வெள்ளி, 29 ஜூன், 2018

தங்க மீசையும் தனித் தமிழ்நாடும்!!

போராட்டம் நடத்திப் போலீசிடம் லத்தி அடி வாங்காமல், மறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு, தீவைப்பு அது இதுன்னு கலவரம் செய்து சிறையில் கம்பி எண்ணாமல் 'தனித் தமிழ்நாடு' பெறுவது எப்படி என்று நான் நீண்ட நாட்களாக யோசித்ததில் இன்றுதான் அதற்கொரு வழி பிறந்தது.

ரொம்ப ரொம்பச் சுளுவான வழி அது. கூடக்குறையப் பணம் செலவாகும்...அவ்வளவுதான்.

இந்த வழியை நான் கண்டுபிடித்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஆண்டவனின் அருளும் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

இன்று காலை வழக்கம்போல, 'தி இந்து[29.06.2018]' நாளிதழை வாசித்துக்கொண்டிருந்தபோது.....

#'ரூ. 1.37 கோடியில் வைர மூக்குத்தி காணிக்கை' என்னும் தலைப்பின் கீழ், 'தனித் தெலங்கானா மாநிலம் அமைந்தால், பல்வேறு கோயில்களுக்குத் தன் குடும்பத்துடன் நேரில் சென்று 'நேர்த்திக் கடன்' செலுத்துவதாக, தெலங்கானா 'ராஷ்ட்ரீய சமிதி' கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் வேண்டிக்கொண்டிருந்தார்.

தனித் தெலங்கானா அமைந்ததைத் தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி மதிப்பில் சாலிக்கிராம ஹாரத்தை சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு காணிக்கையாக வழங்கினார். திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு வைர மூக்குத்தியைக் காணிக்கையாகச் செலுத்தினார்.

இவை தவிர, வாரங்கல் பத்ரகாளி அம்மனுக்குத் தங்கக் கிரீடம், குருவி பகுதியில் உள்ள வீரபத்திர சாமிக்குத் தங்க மீசை போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தித் தன் நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.

விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மனுக்குப் பட்டு வஸ்திரங்களையும், ரூ 1.37 கோடி மதிப்பிலான வைர மூக்குத்தியையும் காணிக்கையாக வழங்கினார். மொத்தம் 11.290 கிராம் எடை கொண்ட இந்த வைர மூக்குத்தியில் விலை உயர்ந்த 57 வைரக் கற்களும், நீலம், கெம்பு போன்ற விலை உயர்ந்த கற்களும் பதிக்கப்பட்டுள்ளவாம்!#

இந்தச் செய்தியைப் படித்தவுடன், கத்தியின்றி ரத்தமின்றி வெகு சுலபமாகத் தனித் தமிழ்நாடு பெறுவதற்கான வழியை நான் கண்டறிந்தேன்.

சக்தி வாய்ந்த கடவுள்களுக்கான பட்டியலைத் தயாரித்தேன். அவர்களுள் அதி அபூர்வ சக்தி வாய்ந்த எங்கள் ஊர் 'தலைவெட்டி முனியப்பன்' சாமியைத் தேர்வு செய்தேன்; முனியப்பனுக்கு, ஏற்கனவே இருக்கும் 'மண்ணாலான கிடா மீசை'யைப் பெயர்த்து எடுத்துவிட்டு, தங்கத்தால் ஆன மீசையைப் பொருத்துவதாக நேர்ந்துகொண்டிருக்கிறேன்.

என்னுடைய இந்தக் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேறலாம் என்பதால் 'தங்க மீசை'க்கான பணத்தைத் திரட்ட முழு மூச்சுடன்  நன்கொடை வசூலில் இறங்கியுள்ளேன். உங்களின் உதவியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

பணமும் மனமும் உள்ளவர்கள் என் மின்னஞ்சலுக்குத் தகவல் அனுப்புங்கள். தொடர்பு கொள்கிறேன்.

நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------