வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

எகிறும் ஏழுமலையான் பக்தர்கள் எண்ணிக்கை! 'தரிசனப் பலன்' குறித்த ஆய்வு தேவை!!

உலகப் புகழ் பெற்ற கோடி கோடி கோடீஸ்வரக் கடவுள் ஏழுமலையான்.

அயல்நாடுகளிலிருந்தும் இவரைத் தரிசிக்க வருகிறார்கள்.

வருகைதரும் உள்நாட்டுப் பக்தர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வருகிறார்கள்.

வருமானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

பக்தர்களுக்குத் தரிசனம் தருவதன் மூலம் அவர் ஒரு நாளில் சம்பாதிப்பது ஒரு கோடி ரூபாய். அதுவே விசேட நாட்களில் 10 கோடியைத் தாண்டுகிறது.

இது ஊடகங்கள் தரும் புள்ளிவிவரம்.

ஐந்தென்ன, பத்தென்ன நாள்தோறும் அவர் ஐயாயிரம் கோடி, பத்தாயிரம் கோடி என்று சம்பாதித்தாலும் நமக்கு மகிழ்ச்சியே.

நம் கவலையெல்லாம்.....

அவரைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை எண்ணி மாளாத அளவுக்குப் பெருகுகிறதே என்பதுதான்.

காரணம்.....

ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்வோர் பகுத்தறியும் திறனில்லாத அப்பாவிகள் என்பதே.

ஏழுமலையானை நேர்ந்துகொண்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை வளர்க்கப்பட்டுவிட்டதே தவிர, ஏழுமலையானின் அருளால் அவர்களில் எத்தனைப் பேருடைய குறை தீர்ந்தது என்று எவரும் கேள்வி எழுப்புவதே இல்லை; அது பற்றிச் சிந்திப்பதும் இல்லை.

குறை தீரப்பெறுபவர்கள், மிகச் சிறுபான்மையினராக இருப்பினும், அவர்கள் தவறாமல், “நான் திருப்பதிச் சாமியை வேண்டிக்கொண்டேன். அவர் என் பிரச்சினை தீர்த்தார்”[இது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம்] என்று கண்ட கண்ட பேர்களிடம் எல்லாம் சொல்லி வைக்க, இந்தச் செய்தி காட்டுத் தீ போல மக்களிடையே பரவுகிறது; திருப்பதி செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆனால்.....

குறை தீரப்பெறாத எவரும் வாய் திறப்பதே இல்லை.

“நான் பத்து தடவைக்கு மேல் அந்தச் சாமியைத் தரிசிக்கப் போனேன். போகும்போதெல்லாம் பத்தாயிரம் இருபதாயிரம் என்று உண்டியலில் கொட்டினேன். எனக்கான குறை நிவர்த்தி ஆகவே இல்லை” என்று எவரேனும் ஒருவர்கூட வாய் திறந்து சொன்னதே இல்லை.

பக்தர்கள் செய்யும் இந்த மாபெரும் தவறு காரணமாகத்தான் ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகுகிறது.

மாநிலத்திலும் மத்தியிலும் இருக்கும் ஆட்சியாளர்கள், மூடர்களின் புத்திக் குறைபாடுடையோர் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மிக அவசியமானதொரு நடவடிக்கையைச் செயல்படுத்துவதன் மூலம், முட்டாள்களின் மூடநம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகவேனும் குறைக்கலாம்.

‘கோயிலுக்கு வருவோரிடம் இலவசமாக ஒரு படிவத்தைக் கொடுத்து, ஆறுமாதத்திற்குள்ளாக, அவர்கள் ஏழுமலையானைத் தரிசித்ததால் பலன் பெற்றார்களா அல்லவா என்பதைத்  தெரியப்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்துவதே அந்த நடவடிக்கை[தெரியப்படுத்துவோர் எண்ணிக்கை வரவேற்கத்தக்கதாக அமையும் என்று நம்பலாம்].

பலன் பெற்றவர்களின் சதவீதத்தை மாதந்தோறும் அறிக்கையாக[ஊடகங்களில்] வெளியிடுதல் வேண்டும்.

இதன் மூலம், ஏழுமலையான் என்னும் கடவுள் உண்மையானவரா, அருள் உள்ளம் கொண்டவரா அல்லவா என்பதையெல்லாம் மக்கள் அறிவார்கள்; மனம் திருந்துவார்கள்.

                                         *   *   *   *   *

https://www.maalaimalar.com/news/national/a-new-form-of-coins-system-in-tirupati-esummalayan-temple-643124