அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 28 டிசம்பர், 2023

கதை கதையாய்ச் சொல்லிக் கல்லா கட்டும் திருப்பதி தேவஸ்தானம்!!!

கதை 1:

விஷ்ணு பகவான் செல்வத்தின் கடவுளான குபேரனிடம் பெரும் கடன் வாங்கினார்[அதற்கும் ஒரு கதை உண்டு. அத்தனை சுவாரசியமானது அல்ல]. அந்தக் கடனை அவர் இந்த வினாடிவரை அடைத்து முடிக்கவில்லையாம். கடனை அடைக்கத்தான் அவருடைய பக்தர்கள் கோயிலுக்கு நன்கொடைகளை வழங்குகிறார்களாம்.

கதை 2:

அபிஷேகத்திற்கு முன்பாக நகைகளைக் கழற்றும்போது பெருமாள் அணிந்த ஆபரணங்கள் அனைத்தும் சூடாகக் கொதிக்கும். விஷ்ணுவின் உடம்பும் கொதிக்கும். அந்தச் சூட்டைத் தணிக்கத்தான் ஏழுமலையானுக்கு அபிஷேகம்(சந்தனம் முதலியன) செய்யப்படுகிறது. அப்போது அவர் தன்னுடைய 3ஆவது கண்களை(?)த் திறக்கிறார்[வியாழக் கிழமைகளில் மட்டும்] என்பது ஐதீகம். இந்தப் புனித நிகழ்வைக் கண்டால் கோடி கோடியாய்ப் புண்ணியம் சேருமாம்.

கதை[முடி தானம்>மொட்டைபோடுதல்] 3:

புராணக்கதைகளின் படி, விஷ்ணு லட்சுமி தேவியைப் பின்தொடர்ந்து பூமிக்கு வந்து எறும்பு மலையில்(???) குடியேறினார். அங்கு ஒரு பசு அவருக்குப் பால் கொடுக்கச் சென்றது. இதை அறிந்ததும் ஆத்திரமடைந்த உரிமையாளர் கோடாரியால் பசுவின் தலையை வெட்ட முயன்றார். கோடாரி விஷ்ணுவைத் தாக்கியது(ஐயோ பாவம் விஷ்ணு!); அவரது முடிகளில் சிலவற்றை வெட்டியது. தேவி நீலா தேவி உடனடியாகத் தனது தலைமுடியை வெட்டி விஷ்ணுவின் காயத்தின் மீது வைத்து, அதைக் குணப்படுத்தினாள்[காயத்திற்கு மயிரும் மருந்தாகிறது!]. அவளுடைய சைகையால் தூண்டப்பட்ட விஷ்ணு, யாரெல்லாம் தலைமுடியைத் தானம் செய்கிறார்களோ அவர்களுக்கு வெகுமதி கிடைக்கும் என்று கூறினார். மேலும் திருப்பதியில் முடி தானம் செய்வது பக்தர்களுக்குச் செழிப்பும் செல்வமும் தரும் என்று நம்பப்படுகிறது(விஷ்ணு சொல்லவில்லையா?!).


கதை 4:

உலக நன்மைக்காக, யோக நிலையில்[ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குதல்] இருக்கும்போது கண்கள் மூடியிருக்கும். திருப்பதிக் கடவுள் சிலையின் கண்கள் மூடிய நிலையில் வடிக்கப்பட்டதன் காரணம் இதுதான்.

வெங்கடேஸ்வரரின் கண்களில் பிரபஞ்சச் சக்தி வெளியாகிக்கொண்டே இருக்கும். எனவே, அவரின் கண்களைப் பக்தர்கள் பார்க்கக்கூடாது[கண்கள் குருடாகுமோ?]. அவருடைய கண்கள் எப்போதும் வெள்ளை முகமூடியால் மூடப்பட்டிருப்பதற்கு இதுதான் காரணம்.

நம் வருத்தம்:

பெருமாளின் உடம்புச் சூட்டைத் தணிக்கச் சந்தன அபிஷேகம், குளு குளு தயிர் அபிஷேகம் எல்லாம் செய்வது போல், விஷ்ணுவின் கண்களில் வெளிப்படும் பிரபஞ்சச் சக்தியை மட்டுப்படுத்தப் பக்கவிளைவு இல்லாத நாட்டு மருந்து எதுவும் கிடைக்கவில்லையா கோயில் பட்டர்களுக்கு[அர்ச்சகர்கள்]?

ஏற்கனவே, லட்சம் லட்சமாய்த் திருப்பதியில் குவிகிறார்கள் பக்தர்கள். கோடி கோடியாப் பணம் குவிகிறது. அப்புறம் எதற்கு இப்படியான ஆறறிவை முடமாக்கும் கதைகள்?

கேள்வி கேட்பது நாம். இந்தச் சாமானியனின் கேள்வி தேவஸ்தானிகளின் மண்டையில் உறைக்குமா என்ன?!

* * * * *
***மேற்கண்ட கதைகள், திருப்பதி ஏழுமலையான் குறித்து ஊடகம் ஒன்றில் வெளியான சிறப்புச் செய்தியிலிருந்து பெற்றவை.