கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவதும், பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டுப் புளகாங்கிதப்படுவதுமான நிகழ்வுகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி வெளியாகின்றன.
விருப்பம் சிறிதும் இல்லாமலே அவற்றை வாசிப்பது என் வழக்கம்.
அந்த வழக்கம் என்னுள் பரப்பிய வெறுப்புணர்வின் வெளிப்பாடே இந்தப் பதிவு.
‘கும்பாபிஷேகம் என்ற சொல்லுக்கு இறை ஆற்றலைக் கலசத்தின் வழியாகக் கோவிலில் நிலைநிறுத்துதல் என்பதே சரியான அர்த்தமாகும்’ -https://tamil.samayam.com/?back=1
‘இதன் மூலம் நம் ஆன்மா தூய்மையாகிறது’ https://www.facebook.com/srirenugaparemehwari/posts/1053518281398071/
‘பிரபஞ்ச ஆற்றலைக் கிரகித்து, கலசத்தின் நேராகக் கீழே கர்ப்பக்கிரகத்தில் மூலவராக வீற்றிருக்கும் இறைவனின் பீடத்திற்குக் கொண்டுவருவது கும்பாபிஷேகம்’ -https://tamilminutes.com/how-do-we-worship-lord-in-house-kumbabishegam-time/
‘எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இறைச் சக்தியை இழுத்துச் சேர்த்து மூலஸ்தானத்தில் நிலைப்படுத்துதல்’ -வலைத்தமிழ்.
‘புதிதாக அமைக்கப்பட்ட கோயில் கட்டடங்களுக்குத் தேவையான தெய்வீகச் சக்தியை அளிக்கிறது கும்பாபிஷேகம். -artclassroom.lk
எங்கெங்கெல்லாமோ தேடியும், ஏராளமான தளங்களுக்குள் நுழைந்து நுழைந்து துழாவியும், கும்பாபிஷேகம் அல்லது குடமுழுக்குச் செய்வதன் பலன்களாக மேற்கண்டவற்றையே அறிய முடிந்தது.
வேறு வேறு வார்த்தைகளைக் கையாண்டு விதம் விதமான வாக்கியங்களில் இவர்கள் தருகிற விளக்கம்.....
‘கும்பாபிஷேகம் செய்வதன் நோக்கம், கல் அல்லது உலோகச் சிலைகளின் மீதோ, கருவறைக்குள்ளோ, புதிதாகக் கட்டப்பட்ட அல்லது சீரமைக்கப்பட்ட கோயில் கட்டடங்கள் மீதோ இறைச் சக்தியை இறக்கி வைப்பது’என்பதுதான்.
எங்கெங்கெல்லாமும் நீக்கமறப் பரவிக் கிடக்கிற சக்தி எனப்படுவது அந்த இறைச் சக்தியே என்கிறார்கள்.
“எங்கெங்கும் பரவிக் கிடக்கிற அந்த இறைச் சக்தி, இவர்கள் குடமுழுக்குச் செய்கிற உணர்ச்சியில்லாத கோபுரக் கலசங்களிலும் சிலைகளிலும், கட்டடங்களிலும் ஏற்கனவே இரண்டறக் கலந்திருக்கும்போது, எதற்கு இந்த வீண் வேலை?” என்று கேள்வி கேட்கக் கூடாது. கேட்பவர்.....
சாமிகளால் சபிக்கப்பட்டு, ஏழேழு பிறவிகளிலும் பாவம் சுமந்து அலைந்து திரிந்து நரகம் போய்ச் சேர்வார்[எனக்கு நரகம் நிச்சயம்].
இவர்கள் புனித நீர்[அழுக்குக் கலந்த ஆற்று நீர், அர்ச்சகர் கை பட்டவுடன் புனித நீர் ஆகிறது; அல்லது அவர் சொல்லும் மந்திரத்தால் அப்படி ஆகிறது] தெளித்து, மந்திரம் சொல்லி, அபிஷேகம் செய்வதால், கல்&உலோகச் சிலைகளிலும், கட்டடங்களிலும், கோபுரக் கலசங்களிலும் தெய்வீகச் சக்தி இரண்டறக் கலக்கிறது என்பது உண்மையானால்.....
அத்தனை மனிதர்களுக்கும் ‘மனித அபிஷேகங்கள்’[உரிய முறையில் அலங்கரித்து, புனித நீர் தெளித்து மந்திரம் சொல்லுதல்] செய்து அவர்கள் மீது இறைச் சக்தியை இறக்கி வைக்கலாம். அதன் மூலம், அவர்களின் மனங்களில் உள்ள களங்கம், கபடம், கசடு, சூதுவாது, வஞ்சகம், பொறாமை, காமக் குரோதம் போன்ற அத்தனைத் தீய குணங்களும் அகன்று அத்தனை மனிதர்களும் தெய்வங்களாக, குறைந்தபட்சம் புனிதர்களாகவேனும் மாறுவார்கள்!
செய்வார்களா?!