சனி, 23 டிசம்பர், 2023

‘சொர்க்கவாசல் திறப்பு’ம் திராவிட மாடல் அரசும்!!!

‘திருவரங்கம்[ஸ்ரீரங்கம்] அரங்கநாதர் கோயில் ‘சொர்க்கவாசல்’ திறப்பை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அரசு நிறுவனங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை’ -இன்று காலை [07.30] வெளியான[‘சன்’ தொலைக்காட்சி] செய்தி இது.

நாடெங்கிலுமுள்ள வைணவத்தலங்களில் இன்று[23.12.2023] சொர்க்கவாசல்கள் திறக்கப்படுகின்றன.

அவற்றில் திருச்சிராப்பள்ளியிலுள்ள அரங்கநாதர்[ஸ்ரீரங்கம்] கோயிலும் ஒன்று.

‘சொர்க்கம் என்று ஒன்று உண்டா? அது எங்கே இருக்கிறது? எப்படியிருக்கும்?’ என்னும் கேள்விகளுக்கு இன்றளவும் விளக்கம் தந்தவர் இல்லை.

சொர்க்கம் இருப்பதே நிரூபிக்கப்படாத நிலையில், புழுத்து நாறவிருக்கும் ஊத்தை உடம்புடன் வாசலில் நுழைந்தால் சொர்க்கம் சேரலாம்(ஆன்மாவாக?) என்று நம்புவதும், மந்தை மந்தையாய்க் கால்கடுக்கக் காத்திருப்பதும் அடிமுட்டாள்தனம் அல்லவா?

தமிழ்நாட்டை ஆண்ட கட்சி எதுவும் இந்நாள்வரை சொர்க்கம் நாடுவோரைத் திருத்த முற்படவில்லை.

இப்போது ஆளும் ‘திமுக’வும் இதற்கு விதிவிலக்காக இல்லை. 

அரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு நிறுவனங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் திமுக அரசு வழக்கம்போல் விடுமுறை அறிவித்திருக்கிறது.

ஒரு மாவட்டத்திற்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை?

தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்வோர் இதை ரத்து செய்திருக்கலாம். செய்யவில்லை.

காரணம், தேர்தல்களில் பக்தக்கோடிகளின் வாக்கு பறிபோகும் என்னும் பயம்தானே?

“ஆம்” என்றால்.....

திருச்சி மாவட்டம் என்றில்லாமல், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்திருந்தால், திருச்சி மாவட்டப் பக்தர்கள் என்றில்லாமல், தமிழ்நாட்டில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான பக்தக்கோடிகள் மனம் பூரித்து இந்த அரசை வாழ்த்துவார்கள்; நடபெறும் தேர்தல்களில் மறவாமல் வாக்களிப்பார்கள்.

செய்யத் தவறிவிட்டது திராவிட மாடல் அரசு.

ஆயினும் என்ன, இது காலை நேரம். இப்போதுகூட விடுமுறையை அறிவித்துப் பக்தர்களின் பாராட்டை மட்டுமல்லாமல், அரங்கநாதனின் அருளையும் பெறலாம்.

செய்வார்களா?!