சனி, 23 டிசம்பர், 2023

வைகுண்ட ஏகாதசி! பக்தர்களைப் பித்துக்குளிகள் ஆக்கும் ஊடகங்கள்!!

வைகுண்ட ஏகாதசி நாளில் வைணவக் கோயில்களில் அரங்கநாதன் சிலையை அலங்கரித்துச் சடங்குகள் செய்வதும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்து மகிழ்வதும் வழக்கமாக இடம்பெறும் நிகழ்வுகளாகும்.

சாமி சிலைக்கு அணிகலன்கள் பூட்டுவது, முத்தங்கி போன்ற ஆடைகள் அணிவிப்பது, ஓரிடத்திலிருந்து தூக்கிச் சென்று இன்னோரிடத்தில் இருத்துவது போன்ற செயல்களைச் செய்பவர்கள் பூசாரிகளே[பட்டர்கள்].


சிலையை வழிபடுவதால் துன்பங்கள் தீரும், கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையே தவிர, சிலை உயிர்பெற்று எழாது; தங்களைக் கண் திறந்து பார்த்து ஆசீர்வதிப்பதோ, இடம்விட்டு இடம் பெயர்வதோ செய்யாது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.


பூசாரிகளும் இதை அறிவார்கள்.


உண்மை நிலை இதுவாக இருக்க, சிலை கடவுளாக மாறி அருள்மழை பொழிவதாகவும் நடமாடுவதாகவும் வர்ணித்து, பக்தர்களைப் பித்துக்குளிகள் ஆக்குவதை வழக்கமாக்கியுள்ளன செய்தி ஊடகங்கள்.


ஓர் எடுத்துக்காட்டு:


//வைகுண்ட ஏகாதசி தினத்தன்று காலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை பரமபத வாசல் திறந்திருக்கும். இந்த ஏகாதசி நாளில், மூலவரான சயனக் கோலப் பெருமாள்[சயனத்திலிருக்கும் அரங்கநாதன்] முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். எப்போதும் யோக நித்திரையிலேயே காட்சியளிக்கும் அவர், இந்த நாளில் மட்டும் அமர்ந்த நிலையில் ஓய்வில்லாமல்[அடுத்த ஏகாதசியில், “ரொம்பக் களைப்பா இருக்கு. ஒரு காபி வாங்கித் தாங்கோ” என்று பக்தர்களிடம் கடவுள் கேட்டதாக எழுதுவார்களோ?] தரிசனம் அருள்வார். அதன் பிறகு மூலஸ்தானத்தைச் சென்றடைவார்//


கடவுள் சிலையைக் காண்பதிலும், வழிபடுவதிலும் முழு மனநிறைவைப் பெற்றுவிடும் பக்தர் மனங்களில், கடவுள் உயிர்பெற்று இயங்குவது போன்ற பொய்யானதொரு பிம்பத்தை நிறுவ முயல்கிறார்கள் ஊடகர்கள்.


அப்பாவிப் பக்தர்களின் புத்தியை இப்படியெல்லாமும் பேதலிக்கச் செய்கிறார்கள் இவர்கள்!


கடவுள்கள் குறித்த, ஆபாசம் கலந்த கற்பனைக் கதைகளை ஆன்மிக இணைப்பிதழ்களில் வெளியிட்டு மூடநம்பிக்கைகளை வளர்ப்பது போதாதென்று, கோயில் நிகழ்வுகளைப் பொய்யான வர்ணனைகள் மூலம் இவர்கள் கொச்சைப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.


* * * * *

https://www.maalaimalar.com/aanmiga-kalanjiyam/oyvillaamal-tharisanam-tharum-ranganadhar-694562