பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 27 ஜூன், 2023

ஆறறிவு யாருக்கு? ‘சீட்டு’ குலுக்கிய கடவுள்!

“உயிர்களில்[உயிரி>உயிர் உடையது] ஏற்பட்ட படிப்படியான மாற்றங்களே அவை பல்கிப் பெருகிடக் காரணமாக அமைந்தன” என்றார் அறிஞர் டார்வின்.*

அவற்றை ஓரறிவின, ஈரறிவின, மூவறிவின, நாலறிவின, ஐந்தறிவின என்று வகைப்படுத்தினார்கள் அறிவியலாளர்கள்.

“பரிணாமமாவது புடலங்காயாவது, பிரபஞ்சக் கோள்களையும் நட்சத்திரங்களையும் மட்டுமல்லாது, ஐந்து வகையான உயிரினங்களையும் படைத்தருளிப் பரிபாலனம் செய்பவர் கடவுள்” என்றார்கள் ஆன்மிகப் பேரருளாளர்கள்.

ஐந்து வகையான உயிரினங்களில், விலங்குகளும் பறவைகளும் ஐந்தறிவு வாய்க்கப்பெற்றவையாகும்.

ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான உயிர்கள் கடவுளால் எவ்வாறு படைக்கப்பட்டனவோ அவ்வாறே இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

சில ஆயிரம் ஆண்டுகள்வரை, மனிதர்களும் எப்படிப் படைக்கப்பட்டார்களோ அப்படியே[ஐந்தறிவுடன்] வாழ்ந்தவர்கள்தான்.

கடவுள் மனிதர்களுக்கு மட்டும் ஆறாவதாக ஓர் அறிவை[சிந்திக்கும் அறிவு]க் கொடுத்தது புரியாததொரு புதிர்[எல்லாம் பரிணாம வளர்ச்சியே என்றாலும், அது நிகழ்வதற்கான காரணம் அறியப்படாததால் அதுவும் ஒரு புதிர்தான்] எனலாம்.

புதிர் பொதிந்த இந்த அதிசயத்தை நிகழ்த்துவதற்கான காரணம் எதுவாக இருப்பினும், ஆறாவது அறிவைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பை[அதிர்ஷ்டம்?] மனிதர்களுக்கு மட்டும் அவர் ஏன் வழங்கினார் என்பது விடை அறிய இயலாத இமாலயக் கேள்வி.

விலங்குகள், பறவைகள் என்று தான் படைத்த அனைத்து உயிர்கள் மீதும் அவர் அளப்பரிய பாசமும், மிகு பரிவும் கொண்டிருப்பார் என்பதால், எந்த இனத்துக்குச் சிந்திக்கும் அறிவைத் தருவது என்று வெகுவாக மனம் குழம்பியிருப்பார் கடவுள்.

மேலும், “எங்கள் இனத்திற்குச் சிந்திக்கும் அறிவைக் கொடு” என்று மனிதர்களோ பிற இனங்களோ கோரிக்கை வைப்பதற்கும் வாய்ப்பில்லை. ஏனென்றால், அந்த உயிரினங்கள் போலவே,  மனிதர்களும் முன்பு[ஆறாம் அறிவு வாய்க்காத நிலை] ஐந்தறிவு ஜீவன்களாக இருந்தவர்கள்தான்.

எந்தவொரு உயிரினமும் ஆறாவது அறிவுக்கான கோரிக்கையை வைக்காத நிலையில், கடவுள் மனிதனுக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கியது ஏன் என்பது நாம் மீண்டும் மீண்டும் எழுப்புகிற விடை இல்லாத கேள்வியாகும்.

“ஏன்?” என்னும் கேள்விக்கு விடை இல்லையாயினும், “எப்படி?” என்னும் கேள்விக்கான விடையை நம்மால் அனுமானிக்க[சரியோ தவறோ] முடியும்.

எப்படி?

ஆறாம் அறிவைப் பெறுவதற்கான உயிரினத்தைத் தேர்வு செய்ய, ‘சீட்டு’ குலுக்கியிருப்பார் கடவுள் என்பதே அந்த அனுமானம். குலுக்கலில் மனித இனம் தேர்வாகியிருக்கும்[ஹி...ஹி...ஹி!!!].

இதிலிருந்து அறியத்தக்க பேருண்மை என்னவென்றால்.....

மனிதனுக்குள்ள சிந்திக்கும் அறிவு கடவுளால் விரும்பி வழங்கப்பட்டதல்ல என்பதே.

உண்மை இதுவாக இருக்க, “ஆகா, கடவுள் நமக்கு ஆறறிவைக் கொடுத்தார்; அளப்பரிய இன்பங்களை வாரி வழங்கியுள்ளார்” என்றெல்லாம் மனிதர்கள் வாய் கிழிய முழங்குவதும், கோயில் கட்டிக் கொண்டாட்டங்கள் நடத்திக் கூத்தாடுவது ஆறறிவுக்கு அழகல்ல!

                                            *  *   *   *   *   

*[‘பரிணாமம்’ என்பது எளிய தன்மை கொண்ட உயிரிகளிலிருந்து மேம்பட்ட தன்மை கொண்ட உயிரினங்களில் படிப்படியாக ஏற்படும் மாற்றங்களாகும்].