புதன், 16 ஆகஸ்ட், 2023

‘ரிஷி சுனக்’கின் சுணங்காத இந்துமதப் பற்று!!!

ங்கிலாந்து நாட்டவரில் மிகப் பெரும்பான்மையோர் சார்ந்துள்ள மதம் கிறித்தவம். இஸ்லாம், இந்து, பௌத்தம் போன்ற மதங்களைச் சார்ந்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.


இந்து மதத்தைச் சார்ந்தவரான ‘ரிஷி சுனக்’கைத் தங்களின் பிரதமராகத் தேர்வு செய்தது, ‘மத வெறி’ அற்ற அவர்களின் ‘மனிதம்’ போற்றும் உயரிய குணத்தையும், பரந்த மனப்பான்மையையும் அடையாளப்படுத்துகிறது.


இந்த நனிநாகரிகம் தெரிந்த நல்லவர்களின் மனம் நோகடிக்கும் செயலைச் செய்திருக்கிறார் ‘ரிஷி சுனக்’[இங்கிலாந்து நாட்டவர் எவரும் இது குறித்துக் கண்டன அறிக்கை வெளியிடாமலிருந்தால், அது அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது].


யாரோ மொராரி பாபு’வாம்; ஆன்மிகத் தலைவராம். இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில்[ஆகஸ்டு 15], கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அவர் நிகழ்த்திய ‘ராம காதை’ உபன்யாசத்தில்[இடையிடையே பாடல் பாடி கதை சொல்லுதல்] கலந்துகொண்ட ரிஷி, கீழ்க்காணும் வகையில் பேசியிருக்கிறார்:



“இந்தியச் சுதந்திரத் தினத்தன்று ‘ராம கதை’ நிகழ்ச்சியில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். நான் இங்குப் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்.


என்னைப் பொருத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழிநடத்துகிறது.


இந்து மத நம்பிக்கை எனக்குத் தைரியத்தையும், வலிமையையும், நம் நாட்டிற்கு என்னால் முடிந்ததைச் செய்யும் உறுதியையும் அளிக்கிறது.


ராமாயணம், பகவத் கீதை மற்றும் அனுமான் சாலிசா ஆகியவற்றை நினைவுகூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன்.


வாழ்க்கையின் சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி உழைக்கவும் ராமர் எப்போதும் ஓர் உத்வேகமான நபராக இருப்பார் என நம்புகிறேன்.”


[பிரதமர் ‘ரிஷி சுனக்’ தனது உரையை ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் “ஜெய் ராம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது].


-இது மாலை மலரிலும் பிற ஊடகங்களிலும் வெளியான செய்தி.


ஓரளவுக்கேனும் சிந்திக்கும் திறனற்றவர்கள், விநாயகர் பற்றிய புராணக் கதைகளையும், குரங்கை ஆறறிவு ஜீவனாகப் படைத்த வால்மீகியின் கதையையும் முழுமையாக நம்புவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.


'ரிஷி சுனக்' இக்கதைகளையெல்லாம் நம்புவதோடு, வரலாறுகளில் பேசப்படாதவரும், வெறும் கற்பனைக் கதைகளில் மட்டும் கதாநாயகர் ஆக்கப்பட்டவருமான ராமனைக் கடவுள் அவதாரம் என்று நம்புவதும், “ஜெய் ராம்” என்று முழக்கமிடுவதும், மதச்சார்பு உள்ளவர்கள் எனினும், நவீன அறிவியலைப் போற்றுகிற இங்கிலாந்து மக்களை அவமதிக்கும் செயலாகும்.


இவரின் இச்செயல்பாடு, தனிப்பட்ட உரிமையின் பாற்பட்டது என்றால், இந்நிகழ்வு பற்றியும், இவர் ஆற்றிய உரை பற்றியும் ஊடகங்களில் செய்தி வெளியாவதைத் தடை செய்திருத்தல் வேண்டும் என்பது நம் கருத்து.


இப்படிக் கருதுவதோடு, மூடநம்பிக்கைகளின் உறைவிடமான இந்த ‘ரிஷி சுனக்’கைத் தங்களின் பிரதமராக இங்கிலாந்து மக்கள் தேர்ந்தெடுத்தது எப்படி என்று வியக்கவும் செய்கிறேன்!


* * * * *

https://www.maalaimalar.com/news/world/uk-pm-rishi-sunak-says-i-am-here-not-as-prime-minister-but-as-a-hindu-at-morari-bapu-ramkatha-650273