சமுதாயச் சீர்குலைவுகள் காரணமாக, ஒழுக்க நெறி பிறழாமல் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டு இன்புறும் வாய்ப்பு அமையாத சூழலில், ஆடவர்கள் விலைமாதரை நாடிச் செல்லும் போக்கு தவிர்க்க இயலாததாக உள்ளது.

வருங்காலத்தில் இவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அந்நிலையில்.....

சதை வணிகத் தொழிலை அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சட்டதிட்டங்கள் உருவாக்கி அமல்படுத்தி, வரன்முறைப்படுத்தாவிட்டால், பாலியல் தொடர்பான ஒழுங்கீனங்களும் குற்றங்களும் பெருகிட நிறையவே வாய்ப்புள்ளது.

எத்தனைச் சட்டங்கள் இயற்றினாலும் சதை வணிகத் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது சாத்தியமே இல்லை என்பதால்தான் அதை வரன்முறைப்படுத்துவது அரசின் தலையாய கடமை ஆகிறது.

இதைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டதே கீழ்க்காணும் கதை.

இது ‘தன் விருப்பம்’ சார்ந்த பரிந்துரைப் பதிவு என்பதால் குறை காணின் பொறுத்தருள்க!

                                            *   *   *   *   *

சிறியதொரு மாளிகை போல் காட்சியளித்த அந்தக் கட்டடத்தின் நுழைவாயிலில், ‘பாலியல் புத்துணர்ச்சி நிலையம்’ என்னும் பெயர்ப்பலகையை நிதானமாக ஒருமுறை வாசித்துவிட்டு, தான் தேடிவந்த இடம் அதுதான் என்பதை உறுதிப்படுத்திய பிறகு உள்ளே நுழைந்தான் மதியழகன்.

வாடிக்கையாளரை வரவேற்கும் பொறுப்பிலிருந்த அழகுப் பெண்ணின் புன்சிரிப்பு அவனை வரவேற்றது. 

வரவேற்பு மேசைக்கு மிக அருகில் போடப்பட்டிருந்த இருக்கைகளைச் சுட்டிக்காட்டி அவனை அமரச் சொன்னாள் அவள்.

இம்மாதிரியான இடங்களுக்கு வருவது முற்றிலும் புதிய அனுபவம் என்பதால்,  இருக்கலாமா போகலாமா என்னும் மனப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தி இருக்கையில் அமர்ந்தான் மதியழகன்.

“ஏற்கனவே இங்கே வந்திருக்கீங்களா?” என்றாள், நவநாகரீக உடையில் இருந்த அந்த அழகி.

“இல்லை” என்றான் மதியழகன்.

துண்டறிக்கை[Bit Notice] ஒன்றை அவனிடம் நீட்டியவாறே, “இது விலைமகளிர் விடுதிதான். ஆனாலும், இங்கே வந்துபோகணும்னா சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்படணும். இதுல முழு விவரமும் இருக்கு.

“நீங்க எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபட்டதில்லை என்பதற்கான காவல்துறை ஆய்வாளர் சான்றிதழையும், தொற்றுநோய் எதுவும் இல்லை என்பதற்கான மருத்துவர் சான்றிதழையும் வாங்கிட்டுவரணும். காலை பத்து மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணிவரைக்கும் விடுதி திறந்திருக்கும்.

நாங்க தர்ற பட்டியலிலிருந்து உங்களுக்குப் பிடித்தமான அழகியைத் தேர்வு செய்யலாம். ஆனா, புகைப்படங்கள் அடங்கிய பெண்களின் பட்டியலிலிருந்துதான் அவரை நீங்க தேர்வு செய்யணும். காரணம், அவங்களை வரிசையில் நிறுத்தி ஒருத்தியை மட்டும் தேர்வு செய்யும்போது மத்தவங்க மனசால ரொம்பவே காயப்படுவாங்க.

அப்புறம்..... நீங்க செலுத்துற கட்டணத்தைப் பொருத்து அதுக்கான நேரம் ஒதுக்கப்படும். கூடுதல் நேரம் இருந்துட்டுப் போகலாம்னு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அன்பளிப்பு தரக் கூடாது. நீங்க தந்தாலும் அவங்க வாங்க மாட்டாங்க.

அடுத்து முக்கியமா நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது...”

சற்றே இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தாள் அவள். “மது அருந்திட்டு வரக்கூடாது. அதிக நேரம் இருக்கக் கண்ட கண்ட மாத்திரைகளை விழுங்கிட்டு வரவும்கூடாது. உங்களைத் திருப்திபடுத்துவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது எங்களுடைய கடமை. இங்குள்ள பெண்களுக்கும் தேவையான பயிற்சி தரப்பட்டிருக்கு.

ஆக, கையில் பணத்தோடு மட்டும் நீங்க வந்தால் போதும். இணையம் மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

உங்களுக்கான நேரத்தையும் தவறாம முன்கூட்டியே தெரியப்படுத்தணும்.

இதுக்கு மேலேயும் உங்களுக்குச் சந்தேகம் ஏதும் இருந்தா தயங்காம கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். தேவைப்பட்டா, அப்புறமா உங்ககூட இருக்கப்போற பெண்கிட்டேயும் விசாரிக்கலாம்.”

-பேசி முடித்த வரவேற்பாளி, “நீங்க இந்த விடுதியைத் தேடி வந்ததை எங்களுக்கான மிகப் பெரிய கவுரவமா நினைக்கிறோம். உங்களின் வருகையை மீண்டும் ரொம்ப ஆவலோடு எதிர்பார்க்கிறோம்” என்று சொல்லி அழுத்தமானதொரு புன்னகையையும் அவளின் அழகு முகத்தில் தவழவிட்டாள்.

முழு மனநிறைவுடன் அவளிடம் விடைபெற்றுப் புறப்பட்டான் மதியழகன்!