நான் பயணித்த பேருந்து மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தது.
இருக்கையொன்றைப் பிடிக்க முதலில் கைக்குட்டை போட்டது யார் என்பதில் இரு பயணிகளிடையே தகராறு. பேருந்து புறப்பட்டு வேகமெடுத்த பின்னரும் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் தொடர்ந்துகொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில், இனி பேசிக்கொண்டிருப்பதால் பயன் இல்லை என்று நினைத்தார்களோ என்னவோ, இருவரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார்கள். எந்த நேரத்திலும் அடிதடியில் இறங்கும் அபாயம் நெருங்கிகொண்டிருந்தது.
முன்புறமாகப் பயணச்சீட்டுக் கொடுத்துக்கொண்டிருந்த நடத்துனருக்கும் இந்த இருவருக்கும் இடையிலும் கணிசமான இடவெளி இருந்தது. ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்பது போல் அவர் தன் காரியத்தில் கண்ணாக இருந்தார்.
பயணிகள் இந்த மோதலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் அடி, உதையில் இறங்குவதைக் காணும் ஆர்வம் அத்தனை பேர் முகங்களிலும் பளிச்சிட்டது. தள்ளுமுள்ளுவும் தொடர்ந்துகொண்டிருந்தது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ‘புஸ்ஸ்ஸ்ஸ்...’ என்ற பேரோசையுடன் காற்று வெளியேறுவது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
ஒட்டுநர் வேகம் குறைத்துப் பேருந்தை நிறுத்த, நடத்துநர் இறங்கிச்சென்று, சக்கரங்களை ஆராய்ந்து பார்த்து, பயணிகளுக்குக் கேட்கும்படியாக, “டயர் பஞ்சர். எல்லாரும் இறங்குங்க” என்று உரத்த குரலில் அறிவித்தார்.
இருக்கைத் தகராறில் ஈடுபட்டிருந்த இருவரும்கூட தள்ளுமுள்ளுவை நிறுத்தியதோடு, ஒருவரையொருவர் முறைத்தவாறு இருந்த இடத்திலிருந்து நகரத் தொடங்கினார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான், “கிளைமாக்ஸ் சினிமாக் காட்சியில் திடீர்னு கரண்ட் போன மாதிரி ஆயிடிச்சே” என்றேன் சற்றே தணிந்த குரலில்.
பயணிகள் அத்தனை பேருக்கும் பாம்புக் காது. நான் சொன்னதைச் செவிமடுத்து ஒருவர் மிச்சமில்லாமல் அத்தனைபேரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்; சிரித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது.....
என் நடு நெஞ்சில் அபாயச் சங்கு ஒலித்தது. ‘நீ சொன்னது தள்ளுமுள்ளுக்காரங்க காதிலும் விழுந்திருக்கும். அவங்க ரெண்டு பேரும் உன்னைச் சும்மா விடமாட்டாங்க. “நான் முன்னாள் கல்லூரிப் பேராசிரியன்; இந்நாள் உலகப் புகழ் வலைத்தள எழுத்தாளன்”[ஹி... ஹி... ஹி!!!] என்று எதைச் சொல்லியும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. முதல் ஆளாய்ப் பேருந்திலிருந்து இறங்கு. இறங்கி ஓடு... ஓடிடு’ என்றது என் உள்மனசு.
எப்படி இறங்கினேன், என்ன வேகத்தில் ஓடினேன் என்பதையெல்லாம் என்னால் அனுமானிக்க முடியவில்லை. அப்போதைக்கு, ஒரு வாடகைக் கார் பிடித்து என் பயணத்தைத் தொடர்ந்தேன்.
* * * * *
அடியேனின் ஆகச் சிறந்ததொரு[ஹி... ஹி... ஹி!!!] கதைத் தொகுப்பில் இடம்பெற்ற படைப்புகளில் இதுவும் ஒன்று!