அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 13 ஜூலை, 2023

ஏழுமலையான் மேற்பார்வையில் ‘சந்திராயன் -3’ பயணம்!!!


ந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

நிலவின் மேற்பரப்பை ஆராய்வது, ரோவரில் உள்ள பல கேமராக்களின் உதவியுடன் படங்களை அனுப்புவது போன்ற பணிகளை இது செய்யும்[இதற்கு முன் ‘சந்திராயன் -2’ அனுப்பியதில் எதிர்பார்த்த பலன்ககள் கிடைக்கவில்லை; அதாவது, ‘சந்திராயன் -2’ பயணம் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது].

நாளை[14.07.2023] அது[சந்திராயன் -3] விண்ணில் ஏவப்படவுள்ளது.


விஞ்ஞானிகளாக மட்டுமல்லாமல் ஏழுமலையான் பக்தர்களாகவும் உள்ள நம் இஸ்ரோ விஞ்ஞானிகள்,  சந்திரயான் -3 விண்கலம் நாளை விண்ணில் வெற்றிகரமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக, இன்று[12.07.2023] காலை திருப்பதியில்  இதன் மாதிரியைச் சுவாமி சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினார்களாம்.[https://tamil.oneindia.com/news/tirupati/chandrayaan-3-isro-scientists-team-offer-prayers-at-tirupati-venkatachalapathy-temple-520880.html]


அறிவியல் துறையைப் பொருத்தவரை, மிகப் பெரும்பாலான விஞ்ஞானிகள் மனித அறிவை நம்புகிறார்களே தவிர, கடவுளை வழிபட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவதோ, விண்கலன்களை அனுப்புதல் போன்ற செயல்களை மேற்கொள்ளும்போது, விண்கலத்தின் மாதிரியைச் சாமிகளின் முன்னிலையில் வைத்து வழிபடுவதோ வழக்கத்தில் இல்லை.

நம் விஞ்ஞானிகள் சந்திராயனை ஏழுமலையான் முன்வைத்து வழிபாடு நிகழ்த்தியிருப்பதால் நல்ல பலன் கிட்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள்[!?].

அவர்களின் நம்பிக்கை வாழ்க.

சந்திரனை நோக்கிய நெடும் பயணத்தில் விண்கலத்தினுள் ஏதேனும் பழுது ஏற்பட்டால், ஏழுமலையான் அப்பழுதை உடனுக்குடன் ‘ரிப்பேர்’ செய்துவிடுவார் என்பது உறுதி.

சூழ்நிலை மாற்றத்தால் சந்திராயன் தீப்பற்றி முற்றிலுமாய் எரிந்து சாம்பலானால்கூட புத்தம்புதியதொரு விண்கலத்தைப் படைத்து அதன் பயணத்தைத் தொடரச் செய்வார் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆகவே, உலகின் ஆகச் சிறந்த ‘நம்பர் 1’ இந்திய விஞ்ஞானிகள் கலத்தின் மாதிரியைத் திருப்பதியான் திருவடியில் வைத்து வழிபட்டது பெரும் பாராட்டுக்குரியதேஏஏஏ.

இத்துடன் திருப்தி அடைந்துவிடாமல், ‘சந்திராயன் -3’ஐ ஏவுவதற்கு முன்னால் ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா, பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கர், குர்மீத் ராம் ரஹிம் சிங், அமிர்தானந்தமயி, நிர்மல் பாபா, ராம்பால், ஆசாராம் பாபு போன்றவர்களைக் கொண்டு விண்கலத்துக்குத் திருஷ்டி சுற்றிப்போடலாம்.

தேர்ந்த வாஸ்து வல்லுநர்களைக்கொண்டு வாஸ்து தோசம் உள்ளதா என்பதைச் சோதித்து, குறைகள் இருப்பின் அவற்றைப் போக்கிய பிறகு, கலத்தை ஏவுவதற்கான பணிகளைத் தொடரலாம்.

“ஏழுமலையானைத் தொழுதுவிட்டுத்தானே விண்கலன்களை அனுப்புகிறீர்கள். உங்கள் முயற்சி சில/பல தடவைகள் தோல்வியில் முடிவதும், ஏழுமலையான் கருணை காட்டாதது ஏன்?” என்று ஏடாகூடமாக எவரேனும் கேள்வி எழுப்பினால், உள்துறை அமைச்சர் அமித்ஸுவிடம் சொல்லி அவர்களை ‘உள்ளே’ தள்ளிக் கம்பி எண்ண வைப்பது மிக மிக நல்லது.

‘சந்திராயன் -3’ பயணம் பெரும் சாதனை நிகழ்த்துவதாக அமைந்திட, பரிசுத்தப் பக்தகோடிகளான நம் விஞ்ஞானிகளைப் போலவே நாமும் ஏழுமலையானை வணங்கி வாழ்த்துகிறோம்!