புதன், 16 ஏப்ரல், 2025

கடவுளை நம்புவதால் தடைபடும் ஆறறிவு வளர்ச்சி!!!

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன, சூரியனைச் சுற்றியுள்ள கோள்களின் சுற்றுப்பாதையில் இருந்து விண்மீன் திரள்களின் சுழற்சிவரை. 

இயங்குவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. விண்வெளியில் அசைவில்லாமல் இருப்பது எதுவும் இல்லை. அசைவற்றிருப்பவை போல் காட்சியளிக்கிற கற்பாறை, இரும்புத்தூண் போன்றவற்றில்கூட இயக்கம்[இதன் விளைவுதான் அவற்றின் உருமாற்றம்] இடம்பெற்றிருக்கிறது.

இந்த இயக்கம்தான் அண்டவெளியின்[பிரபஞ்சம்] அடிப்படை அம்சங்களில் மிக முக்கியமானது.

கோள்கள் மட்டுமல்ல, விண்மீன்கள் மட்டுமல்ல, மிகச் சிறிய துகள்களும்கூட இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

ஏன் இந்த இடைநிறுத்தம் இல்லாத இயக்கம்?

'விண்வெளியில் இரண்டு பொருள்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும்போது, ​​அவற்றின் பரஸ்பர ஈர்ப்பு விசையால் பெரும்பாலும் அவை மோதுவதற்கு அல்லது பிரிந்து செல்வதற்குப் பதிலாக ஒன்றையொன்று சுற்றி வருவதற்கு இந்த இயக்கம்தான் காரணம்'

இயக்கம் பிரபஞ்சத்தின் உயிர்நாடி. 

இயக்கம் என்பது ஆற்றலின் வெளிப்பாடு.

இந்த இயக்கம் தானாக நிகழ்கிறதா, நிகழ்த்தப்படுகிறதா?

“ஆண்டவனால் நிகழ்த்தப்படுகிறது என்று அறிவியலாளர்கள்[பெரும்பாலோர்] சொல்வதில்லை; சொல்லப்படுவதை ஏற்பதும் இல்லை.

ஏற்றால்.....

கேள்விக்கு விடை தேடும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி விழும். அறிவு வளர்ச்சி முற்றிலுமாய்த் தடைபடும்.

ஆகவே, இவ்வகையான எந்தவொரு கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைப்பதை அவர்கள் விரும்புவதில்லை.

கேட்கிறார்கள்; கேள்விகளைக் கேட்கிறார்கள். இதனால் அவர்களின் அறிவு வளர்கிறது; அறிவியலும் வளர்ச்சி பெறுகிறது.

முற்றுப்புள்ளி வைப்பவர்கள் மதவாதிகள். கடவுளின் பெயரால் கணக்குவழக்கில்லாமல் மூடநம்பிக்கைகளை உற்பத்தி செய்தவர்கள்... செய்பவர்கள் அவர்கள்!