அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 7 செப்டம்பர், 2023

“கோவிந்தா கோவிந்தா”வாம்! ‘விஐபி’ தரிசனமாம்!! இருக்கிற மூடநம்பிக்கைகள் போதாதா?!

ழக்கமாக மாலை நேர நடைப்பயிற்சியின்போது சந்திக்கும் நண்பன் கோவிந்தசாமி, அன்று காலையிலேயே என் வீடு தேடி வந்தான்.

கையில் ஏதோவொரு செய்தித்தாள்.

பெரியதொரு பாரத்தைக் கைமாற்றுபவன் போல், அதைப் பிரித்து என்னிடம் நீட்டியவாறு,  “அதைப் படி” என்றான்.

ஆர்வத்துடன், அவன் சுட்டிக்காட்டிய செய்தியில் பார்வையை ஓட்டினேன்.

#25 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு கோடி முறை கோவிந்த நாமத்தை எழுதினால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விஐபி தரிசன வசதி ஏற்படுத்தி தரப்படும்” -இப்படிக்கு, திருப்பதி தேவஸ்தானம்#

“ஏற்கனவே ஒரு பத்திரிகையில் இதைப் படிச்சுட்டேன். விசயத்துக்கு வா” என்றேன்.

“என் மகன் குகனை அரசாங்கக் கலைக் கல்லூரியில் சேர்த்திருக்கேன் இல்லையா....”

குறுக்கிட்டேன்: “அது எனக்குத் தெரியும்தானே. மேலே சொல்லு” என்றேன்.

“காலேஜ் போறேன்னு சொல்லிட்டுக் கிளம்புற என் தவப்புதல்வன் நேரே அங்கே போறதில்ல. இங்கே ஒரு பெண்கள் கல்லூரி, இரண்டு பெண்கள் பள்ளி இருக்கு இல்லையா? ஒவ்வொரு நாளும் தவறாம அங்கெல்லாம் போயி, பொம்பளப் புள்ளைகளைத் தரிசனம் பண்ணிட்டு, பதினொரு மணி வாக்கில்தான் இவனோட கல்லூரிக்குப் போறான். இவனோட சிநேகிதர்கள் சொல்லியும் திருந்தல. விசயம் தெரிஞ்சி நானும் புத்திமதி சொன்னேன். பலன் இல்ல.....”

சற்றே இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தான் நண்பன்: “ஒரு கோடி தடவை கோவிந்தன் நாமத்தை எழுதினா, குடும்பத்தோடு விஐபி தரிசன வசதி செய்யுறதா அறிவிச்சிருக்காங்க. ஒரு கோடி தடவை என்ன, ஒன்பது கோடி தடவைகூட என் மகனை எழுத வெச்சுடுவேன். கோவிந்தன் இவனைத் திருத்துவாரா?”  என்றான் நண்பன்.

உண்மையிலேயே அப்படியான ஒரு எதிர்பார்ப்பு அவனுக்கு இருந்ததை அவனின் முகபாவனையின் மூலம் அறிய முடிந்தது.

என் பதிலை அறிய என் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான் நண்பன்.

சூழ்நிலை வேறாக இருந்திருந்தால் என் பதிலும் வேறுமாதிரி இருந்திருக்கும். நண்பனின் மனதை நோகடிக்க விரும்பாத நான், “ஒன்பது கோடியென்ன, ஒன்பதாயிரம் கோடி தடவை கோவிந்தன் பேரை எழுதித் தரிசனம் பண்ணினாலும் உன் மகன் திருந்தமாட்டான்; அவர் திருத்தவும்மாட்டார். நாளை அவனை அழைச்சுட்டு வா. கோவையில் எனக்குப் பழக்கமான ஒரு மன நல மருத்துவர் இருக்கார். அவரைப் போய்ப் பார்ப்போம். மகா கெட்டிக்காரர்.” -ஆறுதலாக நண்பனின் முதுகு வருடி, விடைகொடுத்து அனுப்பினேன்.

                                     *   *   *   *   *

https://www.puthiyathalaimurai.com/spiritual/ttd-announces-vip-darshan-if-you-write-govinda-one-crore-times