திங்கள், 24 ஜூலை, 2023

“விழாக்களில் குழு மோதலா? இழுத்து மூடு கோயிலை”... நீதியரசரின் ‘மரண அடி’த் தீர்ப்பு!!!

//மயிலாடுதுறை ‘அருள்மிகு ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன்’ கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே தகராறு[கோயிலுக்குள் விநாயகர் சிலை வைப்பதில் பிரச்சினை] ஏற்பட்டது.


வட்டாட்சியர் தலைமையில் அமைதிக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் இரு பிரிவினரும் கலந்துகொண்டனர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை.

கலவரம் மூளும் சூழல் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்குப் பின்னர், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கீழ்க்காணும் தீர்ப்பை வழங்கினார்.

"கோயில் திருவிழாக்கள் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்கு மாறாக வன்முறைகளை உருவாக்குகின்றன. இவை, பக்தியை வளர்ப்பதற்குப் பதிலாக, குழுக்கள் தங்களின் வலிமையை வெளிப்படுத்துவதற்கான காரணிகளாக மாறிவிட்டன. குழுவினரின் தகராறைத் தீர்ப்பதில் வருவாய்த் துறையும் காவல் துறையும் தேவையில்லாமல் தங்கள் சக்தியை வீணடிக்கின்றன. எனவே, கோயில்களை மூடிவைப்பதே நல்லது.”// -The Times of India

                                    *   *   *   *   *

இதே மாதிரியான பிரச்சினை, விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில்[ஜூன், 2023] உருவானது.

இக்கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது, பட்டியலின இளைஞர்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்தார்கள்.

அவர்களை மற்றொரு சமூகத்தினர் தடுத்தார்கள்.

பட்டியலினத்தவர் சாலை மறியலில் ஈடுபட, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதம் போல் கழிந்த நிலையிலும் பிரச்சினை தீரவில்லை{விழுப்புரம் கோட்டாட்சித் தலைவர் தலைமையில் 5 முறை சமரசக் கூட்டம் நடத்தியும் சுமுகத்தீர்வு ஏற்படவில்லை[தினகரன்,08.06.2023]}.

இந்நிகழ்வைச் சுட்டிக்காட்டி, போட்டிக் குழுக்களால் கோயில்களில் கலவரங்கள் ஏற்படாதிருக்க, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்துக் கிழ்க்காணும் வகையில் நிரந்தரத் தீர்வு ஒன்றினை நான் பரிந்துரை செய்திருந்தேன்.

அந்தப் பரிந்துரை ஏற்புடையதே என்பதை மேற்கண்ட, நீதிபதியின் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

பதிவின் முகவரி: https://kadavulinkadavul.blogspot.com/2023/06/blog-post_11.html

பரிந்துரை:

//காலக்கெடு வைத்துக் காத்திருந்து, இரு தரப்பாரும் மனம் மாறவில்லை, என்றால்திரவுபதி அம்மனுக்கான அந்தக் கோயிலைக் கல்விக் கடவுளான கலைமகள் உறைகிற கல்விக்கூடமாக மாற்றுவதே ஊர் மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் செயலாகும்.

இம்முடிவு குறித்து, அரசு சிந்தித்து விரைவில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை, கோயில்களைக் கலவரக் கூடங்களாக்கும் அனைத்து ஊர் மக்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்பது உறுதி//