எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 26 ஜூலை, 2025

“கடவுள் எங்கிருந்தாலும் வரவும்”... 001% கற்பனை கலந்த உண்மைக் கதை!

ய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உள்விளையாட்டு[+அரட்டை] அரங்கம்.

வெட்டிக் கதைகள் பேசிப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த கிழங்களில் ஒரு ‘கத்துக்குட்டி’, தனக்கான ஒரு சந்தேகத்தைச் சபையில் சமர்ப்பித்தது. அது.....

“சாமிக்குப் பூஜை செய்யும்போது அர்ச்சகர் மணி அடிக்கிறாரே, அது எதற்கு?”

உடனடியான பதில் இல்லை. எல்லோருமே தீவிரச் சிந்தனையில் ஈடுபட்டார்கள்.

மௌனம் கலைத்தார் நெற்றி நிறைய விபூதி பூசிய ஒரு கிழவர்; “பூஜை ஆரம்பம் ஆயிடிச்சி. எல்லோரும் சாமி தரிசனம் பண்ணுங்கன்னு தெரியப்படுத்துவதற்காக” என்றார்.

திருநீற்றுப் பட்டையின் நடுவே குங்குமப் பொட்டு வைத்திந்த ஒரு பழங்கிழம், “தும்மல், இருமல் போன்ற ஓசைகளோ, ஒழிக, தொலைஞ்சிபோ என்பனவாக அக்கம்பக்கத்தில் இருப்போர் சொல்லும் அமங்கல வார்த்தைகளோ சாமி மீதான பக்தர்களின் கவனத்தைச் சிதைக்காமலிருக்க” என்றது. 

ஒரு 'பொக்கை வாய்'க் கிழம், "பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்த நம் முன்னோர் செய்த ஏற்பாடு. காரணத்தை ஆராய்வது தப்பு” என்றது அழுத்தம் திருத்தமாக.

“இதெல்லாம் இல்லை. சிலையிலிருந்து வெளியேறி ஊர் சுற்றப்போன சாமியை, ‘பக்தர்கள் ரொம்ப நேரமா காத்திருக்காங்க, நீ எங்கிருந்தாலும் வந்துசேர்’ என்று எச்சரிக்கும் அவசர அழைப்பு” -இது அடியேன்.

சில முழுச் செவிடுகளைத் தவிர, அனைத்துக் கிழங்களும்[சங்கத்திற்குக் கிழவிகள் வருகை தராதது புரியாத புதிர்] ஒருங்கிணைந்து என்னை முறைத்ததுகள்.

அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து ஒரு மாதிரியாகச் சமாளித்தேன் நான்.

ஹி... ஹி... ஹி!!!