கதையின் முடிவை அனுமானிக்க முடிகிறது என்றாலும், கவிக்கோவின் இந்தச் சிறுகதையில், நிகழ்வுகளினூடே பின்னிப் பிணைந்து கிடக்கும் கவித்துவ வரிகள் படைப்பின் தரத்தை வெகுவாக உயர்த்தியிருக்கின்றன.
உங்களின் தேடலைத் தவிர்க்கும் வகையில், அவ்வகையான வரிகளுக்கு வண்ணம் சேர்த்திருக்கிறேன்.
எவ்வகையிலும் என் குறுக்கீடு இல்லை. நீட்சிக்கு அஞ்சி ஆங்காங்கே சிற்சில வரிகளை மட்டும் நீக்கி, குமுதத்தில்[04.07.2018] உள்ளவாறே பதிவு செய்திருக்கிறேன். குமுதத்திற்கு நன்றி.
புதிதாகக் கட்டப்பட்ட அந்தப் பல்பொருள் வணிக வளாகம், புதுப் பெண் போல் வண்ண விளக்குகளால் ஊதாரித்தனமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இன்னும் சிறிது நேரத்தில் அந்த அழகான வளாகக் கட்டிடம் வெடித்துச் சிதறப்போகிறது.
அந்தக் கட்டிடத்திற்கு வெடிகுண்டு வைத்தவன் எதிர்ப்புறம் பாதுகாப்பான தூரத்தில் ஒரு தேனீர்க் கடையில் அமர்ந்தவாறு அந்தக் கட்டிடத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
கண்காணித்த இவன் பரபரப்பாகக் காணப்பட்டான். இவனின் கண்கள் தூண்டிலில் சிக்கிய மீனைப் போல் சஞ்சலத்துடன் அசைந்து துடித்துக்கொண்டிருந்தன. இவனுக்கெதிரே தேனீர் வைக்கப்பட்டிருந்ததை இவன் மறந்திருந்தான்.
பார்வை தடுமாறிக் கோப்பையில் விழுந்தபோது இவன் கோப்பையைக் கையில் எடுத்தான்.
விரல்களின் நடுக்கத்தில் கோப்பை தேனீரோடு ஆடி ஒலியெழுப்பியது.
அந்த வணிக வளாகத்துக்குள் மனிதர்கள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தார்கள்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. மாலை நேரம். அதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால்தான் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது, சேதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக.
அங்கே மரணம் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்பது வாங்க வந்தவர்களுக்கோ விற்பவர்களுக்கோ தெரியாது.
தூக்கத்திலிருந்து திடீரென்று விழித்தது போல் காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது.
இவனுக்கிருந்த ஒரே அடையாளம் இவனின் பெயர் மட்டும்தான். அதுவும் ஒரு காலி பாட்டிலின் மேல் ஒட்டிய லேபுளைப் போல.
இவன் இவனுடைய பெற்றோருக்குப் பதினோராவது பிள்ளை. பிள்ளைகளைப் பெறுவதைத் தவிர வேறு எந்தப் பொறுப்பும் இவன் தந்தைக்கு இருந்ததாக இவன் அறிந்திருக்கவில்லை.
இவனின் வீட்டில் சாப்பிட எதுவும் இருக்காது. ஆனாலும், வறுமை இவனைத் தினம் தினம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
வீட்டைவிட்டு வெளியேறி, பசிக்காகத் திருடத் தொடங்கினான்.
ஒருமுறை ஒரு ரொட்டியைத் திருடிக்கொண்டு ஓடினான். கடைக்காரனும் இவன் பின்னால் ஓடி வந்தவர்களும் இவனைப் பிடித்துச் செம்மையாக உதைத்தார்கள்.
மனிதர்களை வெறுத்தான்; திருடினான்; குடித்தான்; சூதாடினான்; விபச்சார விடுதிகளுக்குச் சென்றான். மொத்தத்தில் திருத்த முடியாத ஒரு அச்சுப்பிழை ஆனான்.
ஒரு விபச்சார விடுதிக்குச் சென்றபோதுதான் அவளைச்[விபச்சாரி] சந்தித்தான். மனம் விட்டுப் பேசி, இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களை இணைத்தது காதல் அல்ல; தேவை.
இவர்களுக்கு ஒரு பெண் பிறந்தாள் நான்கு வயதுவரை நன்றாகத்தான் இருந்தாள். பின்னர், அடிக்கடி சோர்ந்து படுக்கத் தொடங்கினாள்.
மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான் அவளின் இதயத்தில் வால்வு பழுதாகியிருப்பது தெரிந்தது. சரி செய்ய மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் என்றார் மருத்துவர்.
மூன்று லட்சத்துக்கு இவன் எங்கே போவான்? அப்போதுதான் இவன் யாரென்றே அறியாத ஓர் அந்நியன் இவனைச் சந்தித்தான்; மூன்று லட்சம் தருவதாகச் சொன்னான்.
''நீ யார்? எனக்கு எதற்கு நீ மூன்று லட்சம் தரவேண்டும்?'' என்று இவன் கேட்டான்.
''முட்டாள். உனக்குப் பணம் வேண்டுமா? உன் கேள்விகளுக்குப் பதில் வேண்டுமா?'' என்றான் அவன்.
தான் செய்ய வேண்டியது என்ன என்று இவன் கேட்க, அவன் சொல்ல, இவன் முதலில் மறுத்துவிட்டான். மகள் மீதான பாசத்தால் பின்னர் ஒத்துக்கொண்டான்.
தெரு விளக்குகள் உற்சாகமின்றி எரிந்துகொண்டிருந்தன. எத்தனை விளக்குகள் எரிந்தென்ன, இருட்டை அழிக்க முடிவதில்லையே. இறுதியில் அதுதானே வெல்கிறது.
இவன் அடிக்கடி கடிகாரம் பார்த்தான். இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தன.
பள்ளிச் சிறுமிகள் சிலர் வளாகத்தில் நுழைந்துகொண்டிருந்தார்கள். 'என் மகளைக் காப்பாற்ற இவர்களை நான் கொல்ல வேண்டுமா? என் மகளைப் பார்க்கும்போதெல்லாம் சிறுமிகளின் நினைவு என்னைச் சித்ரவதை செய்யுமே' என்று எண்ணி மனம் நொந்தான்.
செத்துப்போயிருந்த இவனின் மனசாட்சி உயிர் பிழைத்து எழுந்தது.
இவனை வெடி வைக்கத் தூண்டியவனுடன் தொடர்பு கொண்டு, ''வைத்த வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய இருக்கிறேன்'' என்றான்.
''உன்னை நாங்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ அப்படிச் செய்தால் அடுத்த வினாடியே கூண்டோடு உன் குடும்பத்தை அழிப்போம்'' என்றான் அவன்.
இவனின் இதயத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதுபோல் அது அதி வேகமாகத் துடித்தது.
செய்வதறியாது எதிரே இருந்த வணிக வளாகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
புதுமணத் தம்பதியர் இருவர் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்கள். 'பாவம், முன்னுரை எழுதும்போதே முடிவுரையா?' என்று வருத்தப்பட்டான் இவன்.
உள்ளேயிருந்து ஒரு கர்ப்பிணி தன் கணவனுடன் வெளியே வந்துகொண்டிருந்தாள். வாழ்க்கையும் மரணமும் காலமெல்லாம் கண்ணாமூச்சி ஆடுவதாகத் தோன்றியது இவனுக்கு.
தொடர்ந்து வணிக வளாகத்தையே பார்த்துக்கொண்டிருந்த இவன் திடுக்கிட்டான். இவனுடைய மகளும் மனைவியும் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்கள்.
அவர்களின் பெயர்களைக் கூவியபடியே இவன் எழுந்து ஓடினான். இவன் அவர்களை நெருங்குவதற்குள் அது நடந்து முடிந்துவிட்டது.
========================================================================