அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 5 ஆகஸ்ட், 2023

உயிருள்ளபோதே மொய்க்கும் ஈக்கள்! அரிக்கும் புழுக்கள்!!

 ‘கோவை-சேலம்’ தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு கங்காபுரத்தில் அமைத்துள்ளது ‘இமயம் புற்றுநோயாளிகள் காப்பகம்’.

மருத்துவர் அபுல்ஹாசன், கண் மருத்துவர் சுகுமார், மருத்துவர் ராஜா ஆகியோர் இணைந்து இந்த மையத்தைத் தொடங்கினார்கள். இவர்கள் மூவரும்  இமயம் அறக்கட்டளையின் நிர்வாகிகள்.

“எவ்வகையிலும் சிகிச்சையளித்துக் காப்பாற்ற முடியாதவர்கள் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கான 'காப்பகம்' இது. இங்கே உள்ளவங்க அனுபவிக்கிறது நம்ம கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட வலி. ‘ஊசி போட்டுக் கொன்னுடுங்க’ன்னு கெஞ்சுற அளவுக்கு அத்தனைக் கொடுமையானது இந்த வலி” என்கிறார் மருத்துவர் அபுல்கசன்.

இங்குப் பணியாற்றுகிற முருகன்-பூங்கொடி தம்பதியர் சொல்கிறார்கள்[இவர்களின் பிள்ளைகளும் இங்கேதான் வளர்கிறார்கள்]:

வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கன்னத்தின் ஒரு பக்கத்தில் ஓட்டை விழுந்துடும். மறு பக்கம் வழியா சாப்பிடக் கொடுக்கணும். ஒரு துணுக்கு அந்தப் பக்கம் பட்டுட்டாலும் கதறிடுவாங்க.


மார்பகப் புற்றுநோய் வந்தவங்களுக்கு நெஞ்சுப் பகுதி குழி ஆயிடும். அதைத் தினமும் சுத்தம் செய்யணும். ஒரு நாள் சுத்தம் செய்யலேன்னாலும் புழு வந்துடும். வலியைத் தாங்கவே முடியாது. ஊசி போட்டுக் கொன்னுடுங்கன்னு அலறுவாங்க.

சொந்தக்காரங்க இங்கேயே தங்கியிருந்து நோயாளிகளைக் கவனிச்சுக்கலாம். அதுக்கான வசதிகள் இங்கே இருக்கு. ஆனா, பெரும்பாலும் யாரும் வந்து தங்கறதில்லை.  உச்சபட்ச சகிப்புத்தன்மையும் கருணையும் தேவைப்படுற சேவை இது. நம்மில் எத்தனை பேருக்கு இந்தச் சேவை மனப்பான்மை இருக்கு?"

புற்றுநோயின் இறுதிக்கட்ட நிலை மிகக் கொடுமையானது. மூச்சு இருக்கிறதா, இல்லையா என்பதைக்கூட அருகில் சென்று கவனித்தால் மட்டுமே தெரியும். உயிர் உள்ளபோதே, உடலில் ஈக்கள் மொய்ப்பதையும், புழுக்கள் அரிப்பதையும் பார்த்துள்ளேன். சில நேரங்களில் புற்றுநோயால் ஏற்படும் துர்நாற்றம், உற்றாரிடமிருந்து அவர்களை மேலும் தனிமைப்படுத்திவிடும்.

அப்துல் கலாம் திறந்துவைத்த இந்தக் காப்பகத்தில், கடந்த 10 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்டோர் இறுதி நாட்களைக் கடந்துள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 75 சதவீதம்  பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள். 

நோயைக்  குணமாக்கும்  மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதால், நல்ல சிகிச்சை அவர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. பல மருந்துகளின் விலை ஆயிரக்கணக்கில் உள்ளது. இந்த நிலையில், புற்றுநோயிடம் முதலில் தோற்பவர்கள் ஏழைகள்தான். அதேபோல, குழந்தைகள், இளைஞர்களையும்கூட இந்த நோய் விட்டுவைப்பதில்லை. 

நிறையக் குழந்தைகள், பிறக்கும்போதே புற்றுநோயுடன் பிறக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தப் புற்றுநோய்க்கு நிறைய ஊசி மருந்துகள் உள்ளன. ஆனாலும், இவை சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்த விலையில், மருந்து, மாத்திரைகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் சுகுமார்.

***வாசிக்கும்போதே ஒட்டுமொத்த உடம்பும் நடுநடுங்குகிறது. மரணம் கொடியதல்ல. அது தரும் வலி கொடியது... கொடியது!

* * * * *
உதவி: ‘இந்து தமிழ்’