வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

புதிய கண்டுபிடிப்பு... ‘பிரபஞ்சம் தொடக்கமும் முடிவும் இல்லாதது’!

பிரபஞ்சம்[அண்டவெளி + கோள்கள், நட்சத்திரங்கள் முதலானவை]  என்பது எந்தவோர் அளவுகோலுக்குக் கட்டுப்படாதது.

அதற்கு, திசை, கனபரிமாணம், சுற்றளவு, எல்லை[விளிம்பு] என்பனவெல்லாம் இருப்பதாக விஞ்ஞானிகளால் கண்டறியப்படவில்லை.

கோள்கள், நட்சத்திரங்கள் என்று எதுவுமே இல்லாத ‘வெறுமை’[சோதனைக் குழாய்களில் உள்ள காற்றை வெளியேற்றி அதை வெற்றிடம் என்கிறார்கள். அந்த வெற்றிடத்தில் வேறு எதுவுமே இல்லையா என்பது ஆய்வுக்குரியது] நிலை இருப்பது சாத்தியமா? 

“ஆம்” என்றால், எதுவும் இல்லாத நிலையில் கடவுள் மட்டும் எப்படித் தோன்றினார் என்னும் கேள்விக்கு இன்றளவும் விடை இல்லை.

கடவுள் தோன்றவில்லை; எப்போதும் இருந்துகொண்டே இருப்பவர் என்றால், அண்டவெளியும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது என்று சொன்னால் அதை மறுப்பது இயலாது.

இந்நாள்வரை இம்மாதிரியான விவாதங்கள் உரிய ஆதாரங்கள் இல்லாமலே நிகழ்த்தப்பட்டன.

இந்தவொரு விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவியலாளர்களின் அண்மைக்கால அறிவிப்பு அமைந்திருக்கிறது.

அந்த அறிவிப்பு[ஐந்து மாதங்களுக்கு முன்பு]:

#நமது பிரபஞ்சத்திற்கு ஆரம்பமே இல்லாமல் இருக்கலாம்[ஆரம்பம் இல்லை என்றால் முடிவும் இல்லை என்றாகிறது]! பல ஆண்டுகளாக நாம் பெருவெடிப்புக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தோம். அந்தக் கோட்பாடுகள் தவறானவை என்னும் நிலை உருவாகியுள்ளது.

பண்டோரா விண்மீன் கிளஸ்டருக்குப் பின்னால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஒரு மர்மமான கட்டமைப்பைக் கண்டுபிடித்துள்ளது. அது ஒரு தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் இருந்திருக்க முடியாது; பெருவெடிப்பு மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய இப்போதைய நம் கோட்பாடுகள் தவறாக இருக்கலாம் என்று நம்ப வைக்கிறது. 

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், பிரபஞ்சம்[அண்டவெளியும் அதில் இடம்பெற்றுள்ள பிறவும்] தோற்றுவிக்கப்படவில்லை; அது என்றென்றும் இருந்துகொண்டே இருப்பது என்று சொல்லலாம்.

பிரபஞ்சம் இருந்துகொண்டே இருப்பது; படைக்கப்பட்ட ஒன்றல்ல என்னும்போது கடவுள் இருக்கிறார் என்பது வெறும் கற்பனையே.

ஆயினும், எதுவும் படைக்கப்படவில்லை என்றால், உயிர்கள்  இனவிருத்தி செய்தல், தற்காத்துக்கொள்ளுதல், ஆதிக்கம் செலுத்துதல் போன்ற அறிவுப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவது எப்படி  என்னும் கேள்வி தவிர்க்க இயலாததாக உள்ளது.

இதற்கான பதிலைக் கண்டறியும் முயற்சி விஞ்ஞானிகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நம்பலாம்.

என்றேனும் ஒரு நாள் விடை கிடைக்குமோ அல்லவோ, இப்போது இதற்கு விடை இல்லை என்பதால், ஆன்மிகவாதிகளால் அனுமானம் செய்யப்பட்டுள்ள கடவுளை நம்புவது கட்டாயம் அல்ல; அல்லவே அல்ல.