எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

//உலகில் முஸ்லீம்களே இல்லாத நாடு ‘வாட்டிகன்’!//... யாரைத் திருப்திப்படுத்த இந்தச் செய்தி?!

News18 Tamilன்று ஒரு செய்தி ஊடகம்.

//அதில் வெளியாகியுள்ள இன்றையச் செய்திகளில், 'உலகில் முஸ்லீம்களே இல்லாத ஒரு நாடு ‘வாட்டிகன்’// என்பதும் ஒன்று.

கிறிஸ்தவர்களின் தலைமை இடமாகக் கருதப்படுகிற இந்த வாட்டிகனை[ஒட்டுமொத்தக் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் இதைத் தனி நாடாக அங்கீகரித்திருக்கிறார்கள்] இத்தாலிய ராணுவ உதவியுடன் சுவிஸ் காவலர்கள்தான் பாதுகாக்கின்றனர். 2019 புள்ளி விவரப்படி இந்நாட்டின் மக்கள் தொகை 453 மட்டுமே. அத்துடன் சிலர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை 372 ஆகும்.

போப்பாண்டவருக்கு ஆட்சிபுரியும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், கிறித்தவர்களின்[குறிப்பாக இத்தாலி] பாதுகாப்பில் இருப்பதால் இதை ஒரு நாடென்பது ஏற்புடையதா என்னும் கேள்வி ஆய்வுக்குரியது.

எனினும், இந்தவொரு ஆய்வு இங்குத் தேவையற்றதும்கூட. ஒரு முஸ்லீம்கூட இல்லாத நாடு என்று இதைக் குறிப்பிடுகிறதே ஊடகம், அதுதான் கவனிக்கத்தக்கது.

இஸ்லாமியர் பெரும்பான்மையினராகவும், கணிசமானவர்களாகவும் வாழும் நாடுகள் பட்டியலிடப்பட்டு, மேற்கண்ட தகவல் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தி இஸ்லாமியரைச் சிறுமைப்படுத்துகிறதா, கிறித்தவர்களைப் பெருமைப்படுத்துகிறதா?

எவரை எப்படிப் படுத்துகிறது என்பது பற்றியும் நமக்குக் கவலை இல்லை.

காரணம், மதக் கலவரங்களையும், உயிர்ப்பலிகளையும், தேவையில்லாத மத நம்பிக்கைத் திணிப்புகளையும் விரும்பாத மக்களுக்கு இம்மாதிரியான செய்திகளால் எந்தவிதப் பயனும் இல்லை என்பதுதான்.

மூடத்தனங்களும், கெட்ட எண்ணங்களும், மத வெறியும், ஆதிக்க மனப்போக்கும் கொண்ட இழிகுணத்தவரே இல்லாத நாடு என்று ஒன்று உருவாகுமேயானால், அதைச் செய்தியாக வெளியிடலாம்.

இது ஒட்டுமொத்த மனித இனத்துக்கு மட்டுமல்ல, ஊடகங்களின் வளர்ச்சிக்கும் பயனளிப்பதாக அமையும்.

* * * * *

https://tamil.news18.com/international/know-about-vatican-city-a-country-in-the-world-with-no-muslim-population-964712.html#gsc.tab=0