கடவுளின் இருப்பை ஆராய்ந்த சீரிய சிந்தனையாளர்கள், ‘கடவுள் இல்லை’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ள நிலையில், மக்களில் பலரும் கடவுளை நம்புவதோடு, வெறித்தனமாய் அவருக்கு விழாக்கள் எடுத்துத் துதிபாடி மயங்குகிறார்கள். அப்படியொருவர் இருப்பதாகக் கற்பனை செய்து, அவரின் படைத்தல் தொழிலுக்கான காரணங்களை ஆராய்ந்ததன் பயன் இந்தப் பதிவு.
அப்படி அவர் படைத்துவிட்டதால்தான், ஆறறிவு இருந்தும் பிரபஞ்சம் குறித்த ஆரம்பக்கட்ட ஆராய்ச்சியிலேயே மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.
*தனக்கு நிகர் தானே. தனக்கு இணையான, அல்லது தன்னினும் மேலான பேராற்றல் ஏதுமில்லை என்று நம்பிய கடவுள், அதன் உண்மைத்தன்மையைச் சோதிக்கும் விதமாக, அதி பிரமாண்டமான பேரண்டத்தையும், அதனுள் அடங்கிய நட்சத்திரங்கள், கோள்கள் முதலானவற்றையும், உயிரினங்களையும் படைத்து முடித்து, இதற்கு நிகரானதொரு அண்டம்[பிரபஞ்சம்] எதுவும் வெளியில் வெளிப்படக்கூடுமா என்பதை அறிவதற்காக இச்செயலைச் செய்திருக்கலாம்.
பிறிதொரு பிரமாண்ட அண்டம் இருப்பது அறியப்படுமாயின், அதைத் தோற்றுவிக்க இன்னொரு கடவுள் இருப்பதை அவரால் உய்த்துணர முடியும். அப்புறம், அவரை அழிப்பதற்கான வழிவகைகள் குறித்துச் சிந்தித்துச் செயல்படலாம்.
*யுக யுக யுகாந்தரங்களாக அவர் மட்டுமே இருந்துகொண்டிருந்த நிலையில்[எங்கிருந்தார் என்று கேள்வி எழுப்பி அதற்கு விடை கண்டறிவது அற்ப மானிடர்களுக்குச் சாத்தியமே இல்லை] உணர்வு சலித்து[போரடித்து]க் கிடந்த அவர்.....
பலம் வாய்ந்தனவும் பலவீனமானவையுமான விதம் விதமான, வகை வகையான உயிர்களைப் படைத்து, உணவுக்காகவும், உடலுறவுச் சுகங்களுக்காகவும் ஒன்றோடொன்று போராடவிட்டு வேடிக்கை பார்த்து இறும்பூது எய்துவதற்காக இருக்கக்கூடும்.
*மகத்தான பேராற்றலும், மகோன்னதமான உயரிய நற்குணங்களும் உள்ள தன்னை, தன்னால் படைக்கப்பட்ட எந்தவொரு உயிரும் போற்றித் துதிபாடாததால், மிகு வருத்தத்திற்கு ஆளான கடவுள், அதைச் செய்வதற்கு ஆறறிவுள்ள மனிதர்களைப் படைத்தார் என்றும் சொல்லலாம்.
[மற்ற உயிர்களைப் போலவே இவர்களுக்கும் மாளாத துன்பங்களையும் கொஞ்சமே கொஞ்சம் இன்பங்களையும் அனுபவிக்க வழிகள் வகுத்தார்.
துன்பங்களிலிருந்து விடுபட, அவர்கள் இவரைப் புகழ்ந்து போற்றுவதையே பிறவிப் பயனாகக் கருதினார்கள். பேரின்பத்தில் திளைக்கலானார் கடவுள்].
*அவர் பெற்ற அந்தப் பேரின்பத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில், மனிதர்களில் கணிசமானவர்கள், படைப்பில் அவர் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்டி[ஓருயிரின் மீது மற்றொன்று ஆதிக்கம் செலுத்துதல், வதைத்தல், சிதைத்தல் முதலானவை] அவரைக் கடுமையாக விமர்சிப்பதை அறிய நேர்ந்தபோது வெகுவாக மனம் துவண்டார். விளைவு?
“படைப்புத் தொழிலும் வேண்டாம் ஒரு பண்ணாடையும் வேண்டாம்; ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் அழித்துவிட்டு, முன்பு போலவே ஏகாந்தியாகக் காலம் கழித்திடலாம்” என்று கடவுள் முடிவெடுத்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது!
ஆகவே, மனிதராகப் பிறந்த அனைவரும் அறியத்தக்கது என்னவெனில்.....
வெகு விரைவில் நாம் வாழும் உலகம்[பிரபஞ்சம் உட்பட] அழியப்போகிறது என்பதே.
எப்போது என்பதை நம் விஞ்ஞானிகள் தக்கத் தருணத்தில் அறிவிப்பார்கள்!