செவ்வாய், 19 ஜூன், 2018

'அது' கடவுளிடம் பேசுவதற்கு மட்டும்!!!

இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் மீது இந்தியையும், அனைத்திந்திய மக்கள் மீதும் சமற்கிருதத்தையும் வலிந்து திணிக்கும் முயற்சியில் நடுவணரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நடுவணரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, கேந்திர வித்தியாலயாபள்ளிகள், நவோதயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட நடுவணரசுப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு, 'சிடெட்' எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிபிஎஸ்இ ஆண்டுதோறும் இந்தத் தேர்வை நடத்திவருகிறது. இத்தேர்வில், மொழித்தாள் - 1இல் இதுவரை இடம்பெற்றிருந்த தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கப்பட்டு, ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் ஆகிய மூன்று மட்டுமே இடம்பெற்றிருக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் தகவல் வெளியானது.

'மொழித்தாள் -1 பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த 17 மொழிகளை மீண்டும் சேர்க்க வேண்டும். தவறினால், மிகப் பெரும் போராட்டம் நடைபெறும்' என்று 'பாமக' தலைவர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தி.மு.க. எம்.பி. கனிமொழியும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், 'மொழித்தாள் -1 தேர்வுப் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்['தி இந்து', 19.06.2018].

நடுவணரசு, இந்தச் சமற்கிருதத் திணிப்பு முயற்சியை விடாப்பிடியாகத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது. மக்களிடமிருந்து போதிய எதிர்ப்பு இல்லையெனில், கடவுள் மொழி எனப்படும் 'தேவ பாஷை'யாம் சமற்கிருதத்தை மக்கள் பாஷையாகவும் ஆக்கும் முயற்சியில் வெற்றி கண்டுவிடலாம் என்று கனவு காண்கிறது.

சில நூறு பேர்கூடப் பேசாத இந்த மொழியைத் திணிக்கும் எண்ணத்தை அறவே துடைத்தெறிந்து, ஆங்கிலம், இந்தி ஆகியவற்றிற்கு இணையாகத் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளையும் அது வளர்த்திட வேண்டும். 

முடிவாக நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....

சமற்கிருதத்தைக் கடவுள் மொழி என்கிறீர்கள். அதை மக்கள் மீது திணிக்கும் முயற்சியை முற்றிலுமாய்க் கைவிட்டு, கடவுளுடன்  நீங்கள் உரையாடுவதற்கு வேண்டுமானால் சமற்கிருதத்தைப் பயன்படுத்துங்கள். மறுப்பேதுமில்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




9 கருத்துகள்:

  1. மக்களுக்கு ஆக்கபூர்வமான செயல்களை செய்வதற்கு சிந்திக்காமல் அவசியமற்ற வேலைகளை செய்து நேரத்தை களைகிறது அரசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களின் நேரம் வீணாவது மட்டுமல்ல, மக்களுடைய நேரமும் வீணாகிறது.

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. இந்தியையும் சமசுகிருதத்தையும் மட்டுமே வளர்த்திடு‌ம் உச்சபட்ச வெறி அவர்களுக்கு!கடும் போராட்டம் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களின் வெறி தணியாவிட்டால் நிச்சயம் மக்கள் போராட்டத்தில் குதிப்பார்கள்.

      நீக்கு
  3. இப்போ அங்கு பல பக்கத்திலும் பலவிதப் பிரச்சனைகள் நடக்குது போல இருக்கே.. அது போதாதென்று பிக்பொஸ் வேற கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதோ கெட்டதோ,ஏதேதோ நடக்குது. நாமும் எதையாவது கிறுக்கட்டிருப்போம். பலன் கிடைக்குதோ இல்லையோ பொழுது போகுது.

      நன்றி அதிரா.

      நீக்கு
  4. மொழியைத் திணிக்கும் முயற்சியினைக் கடுமையாக எதிர்த்திடல் வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக உறுதியுடன் செயல்பட வேண்டும்.

      நன்றி நண்பர் ஜெயக்குமார்.

      நீக்கு