புதன், 6 செப்டம்பர், 2023

நான் இனி ‘பாரத்தன்’[Barath-an]?!?!

இன்றுவரை ‘இந்தியன்’ ஆக இருக்கும் நான் இன்னும் கொஞ்சம் நாட்களில்  ‘பாரத்தன்’[Barath-an] ஆக  மாறி இருப்பேன்.

இந்தியாவின் பெயர் ‘பாரத்’ என்றாகும்போது, பாரத்தின் குடிமகனான நான் ‘பாரத்தன்’ என்றுதானே அழைக்கப்படுவேன்?

அன்று சிதறிக் கிடந்த அத்தனை நாடுகளையும்[நூற்றுக் கணக்கில்] அடிமைப்படுத்தி, ஒருங்கிணைத்து, ஒரு நாடாக்கி, அதற்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டி,  சில நூறு[200க்கும் மேல்?] ஆண்டுகள் ஆண்டு முடித்துச் சுதந்திரம் கொடுத்துச் சென்றான் ஆங்கிலேயன்.

அந்தப் பெயர்தான் பல்வேறு மொழி பேசும் பல இனத்தவரை ஒரு நாட்டவர் ஆக்கியது.

அவன் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருந்தவரை நான் இந்தியன். அவன் வெளியேறிச் சென்ற பிறகும் நான் இந்தியனாகத்தான் இன்றளவும் இருந்துகொண்டிருக்கிறேன்.

இப்போது, ‘இந்தியா’ என்னும் பெயரை மாற்றி, ‘பாரத்’ ஆக்கப்போகிறார்களாம்[ஏற்கனவே, இந்திய அரசியல் சாசன இந்திப் பதிப்பில் ‘பாரத்’ இடம்பெற்றுள்ளதாம்].

அதென்ன ‘பாரத்’?

அப்படியொரு பெயரில் ஆங்கிலேயனின் வருகைக்கு முன்பு ஒரு நாடு இருந்ததாக வரலாறு இல்லை.

யாரோ ஒரு மன்னன்[பரதன்] முன்பொரு காலத்தில் ஆண்டதாகச் சொல்கிறார்கள். இன்றைய இந்தியா அப்போது ஒரு நாடாக இல்லாத நிலையில், அந்தப் பெரிய நாட்டை அவன் ஆண்டான் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. பஞ்ச பாண்டவர் துரியோதனாதியர் ஆண்டதெல்லாமும் பழங்காலக் கதைகளே. அந்தக் கதைகளிலிருந்து சில காட்சிகளுக்கு, பிற்காலத்தில் மாமல்லபுரம் போன்ற இடங்களில் சிலை வடிவம் தரப்பட்டன. கல்வெட்டு, செப்பேடு போன்ற[இவற்றிலும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உள்ளன] ஓரளவுக்கேனும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதுமில்லை.

அப்புறம் எப்படி இப்போது இந்த நாட்டுக்குப் ‘பாரத்’ என்று பெயர் சூட்டத் திட்டமிடுகிறார்கள்.

‘பாரத்’ என்பது, ‘இந்தி’யர்களையோ, அவர்களுடன் ஒட்டி உறவாடி அனுசரித்து வாழ்பவர்களையோ குறிப்பதல்ல; அதுவும் ‘இந்தியா’ போல மத இனச் சார்பற்ற ஒரு பொதுச் சொல்தான் என்றால், இந்நாட்டு மக்கள் அனைவரும் அதை ஏற்க வேண்டும் என்று ஆளுவோர் கோரிக்கை[மாநில அரசுகளிடம்] வைத்திருக்க வேண்டும். 

செய்யவில்லை.

பெயர் மாற்றம் உறுதி என்றால், அதைச் செய்வது வரவேற்கத்தக்கதல்ல. அது மக்களாட்சி நடைபெறுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஆட்சியாளருக்கு அழகல்ல.

நம்மை அவமானப்படுத்தவே ‘இந்தியா’ என்று பெயர் வைத்தான் ஆங்கிலேயன் என்கிறார்கள் சில பெரிய மனிதர்கள். கலப்படமில்லாத பொய் அது.

பொய்யுரைப்பதோடல்லாமல், G20 மாநாட்டை ஒட்டி, குடியரசுத் தலைவரின் பெயரால் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் ‘இந்தியா’வை ‘பாரத்’ ஆக்கியிருக்கிறார்கள்.

ஒரே ஒரு சொல்லை மட்டும் மாற்றினால் ஆங்கிலேயனால் நமக்கு நேர்ந்த அவமானம் மறைந்துவிடுமா? அழைப்பிதழையே ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியில் வெளியிடுவதுதானே?[ஆங்கிலத்தில் வெளியிட்டால் ‘இந்தியா’; இந்தியில் என்றால் ‘பாரத்’ -என்றிப்படி நடைமுறைப்படுத்தியிருக்கலாமே?]

ஏன் செய்யவில்லை?

நாங்கள் தமிழர்கள்[இனத் தொடர்புள்ள மற்ற இனத்தவர்களை இணைக்கவில்லை].

இந்தியாவின் பொது மொழியாக ஆங்கிலமே[அதனால் நாம் பெற்ற/பெறும் பயன்கள் நிறையவே] நீடிக்கலாம் என்பது போல, ‘இந்தியா’ என்னும் பொதுச் சொல்லே இந்தியாவின் பெயராக நீடிக்கலாம் என்பது எங்களின் ஒருமித்த[சில அடிமைகளும் கைக்கூலிகளும் விதிவிலக்கு] கருத்து[இம்மாதிரி வேறு பல இனத்தவரும் நினைக்கக்கூடும்].

பெரும்பான்மை இனத்தாரின் எண்ணங்களை அலட்சியப்படுத்தி, குறிப்பிட்ட சில இனத்தாரின் வாக்குகளை[அடுத்து வரவிருக்கும் தேர்தலில்] மட்டும் குறிவைத்துப் ‘பெயர் மாற்றம்’ செய்யும்[செய்யவிருக்கும்] தவறான செயலில் ஈடுபடுவது இந்தப் பரந்து விரிந்த, பல்வேறு பழக்கவழக்கங்களையும் கலாச்சாரங்களையும் கொண்ட மக்களின் ஒற்றுமைக்கு உலைவைக்கக்கூடும் என்று சம்பந்தப்பட்டோரிடம் பரிவுடன் எடுத்துரைக்கிறோம்.

ஏற்பதும் ஏற்காததும் இந்த இந்திய[இப்போதைய பெயர்] நாட்டின் தலைவிதியைப் பொருத்தது!


முக்கியக் குறிப்பு: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில்[18-22] 'இந்தியா' 'பாரத்' என்று பெயர் மாற்றுப்பட உள்ளது என்பது போல் வெளியாகியுள்ள தகவல்கள் "வதந்திகள்" என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அருணாக் தாக்கூர் கூறியுள்ளார்[வதந்தி பரவிட இடம்தருவது வரவேற்கத்தக்கது அல்லவே] என்பது செய்தி.