எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

அவரு[னு]க்கு நன்றி சொல்வதா, சாபம் கொடுப்பதா?!

பிறந்ததிலிருந்து, சிசுவில் இருக்கும் உறுப்புகள் படிப்படியாக வளர்வதும், கூடுதல் உறுப்புகள் இணைவதுமாக நம் உடம்பு வளர்ச்சியடைகிறது.

சிந்திக்க உதவுகிற மூளையும் வளர்கிறது.

வளர்தல் என்பது இயல்பானது; நம் ‘விருப்பம்’ காரணமாகவோ வேண்டிக்கொண்டதாலோ நிகழ்வது அல்ல.

ஆளாளுக்குக் கூடக் குறைய என்றிருந்தாலும் வளர்வது தொடர்கிறது.

ஒரு கட்டத்தில், வளர்வது தடைபட்டு, தேய்வதும் அழிவதும் ஆரம்பமாகின்றன. வாழ்க்கைச் சூழல், வாழும் முறை போன்றவற்றால், அவை வித்தியாசப்படலாம்.

ஆனால்.....

ஏதோவொரு வயதில், அல்லது, மனிதர்களுக்கான அதிகபட்ச வயதைத் தொட்டுவிட்ட நிலையில் முற்றாய் அழிந்துபோகிறோம்.

உடல் மட்டுமல்லாமல், நாம் பெற்றிருந்த அறிவுடன், அன்பு, பற்று, பாசம், நேசம், காதல், காமம் என்று அத்தனை உணர்வுகளும் இல்லாமல் போகின்றன.

பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடிக்கும் இம்மண்ணில் நாம் விட்டுச் செல்லும் நமக்கான அடையாளம் எதுவுமே இல்லை.

விரும்பினால்.....

எதிர்பால் நபரொருவரைத் துணைசேர்த்து, வாரிசையோ வாரிசுகளையோ பெற்றுப் போட்டுவிட்டுச் செத்தொழியலாம்.

இதுதானே வழ்க்கை!

கடவுள் இருப்பது உண்மையானால், இப்படி நம்மை வாழப் பணித்ததற்காக அவருக்கு நன்றி சொல்வதா, அல்லது, அவனுக்கு “நாசமாப் போ” என்று சாபம் கொடுப்பதா?


***சங்ககாலத் தமிழர்கள் சிறந்த சிந்தனையாளர்கள். இப்போது போல அப்போது மூடர்களின் ஆதிக்கம் இல்லை!

“ஓர் இல்லத்தில் மகிழ்ச்சி ஆரவாரம். இன்னொன்றில் அழுகைக் குரல் ஒலிக்கும் அவலம். படைத்தவன்[கடவுள்] கிஞ்சித்தும் பண்பில்லாதவன்” -புறநானூறு[பாடல் 194]ப் பாடலொன்றின் உட்கருத்து இது.