எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 8 ஜூன், 2024

அரசியல் சாசனம் கடவுளோ, குரங்கோ, விஷப் பாம்போ அல்ல வணங்குவதற்கு!!!

பாஜக’ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய அரங்கில் நடந்தது[நேற்று]. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘பாஜக’கூட்டணிக் கட்சித் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், கூட்டத்துக்கு வந்ததுமே, மோடி அரசியல் சாசனப் புத்தகத்தைத் தொட்டு நெற்றியில் வைத்து வணங்கிய பின்பே இருக்கையில் அமர்ந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது[தமிழ் இந்து].

“அரசியல் சாசனம் என்பது பெரிதும் மதிக்கத்தக்கதே தவிர, தொட்டு மண்டையில் வைத்துக் கும்பிடுவதற்கல்ல” என்று எவரேனும் அவருக்குப் புத்திமதி சொல்வது  நல்லது.

ஒரு நாட்டை நேரிய வழியில் நிர்வகிப்பதற்கு அறிஞர்களால் பரிந்துரைக்கப்பட்ட  நெறிமுறைகளின் தொகுப்பு நூல்தான் அரசியல் சாசனம்[விளக்கம் முழுமையானதல்ல].

அது கல்லாலோ களிமண்ணாலோ உலோகத்தாலோ உருவாக்கப்பட்ட கடவுள்[சிலை] அல்ல கும்பிடுவதற்கு. தப்புச் செய்துவிட்டு, என்னை மன்னித்து ஆட்கொள் என்று தரையில் நீட்டிப் படுத்துக் கோரிக்கை வைத்தால் அது ஏற்காது.

அது கடவுளாக்கப்பட்ட குரங்கல்ல[ஆஞ்சநேயன்]; பாலூற்றி வணங்கும் பாம்பல்ல; நந்தியல்ல. இவை போன்ற வேறு எதுவும் அல்ல.

மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் அதை நினைத்துத் தியானம் என்னும் பெயரில் முணுமுணுப்பதால் கொஞ்சமும் பயன் விளையாது.

அரசியல் சாசனம் என்னும் சட்டத் தொகுப்பு நூல் ஆத்திகன், நாத்திகன், நல்லவன், கெட்டவன், அறிஞன், மூடன் என்று அனைவருக்கும் பொதுவானது. இன்னாருக்கெல்லாம்[குறிப்பாக, பக்தக்கோடிகளுக்கு] ‘விதிவிலக்கு உண்டு’ என்பதெல்லாம் அதில் இல்லை.

அதைக் கும்பிட்டால் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாமல் குற்றங்கள் பல புரிந்தாலும் தப்பிவிடலாம் என்று நம்பினால் அது முட்டாள்தனம்.

இந்த உண்மைகளை அறியாமலிருந்தோ, அல்லது மறந்தோ மோடி அரசியல் சாசனத்தைத் தொட்டு நெற்றியில் வைத்துக் கும்பிட்டார் என்றால், தான் எத்தனைப் பெரிய பக்திமான் என்று மக்களை நம்ப வைப்பதற்காகவே என்று சொல்லலாம்.

இப்போது மட்டுமல்ல, இனியும் அவரைப் பிரதமர் ஆக்குவதற்குப் போதுமான அளவில் மூடப் பக்தர் கூட்டம் இங்கே இருப்பதால், அரசியல் சானத்தைக் கும்பிடுவது போன்ற காரியங்களில் அவர் இனியும்  ஈடுபடாமலிருப்பது வரவேற்கத்தக்கதாகும்!

* * * * *

https://www.hindutamil.in/news/india/1261422-highlights-of-the-nda-consultation-meeting.html