பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 27 டிசம்பர், 2023

அதென்ன ‘பிரபஞ்ச அறிவுத் தொகுப்பு’?!?!

விஞ்ஞானிகளின் அறிவியல் ‘கண்டுபிடிப்புகள்’ இந்தப் பிரபஞ்சத்திற்கு முற்றிலும் புதியவை அல்ல; அவை ஏற்கனவே பிரபஞ்ச வெளியில் எங்கோ ஓரிடத்தில் இருந்தவை; இருப்பவை. மனம் ஒன்றி, தீவிரச்  சிந்தனையில் ஈடுபடும்போது விஞ்ஞானிகளால் அந்த அறிவியல் சாராம்சங்களைக் கிரகித்துக்கொள்ள முடிகிறது” என்று எவரேனும் சொன்னால் நம்பமாட்டீர்கள்.

“நம்புங்கள். இப்படிச் சொல்பவர்ஓப்பன்ஹீமா என்கிற அணுசக்தி விஞ்ஞானி” என்கிறார் மறைந்த வாழ்வியல் அறிஞர் எம்.எஸ்.உதய மூர்த்தி.

நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வை முன்வைத்து, இது உண்மை என நிறுவவும் முயல்கிறார்.

அமெரிக்காவில் எட்கார் கேசி என்று ஒரு ஃபோட்டோகிராஃபர் 1920 இல் வாழ்ந்தார். ஒரு சமயம் அவருக்குத் திடீரென்று பேசவராமல் போகவே, ஒரு மருத்துவர் அவரை ‘ஹிப்னாடைஸ்’ செய்து குணப்படுத்தினார்.

சில நாள் கழித்து அவருக்கு மீண்டும் பேசவராமல் போனது. அவரை மீண்டும் ஹிப்னாடைஸ் செய்தார் மருத்துவர். ஹிப்னாடைஸ் நிலையிலிருந்த எட்கார் கேசி, தாமே தம் குரல் நிலையை எடுத்துக் கூறி அதற்கான சிறந்த... மருத்துவர் அறிந்திராத சிகிச்சை முறையையும் எடுத்துரைத்தாராம்.

அதற்கப்புறம், தாமே சுயமாக ஹிப்னாடைஸ் நிலைக்குச் சென்று, தம்மை நாடி வந்த நோயாளிகள் குணமடவதற்கான வழிகளைக் கூறினாராம். இப்பணியை முப்பதாண்டுகள் தொடர்ந்து செய்தாராம்!

எதிர்கால அரசியல், வருங்கால உலகம், தனிமனித எதிர்பார்ப்புகள் போன்றவை பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டபோது, சுய ஹிப்னாடிசத்தின் மூலம் பதில்கள் சொன்னாராம். அவர் சொன்னவாறே எல்லாம் நடந்ததாம்.

“இந்தத் தகவல்களையெல்லாம் எங்கிருந்து பெறுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, “பிரபஞ்ச வெளியில் தேங்கிக்கிடக்கும் பிரபஞ்ச அறிவுத் தொகுப்பிலிருந்து” என்றாராம்!

‘பிரபஞ்ச வெளியில் ஊடுருவியிருக்கும் மாபெரும் சக்தியின்பால் முனைப்புடன்  நம் மனதைச் செலுத்துவதன் மூலம் இதை நிகழ்த்துவது சாத்தியம் ஆகலாம்’ என்கிறார்களாம் அறிவியல் அறிஞர்கள்.

ஓப்பன்ஹீமா சொல்வதும், அதன் மீது விஞ்ஞானிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் ஆதாரபூர்வமாக மெய்ப்பிக்கப்படுமேயானால், ஒட்டுமொத்தப்  பிரபஞ்ச அறிவுத் தொகுப்பையும் கைப்பற்றுவதற்கு உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவும்; போராட்டங்கள் வெடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போராட்டங்கள் தொடருமேயானால், பெரும் போர்கள் மூண்டு மனித இனம் பூண்டோடு அழிந்துவிடவும் வாய்ப்புள்ளது.

ஆதலினால் உலகோர்க்கு நாம் வழங்கும் அறிவுரை:

“இருக்கிற கொஞ்சம் அறிவை வைத்தே நீங்கள் அடிக்கும் கொட்டமும் போடும் ஆட்டமும் கொஞ்சநஞ்சமல்ல. பேராசை வேண்டாம்; பேரிழப்பும் வேண்டாம். ‘இது போதும்’ என்று மனநிறைவுடன் வாழப் பழகுங்கள்.”

ஹி...ஹி...ஹி!!!

                               *   *  *   *   *

உதவி: டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ என்னும் நூல்.