செவ்வாய், 22 ஏப்ரல், 2025

மனிதம் தெரியும்! அதென்ன புனிதம்?!

கராதிகளெல்லாம், 'புனிதம்' என்னும் சொல்லுக்குத் 'தூய்மை', 'தெய்வீகத்தன்மை' என்பதாகப் பொருள் தருகின்றன.

புனிதத்திற்குத் ‘தூய்மை’ என்னும் பொருள் ஏற்கத்தக்கது. 'தெய்வம்' இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவரை, அது 'தெய்வீகத் தன்மை'யைக் குறிப்பதாக மதவாதிகள் சொல்வது ஏற்கத்தக்கதல்ல.

புனிதத்தைத் தெய்வீகம் ஆக்கிய அவர்கள்தான் அசுத்தம் நிறைந்த ஆற்று நீரைப் புரியாத ஏதேதோ மந்திரங்களைச் சொல்லிப் 'புனித நீர்'  ஆக்கினார்கள்.

[புனிதர்களுக்கு மட்டுமே புரிகிற மந்திரம்!]

அதைக் கோபுரக் கலசங்கள் மீது கொட்டி மந்திரம்[சாமானியர்களை முட்டாள்கள் ஆக்கும் தந்திரம்] ஓதினால், லட்சக்கணக்கானவர் கூடி நின்று மெய் மறந்து வழிபடுகிறார்கள்.

சிற்பிகளால் உருவாக்கப்பட்ட சிலைகள் மீது அதை ஊற்றினால் அவற்றில் தெய்வம் குடியேறிவிடும் என்று நம்ப வைத்தார்கள்.

நம்புகிற அறிவிலிகளின் எண்ணிக்கை நாளும் அதிகரிக்கிறது.

அந்தச் சூதுவாதர்கள் சொல்வதை நம்பாதீர்கள் என்றவர்கள் ‘நாத்திகர்’ ஆக்கப்பட்டார்கள்.

‘கும்பாபிஷேகம்’ செய்து கோயில்களைப் புனிதப்படுத்துவதாகவும், கல்லாலும் உலோகங்களாலும் ஆன சிலைகளுக்குப் புனிதாபிஷேகம் செய்து கடவுளாக்குவதாகவும் சொல்லும் பொய்யர்களைத்தான் உலகம்[பெரும்பாலோர்] நம்புகிறது!

அவர்களின் பார்வையில், சிந்திக்கத் தூண்டும் பகுத்தறிவாளர்கள்[நாத்திகர்கள்] படு அயோக்கியர்கள்!!