அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 19 டிசம்பர், 2023

ஊரூருக்குக் கோயில்! உருப்படுமா மனித இனம்?!

ன்றுவரை அறியப்படாதவரும் உணரப்படாதவருமான கடவுளுக்கு[ஈஸ்வரன், கர்த்தர், அல்லா என்று அத்தனைக் கடவுள்களும் அடக்கம்] ஊரூருக்குக் கோயில்கள் கட்டி  வழிபட்டால் மனம் தூய்மை பெறும் என்பது அப்பட்டமான பொய்.

{கடவுள்களுக்குக் கோயில்கள் கட்டிக் கும்பிடச் சொன்ன முன்னணி மதங்களே மூடநம்பிக்கைகள் பெருகிடக் காரணம்[எண்ணிக்கையைப் பெருக்கி, ஆதிக்கம் செலுத்துவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவை இவை]இவற்றால் விளைந்த நன்மைகள் குறைவு. அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்திக் கருணை காட்டி வாழத் தூண்டியவை பௌத்தம், சமணம் போன்ற மதங்களே. மக்களின் அறியாமையாலும் வேறு சில காரணங்களாலும் இந்தியா போன்ற பல நாடுகளில் இவை புறக்கணிக்கப்பட்டன}.

நம்மில் மிக மிகப் பெரும்பாலோர் கடவுளைக் கும்பிடுபவர்கள்தான். அத்தனை பேர் மனமும் சுத்தமானதா? இல்லை.

கோயிலுக்குப் போவதைத் தவிர்த்து, மருத்துவமனைகளுக்குப் போகலாம். அங்குள்ள நோயாளிகள் படும் துன்பங்களைப் பார்க்கும்போது நம் உள்ளம் இளகும்; உருகும்; கெட்ட எண்ணங்கள் அகன்று மனம் தூய்மை பெறும்.

அனாதை இல்லங்களுக்குச் செல்லலாம். நம்மால் முடிந்த அன்பளிப்புகளை அங்குள்ளவர்களுக்குக் கொடுத்து ஆறுதல் சொன்னால், நெஞ்சில் அன்பு சுரக்கும்; மகிழ்ச்சி நிரம்பும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நேரம் வாய்க்கும்போதெல்லாம் போய்ப் பார்க்கலாம். அவர்களுடைய பரிதாப நிலைக்காக வருத்தப்பட்டால் மனதில் கருணை பிறக்கும்; உதவும் எண்ணம் உருவாகும்.

இன்னும், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் என்று நம் மனதைத் தூய்மைப் படுத்தும் இடங்கள் பல உள்ளன.

இம்மாதிரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைக் கைவிட்டு, கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்கினால் மனம் சுத்தமாகும் என்று சொல்வது அறியாமை; கலப்படமில்லாத பொய்; பித்தலாட்டம்; ஏமாற்று வேலை.

கடவுளைக் கண்டவர் இல்லை; காண்பித்தவரும் இல்லை! அறிந்தவர் இல்லை; அறியச் செய்தவரும் இல்லை! உணர்ந்தவர் இல்லை; உணர்த்தியவரும் இல்லை!(பிறருக்கு உணர்த்த முடியாதவன், தான் உணர்ந்ததாகச் சொல்வதை எப்படி நம்புவது?).

“நான் மகான்”, “நான் அவதாரம்”, “நான் ஞானி”, “நானே கடவுள்” என்றெல்லாம் பீற்றி, மக்களை ஏமாற்றித் திரிந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்தால்.....

அவர்களில் மிகப் பெரும்பாலோர், சாமானியர்களைப் போலவே புற்றுநோய், மாரடைப்பு, வாதம், சிறுநீரகச் செயலிழப்பு, நீரிழிவு போன்ற நோய்களுக்கு உள்ளாகி அவதிப்பட்டுச் செத்தொழிந்தவர்களே என்பது புரியும்.

எனவே,

கடவுள் வழிபாட்டைத் தவிர்த்து, மேற்குறிப்பிட்ட நல்ல பழக்கங்களைப் பலரும் கடைபிடித்தால், நாட்டில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடும். ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக உதவுகிற உன்னதமான நிலை உருவாகும். 

விளைவு, நாம் அனுபவிக்கும் துன்பங்களின் அளவு குறைந்து, ஓரளவுக்கேனும் இன்புற்று வாழும் சூழல் உருவாகும்.

ஆகவே,

மனிதநேயம் போற்றி உயிருள்ளவரை உண்மை மனிதாபிமானிகளாக வாழ்வோம்; பிறரையும் வாழ்த் தூண்டுவோம்.