திங்கள், 22 ஏப்ரல், 2019

''கடவுள் உண்டு... உண்டு... உண்டு'' என்போர் கவனத்திற்கு.....

நேற்றைய தினம்[21.04.2019], மத வெறியர்களின் மனிதாபமற்ற கொடூரத் தாக்குதலால், இலங்கை வாழ் மக்களில் 225 பேர் தம் இன்னுயிரைப் பறி கொடுத்ததும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதும் மனிதாபம் உள்ள எவரையும் மனம் பதற வைக்கும் நிகழ்வாகும்.

உலகெங்கிலும் உள்ள மக்கள் நலம் போற்றும் தலைவர்கள் பலரும் தத்தம் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
நாமும் நம் கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, கண்ணீர் மல்க மக்கள் முன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்.

'சிரச்சேதம் செய்யப்பட்டவர்கள், வெடிவைத்துச் சிதறடிக்கப்பட்டவர்கள், உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டவர்கள், மண்ணில் புதைக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள், ஆட்டு மந்தைகளாய்க் கடலுக்குள் கொட்டப்பட்டவர்கள் என்றிப்படி மத வெறியர்களால் உயிர் பறிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை வரலாற்று ரீதியாகக் கணக்கெடுத்தால், லட்சக்கணக்கில், அல்ல...அல்ல...கோடிக்கணக்கில் தேறும். இந்தப் பாதகச் செயலை எந்தவொரு கடவுளும்[குறிப்பிட்டுச் சொல்வது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும்] தடுத்திடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒரு நூறு ஆண்டுகளுக்கேனும்.....

மதம் வேண்டாம்; அவை உருவாகக் காரணமான கடவுள்களும் வேண்டாம்[தவிர்க்க இயலாதவர்கள் தத்தம் வீட்டுக்குள்ளேயே வழிபாடு நிகழ்த்தலாம்]. மனிதாபிமானத்திற்கு மட்டுமே முதலிடம் கொடுத்து வாழ்ந்திடப் பழகுவோம்; அவ்வாறே பிறரையும் வாழ்ந்திடத் தூண்டுவோம்; வாரிசுகளுக்குக் கற்பிப்போம்.'

ஆம். மனிதாபிமானம் மட்டுமே மனிதகுலத்தின் 'உயிர்மூச்சு' ஆகும்!
==================================================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக