திங்கள், 22 ஜனவரி, 2024

மனிதர்களைக் காக்கக் கடவுளா, கடவுளைக் காக்க மனிதர்களா?!

//சிஆர்பிஎப் படைகளும், உளவுப் பணிக்காக சர்வதேச இந்திய உளவு அமைப்பான ரா(ரிசர்ச் அண்ட் அனலைஸ் விங்), மேலும் மத்திய உளவு அமைப்பான ஐபி(இன்டலிஜென்ஸ் பீரோ) ஆகியவை அமர்த்தப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் நிலப்பகுதியின் பாதுகாப்பில் இருப்பர்.

அயோத்தியின் சரயு நதி வழிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர்ப்பாதுகாப்புக்காக என்டிஆர்எப்(தேசிய பேரிடர் மீட்பு படை) சரயுவின் கரைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அயோத்தியின் 10,715 பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் ஐடிஎம்எஸ் கருவி மூலமாகப் பொருத்தப்பட்டுள்ளன. அயோத்தியைச் சுற்றிலும் ஐந்து கி.மீ தொலைவில் டிரோன்கள் அனுமதியின்றிப் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை மீறிப் பறப்பதைக் கண்காணிக்க டிரோன் எதிர்ப்பு கருவிகள் நீர், நிலம், வானம் ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தின் பாதுகாப்பிலும் ஏஐ(ஆர்டிபியுஷியல் இண்டலிஜன்ஸ்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.....[ஊடகச் செய்தி].

இவை, பாதுகாப்பு ஏற்பாடுகளின் சுருக்கம். இன்னும் பல பரவலானதும் உறுதியானதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தனைப் பெத்தப் பெரீஈஈஈஈஈஈய பாதுகாப்பு எதன் பொருட்டு என்று வாசிப்பின் தொடக்கத்திலேயே புரிந்துகொண்டிருப்பீர்கள் நீங்கள்.

ஆம், அயோத்தி ராமர் கோயில் ‘பிரான் பிரதிஷ்டா’[பக்தியின் பெயரால் சமஸ்கிருதத் திணிப்பு; இந்தி?] விழாவுக்காகத்தான்.

விழாவில் கலந்துகொள்ளும்/கொண்டிருக்கும் உலக மகா பிரபலங்களை மட்டுமல்ல, கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ராம-சாமியைப் பாதுகாக்கவும்தான்.

கோயிலில் நட்டுவைக்கும் சிலைக்கு ‘பிரான்’[பிராணன்>தெவ்வீகச் சக்தி] ஊட்டுவதற்காகப் ‘பிரான் பிரதிஷ்டை’ செய்திருக்கிறார்கள்

ஆக, சிலைக்குள் ‘பிரான்’ சேர்க்கப்பட்டுவிட்டது{சிலைக்குள் பிராணன்[கடவுள்களுக்கு உயிர் உண்டா?!] இரண்டறக் கலந்துவிட்டது}.

அதாவது, ராமன் சிலை இப்போது உயிருள்ள கடவுள் ராமன்ர்.

கோயிலில் உள்ள ஸ்ரீராமனை, அல்லது ராமரை, அல்லது ராமச்சந்திர மூர்த்தியை, அல்லது முழுமுதல் கடவுளான விஷ்ணு[வைணவர்கள் சிவனுக்கு முதலிடம் தருவதில்லை]வின் மறு பிரதியை ஆயிரக்கணக்கான பிரமுகர்கள் நேரிலும், கோடானு கோடிப் பக்தர்கள் தொ.கா. போன்ற ஊடகங்கள் வாயிலாகவும்[?] தரிசித்துப் புண்ணியம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறவாதீர்.

“முழுமுதல் கடவுளான ராமபிரானே கோயிலில் தங்கி அருள்பாலித்துக்கொண்டிக்கையில், மேற்கண்ட வகையிலான மிக மிக மிகப் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்கு?” இது அடியேனின் களிமண் மண்டையில் எழும்[வழக்கம்போல] எழும் கேள்வி.

உண்மையில் ராமன் ஒரு கடவுளானால், இதற்காக வெட்கப்படுவார்!

வெட்கங்கெட்ட மனிதர்களைக் காக்கக் கடவுளா, வெட்கமில்லாத கடவுளைக் காக்க மனிதர்களா?

கடவுள் நம்பிக்கையை ஊட்டோவூட்டு என்று ஊட்டிப் பக்தி நெறி பரப்புகிறவர்கள் இந்தக் கேள்வியை மட்டும் முற்றிலுமாய் அலட்சியப்படுத்துவது ஏன்? 

பதில் தெரியாதா? தெரியும்.

தெரிந்திருந்தும் அதைப் பக்தர்கள் அறியச் சொன்னால்.....

அவர்கள் இவை போன்ற மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, ராமன் போன்ற கடவுளுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் சேவகம் செய்யமாட்டார்கள்.

கோயிலைப் பூட்ட 400 கிலோ எடையில் உலகின் மிகப் பெரிய பூட்டு எதற்கு?

சின்னஞ் சிறிய பூட்டுகளால் கோயிலைப் பூட்டினால், திருடர்கள் எளிதாக உடைத்துவிட்டுச் பகவான் ராமரைக் கடத்தி விற்றுவிடுவார்கள் என்னும் பயமா?

அல்லது, விழா என்னும் பெயரில் பக்தப் பிரமுகர்கள் அடிக்கும் கொட்டங்களிலிருந்து ராம-சாமி தப்பிச் சென்றுவிடாமலிருக்கவா?

இன்று ராமனுக்குக் கோடி கோடிகளில் கோயில். இனி, பிள்ளையார், சுப்ரமணியன், இவர்களின் அப்பனான நடராசன், அம்மை பார்வதி தேவி, லட்சுமி, சரசுவதி என்று எஞ்சியிருக்கும் அத்தனைப் பிரபலச் சாமிகளுக்கும் கோயில் எழுப்பி, உலகறியக் கொண்டாடுவது நடபெறக்கூடும்.

கொண்டாடினால்.....

இந்தப் பூமி மனிதர்களுக்கானது என்னும் நிலைமை மாறி விதம் விதமான, வகை வகையான சாமிகளுக்கான இடமாக மாறும்.

மனிதர்கள் அனைவரும் நல்ல சிந்தனையாளர்களாக ஆகும் காலம் வரும்போது.....

“நம் முனோர்கள் ஆறறிவு படைத்தவர்களாக இருந்தும் ஆதாரம் இல்லாத கடவுளின் பெயரால், பக்தி வளர்த்து, எப்படியெல்லாமோ அந்த அறிவைச் சிதைத்துச் சீரழிந்திருக்கிறார்களே” என்று எண்ணி எண்ணி வருந்துவார்கள்.

வருங்காலச் சந்ததியர் அறிந்துகொள்வதற்காக வரலாற்று ஏடுகளில் பதிவு செய்வார்கள்.

ஒழிக மூடநம்பிக்கை! வளர்க பகுத்தறிவு!!