புதன், 26 பிப்ரவரி, 2025

கும்பமேளா நீராடல்... புனிதம் சேர்த்த மோடியும் தவிர்த்த காஞ்சி மட விஜயேந்திரனும்!

த்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடந்துவரும் கும்பமேளாவில் கலந்துகொண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தாராம்[செய்தி].

வந்து என்ன செய்தார்?

‘ஓர் அனாதை இல்லத்திற்கு நன்கொடை வழங்கினார்; சங்கர மடம் சார்பில் ஒரு முதியோர் இல்லம் தொடங்கி வைத்தார். ஏழை மக்களின் புகலிடமான அரசு மருத்துவமனைக்குச் சென்று தீராத நோய்களால் அவதிப்படுவோருக்கு ஆறுதல் சொன்னார்…’ என்றிப்படியான நல்ல காரியங்கள் ஏதும் செய்தாரா என்றால், இல்லை.

பின்னே என்ன செய்தார்?

ஊடகக்காரர்களுக்குப் பேட்டியளித்து அருள்பாலித்தார்.

பேட்டியில் என்ன சொன்னார்?

என்னென்னவோ சொன்னார். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று: #அகில இந்திய அளவில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய தீர்த்த அடையாளமாக உள்ள அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்தோம்# என்பதும் ஒன்று[இவர் பிரார்த்திக்கலேன்னா பக்தர்களுக்கு நற்பலன்கள் கிடைக்காவோ?].

#காஞ்சி மடத்தின் மூலம் அங்கு மண்டபம் அமைத்து, கடந்த 40 நாட்களாக வேதபாடசாலைகள் மூலம் உலக நன்மைக்காக யாகங்கள், பூர்ணாஹூதி[!?] ஹோமங்கள், புனித பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் நடக்கிறது# இதுவும் அவர் சொன்னதே.

இப்படிச் சொன்ன அவரிடம்.....

“ஆண்டவனால் அனுப்பப்பட்ட மோடியும், இக உலகப் ‘போகம்’ துறந்த ‘யோகி’[ஆதித்யானந்த்]யும் குளியல் போட்டதால் கூடுதல் புனிதத்துவம் பெற்ற திரிவேணி சங்கமத்தில், ஈஸ்வரனின் அனுக்கிரஹம் பெற்ற தாங்களும் நீராடி அதில் அபிரிதமாகப் புனிதம் சேர்த்தீர்களா?” என்று ஊடகத்தார் கேட்டிருக்கலாம்.

கேட்டிருந்தால்…..

அவர் திருவாய் மலர்ந்தருளுவாரோ அல்லவோ, அவரின் சிஷ்யர்களில் எவரேனும் ஒருவர், “நீச மனிதர்கள் நீராடுகிறதும் பாவங்களின் கழிப்பிடமும் ஆன திரிவேணி சங்கமத்தில் அவர் நீராடமாட்டார்” என்று பதில் சொல்லியிருப்பார்.

ஏனோ எவரொருவரும் கேட்கவில்லை!

* * * * *

https://tamil.indianexpress.com/tamilnadu/kanchi-kamakoti-peetadhipathi-vijayendra-says-even-in-the-computer-age-devotion-is-deeply-rooted-among-people-8753022